சுடர் விட்ட மெழுகுவர்த்தி
நான் பணி செய்து வந்த மத்திய அரசு நிர்வாகத்தில், அரசாங்கத்திற்கு சொந்தமான வளாகத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி இயங்கிவந்தது. அந்த பள்ளியின் நிர்வாகம் சுதந்திரமானதே என்றாலும், எங்கள் நிர்வாகம் அந்தப் பள்ளியை கட்டுவதற்கு இலவசமாக இடம் கொடுத்ததாலும், தவிர வருடம் நான்கு முறை அந்த பள்ளிக்கு கல்வி மானியம் கொடுத்து வந்தபடியாலும், அந்தப் பள்ளியின் நிர்வாக குழு ஒன்றில் எங்கள் நிர்வாகத்தின் சார்பில் இரண்டு அதிகாரிகள் எப்போதும் இடம் பெற்றிருப்பார்கள். இதில், ஒரு உறுப்பினர் நிர்வாகக் குழுவின் தலைவராக செயல்படுபவர், இன்னொருவர் பள்ளியின் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை மேற்பார்வையிடுபவர்.
நான் எங்கள் நிர்வாகத்தின் சார்பில் அந்தக் குழுவின் நிதி உறுப்பினராக இரண்டு வருடங்கள் பணியாற்றினேன். நான் ஏற்கெனவே எங்கள் நிர்வாகத்தின் உள்துறை தணிக்கை பிரிவில் பணிசெய்து வந்த நிரந்தரமான அதிகாரி என்பதால், இது கவுரவ பதவிதான். சன்மானம் எதுவும் கிடையாது.
அப்போது, அந்தப் பள்ளியின் முதல்வராக இருந்தவர் மற்றவர்களிடம் அதிகம் பேசமாட்டார். என் இரு பிள்ளைகள் இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கையில், நான், இரண்டு மூன்று முறை இவரை சந்தித்திருக்கிறேன். பேசுவது குறைவு என்றாலும் பரவாயில்லை, இவர் புன்னகை செய்வது மிகவும் ஒரு அரிதான செயல். இதனாலோ என்னவோ இவர் பல வருடங்களாக அந்தப்பள்ளியின் முதல்வராகச் செயல்பட்டு வந்தார்.
ஆயினும் நான் பள்ளி நிர்வாகத்தின் நிதி உறுப்பினராக இருந்தபோது இவரை அவ்வப்போது சந்திக்கவேண்டியிருந்தது. அப்போதெல்லாம் இவர் என்னிடம் கொஞ்சம் முகமலர்ச்சியுடன் பழகினார். நான் அப்போது நினைத்துக்கொண்டேன் "தேவை என்று வரும்போது யாவையும் மாறிவிடும்".
அந்தப் பள்ளியின் துணை முதல்வர், திருமதி நளினி, ஒரு பெண் ஆசிரியை. இவர் ஆங்கிலப் பாடம் எடுப்பவர். பள்ளியின் ஒவ்வொரு விழாவையும் நடத்த இவர் மிகவும் உற்சாகத்துடன் உழைப்பார். அவரைப் பற்றி பள்ளியில் அறியாத மாணவர்களே இருக்கமுடியாது. ஏனெனில், அவர் வருடாவருடம் மாணவர்களை ஏதேனும் ஒரு புதிய வெளியூருக்கு கூட்டிச்சென்று வருவார். மாணவர்கள் பள்ளிப் பாடங்கள் மட்டுமின்றி வேறு புதிய விஷயங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது இவரது திடமான கொள்கை. விளையாட்டுகள், நீச்சல், மலையேறுதல், போட்டித் தேர்வுகளில் பங்குகொள்ளுதல், இது போன்ற விஷயங்களில் தனது பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வம் கொண்டு கற்கவேண்டும் என்று இவர் மிகவும் பாடுபடுவார். இந்தப் பள்ளியின் மாணவப்படையை (NCC) திருமதி நளினி தான் நிர்வகித்துவந்தார்.
