என் அன்புள்ள அப்பா
என் அன்புள்ள அப்பா!
உன் கைப்பிடித்து நடந்த வரையில்
கணக்கில் வைத்து கொள்ளவில்லை
நான் கடந்து வந்த தூரத்தை
எதிர்பாரா தருணத்தில் என் கைகளை உதறிவிட்டாய்
அந்த இடத்தில் நின்று திரும்பி பார்க்கிறேன்
என்ன இது?
இத்தனை தூரத்தையா
எளிதில் கடந்திருக்கிறேன் நான்
வழிநெடுகிலும் எத்தனை எத்தனை முட்கள்
என்னை விழ வைத்திருக்க கூடிய பள்ளங்கள்
நாம் முன்னேற கூடாதென்று
எறியப்பட்ட கற்கள்
அத்தனையும் நான் உணராமல் இருந்தது எப்படியோ!
இன்று சற்று முன்னேறி நிற்கையில்
அதை காணாமல் விடுத்து
நீ உறங்க சென்றது ஏனோ?
மீளா உறக்கத்தில் நீ விழுந்து
நிதமும் என் உறக்கத்தை களைத்து விட்டாய்
மரணம் இறப்பவருக்கு மட்டுமே
எளிதாகி விடுகிறது,
இருப்பவருக்கு அல்ல
சுயநலவாதி என்று என்னை
எத்தனையோ பேர் அழைத்ததுண்டு
ஒரு போதும் அதனை ஏற்காத நான்,
இன்று தான் உணர்கிறேன்
உன் விடயத்தில் எத்தனை சுயநலமாய்
இருந்துவிட்டேன் என்பதை
பல வருடங்கள் கழித்து
நான் எழுதிய கவிதை இது,
நீ சென்ற முகவரி தெரியாததால்
பத்திரமாய் இருக்கட்டும் என்னிடத்தில்,
என்றோ ஒரு நாள்
உன்னிடம் வந்து சேரும் இது, என்னோடு!