இவர் மோப்பெட் (moped) வண்டியில்தான் பள்ளிக்கூடம் சென்று வருவார். வண்டியை மிகவும் வேகமாக ஒட்டிக்கொண்டு செல்வார். நான் பலமுறை என் அலுவலகத்திலிருந்து திரும்பி வருகையில், இவர் மின்னல் வேகத்தில் மோப்பெட் வண்டியில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். இவர் பேசும்விதம், பாடம் நடத்தும் விதம், காரியங்களைச் செய்வது எல்லாவற்றிலுமே ஒரு வேகம் இருக்கும். அதைக் கண்மூடித்தனமான வேகம் என்று கூறமுடியாது. அவருடைய ஆர்வமும் சக்தியும் சேர்ந்து அவரை, எந்த ஒருவித காரியத்தையும் சுறுசுறுப்புடன் வேகத்துடன் செய்ய வைக்கிறது என்றுதான் நான் நினைப்பேன். ஆயினும், அவர் மோப்பெடை ஓட்டும் வேகம் எனக்கு கொஞ்சம் அதிவேகமாகவே தெரிந்தது.
நான் ஒவ்வொரு முறையும் இந்த பள்ளிக்குச் சென்றுவரும்போது, நளினி ஆசிரியையின் நடவடிக்கைகளை கவனித்து, மனதில் மெச்சிக்கொள்வேன். மிகவும் சிறப்பாக இவர் மாணவர்களுக்கு ஆங்கிலப்பாடம் சொல்லிக்கொடுப்பார். ஒவ்வொரு மாணவ மாணவியையும் தட்டிக்கொடுத்து ஊக்கம் கொடுத்து படிக்கச் வைப்பார்.
அப்போதிருந்த பள்ளி முதல்வருக்கு அறுபது வயதாகிவிட்டதால் அவர் பதவி ஓய்வு அடைந்தார். திருமதி நளினி பள்ளி முதல்வராக நியமிக்கப்பட்டார். இதற்காக பள்ளியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என்னையும் ஒரு விருந்தினராக இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். நான் என் வழக்கமான பாணியில், பதவி ஓய்வு பெரும் பள்ளி முதல்வருக்கு, ஆங்கிலத்தில் ஒரு கவிதைபோன்ற படைப்பை அளித்தேன். அந்த நிகழ்ச்சியில் என்னை பேச அழைத்தபோது திருமதி நளினிக்கும், அவர் பள்ளி முதல்வராக பதவி தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒரு ஆங்கில வாழ்த்துமடலாக வாசித்தேன்.
நான் பேசிமுடித்து, என் இருக்கைக்கு சென்று அமர்ந்தபோது, எதிர்பார்க்காத விதமாக திருமதி நளினி என்னிடம் வந்து "சார், நீங்கள் என்னைப்பற்றி எழுதிய வாழ்த்துமடல் படிவத்தை எனக்குத் தரமுடியுமா?" கேட்டார். நான் "உங்களுக்காகத்தான் இந்த வாழ்த்து மடலை வரைந்தேன். உங்களுக்கில்லாமல் வேறு யாருக்குத் தருவேன்" என்று புன்னகையுடன் கூறிவிட்டு அந்த வாழ்த்துமடல் காகிதத்தை அவருக்கு கொடுத்தேன். அதை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.
அடுத்த மூன்று மாதங்கள் வரை இவர் பள்ளியைத் திறமையாக நிர்வாகம் செய்தார். மார்ச் 2020 இல் நம் நாட்டில் கரோனா தொத்துநோய் தலைவிரித்து ஆடத்தொடங்கியது. ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் பள்ளி விடுமுறை. அதன் பிறகு, ஜூன் மாதத்திலிருந்து நேரடிக்கல்வி ரத்து செய்யப்பட்டது. நானும் அந்த நேரத்தில் என் நிர்வாகத்திலிருந்து பணிஓய்வு பெற்றுவிட்டேன்.
ஜூலை 2020 இல் எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. திருமதி நளினி காலமாகிவிட்டார் என்ற நம்பமுடிடியாத அதிர்ச்சியான செய்தி. அவர் கேன்ஸர் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்கிற துயரமான செய்தி என்னை மிகவும் கலங்கவைத்தது. அப்போது அவருக்கு வயது ஐம்பது. இன்னும் பத்து ஆண்டுகள் அவர் அந்த பள்ளியின் முதல்வராக செயல்பட்டு பள்ளிக்கும், மாணவ மாணவியர்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்யமுடியாமல் இந்த உலகை விட்டுப் பிரிந்துவிட்டார்.
சில நாட்கள் கழித்து இவரைப்பற்றிய, பொதுச் சேவைக்காக இவர் செய்துவிட்டுச் சென்ற தியாகத்தை கேள்விப்பட்டேன். இறப்பது உறுதியானவுடனே இவர் "நான் இறந்த பின்னர், எனது உடலை நான் இதற்கு முன்பு ஒரு வருடம் பணி ஆற்றிய மருத்துவக்கல்விக்கு கொடுத்துவிடவேண்டும். என் உடல் மூலம், மருத்துவ மாணவர்கள் மருத்துவ முன்னேற்றத்திற்கு வேண்டிய சில விஷயங்களை கற்றால் அதுவே நான் இந்த கல்லூரிக்கு செய்யும் என் இறுதிச் சேவையாகும். சாத்தியமானவரையில் என் உடல் உறுப்புகளை கற்பதற்காக பயன்படுத்துங்கள். இல்லையென்றால் தேவைப்படும் நோயாளிகளுக்கு கொடுத்துவிடுங்கள்" என்று எழுதி வைத்துவிட்டார்.
தான் கல்வி கற்றுக்கொடுத்த பள்ளிக்கு, இருபத்திஐந்து வருடங்கள், தனது தன்னலமற்ற சேவையை வழங்கினார். உயிர் பிரிந்த பின்னரும், அவர் உடலை மருத்துவக்கல்லூரிக்கு தியாகம் செய்தார்.
திருமதி நளினி, ரத்த கேன்சர் (blood cancer) நோய்வாய்ப்பட்டு இறந்தது என்னை என்னென்னவோ சிந்திக்கவைத்தது. இவ்வளவு ஆரோக்கியமான, உடல் நலத்தின்மீது அக்கறை கொண்ட ஒருவருக்கு இப்படிப்பட்ட ஒரு கொடிய நோயா? இப்படி ஒரு அகால மரணமா? இவருடைய குடும்பம் இவரை இழந்து எவ்வாறு வாழப்போகிறது? இவருடைய கணவர் எப்படி இவர் பிரிவை தாங்கிக்கொள்வார்? இவருடைய பிள்ளைகள் எத்தனை துயரம் கொள்ளும், மனம் துடித்து வாடும்? இந்த பிள்ளைகள் வாழ்வில் திடமாக காலூன்றினார்களா இல்லையா?
அதே நேரத்தில் என் மனம், இந்த ஆசிரியை மறைந்து போவதற்கு எழு மாதத்திற்கு முன்பு இந்த உலகைவிட்டுச் சென்ற என் பெரிய சகோதரனை ஒரு கணம் நினைத்துப் பார்த்தது. அவன் இறந்ததும் கேன்சர் நோயினால்தான். ஆனால், அதில் கொடுமை என்னவெனில், அவன் எப்படிப்பட்ட கேன்சர் காரணமாக இறந்தான் என்பதை எந்த மருத்துவராலும், இறுதிவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. என்னை விட ஆறு வயது பெரியவனாக இருப்பினும் என்னைவிட மிகவும் ஆரோகியமான அவன் உடல் நலத்தை அவன் பேணிவந்தான். அவனும் நானும் சேர்ந்து அவ்வப்போது காலாற நடப்போம். அப்போதெல்லாம் அவன் என்னைவிட மிகவும் வேகமாக விறுவிறுவென்று நடந்துசெல்வான்.
உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தான். தியானம் யோகா போன்றவைகளைச் செய்துவந்தான். ஆன்மீகத்தில் அவன் மிகவும் முன்னேறிக்கொண்டு சென்றிருந்தான். அவனுக்கு நண்பர்கள் பலர் இருந்தார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அறுபத்திமூன்று வயதிலேயே என் சகோதரன், என்னவென்று கண்டுபிடிக்க இயலாத விசித்திரமான ஒரு கேன்சர் வியாதியுடன் பத்து மாதங்கள் போராடிவிட்டு, இவ்வுலகத்தின் பிடியிலிருந்து விடுபட்டுச்சென்றான்.
திருவண்ணாமலை ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்களும் கேன்சர் வியாதியால்தான் இறந்தார்கள். மிகவும் நல்லவர்கள் என்றால் கேன்சர் வியாதி வந்துதான் இறப்பார்களோ?