மினர்வா

Writing - the act of one person giving a piece of their soul to another.

J. Spredemann.

*************

வணக்கம்.

நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன் என்றால் அது இன்னும் நான் எழுதி கொண்டிருக்கும் என்னை எழுத வைத்து கொண்டிருக்கும் “மினர்வா”வை பற்றியதாகவே இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள நாம் அடுத்த இலக்கை நோக்கி இணைந்து பயணப்படுகிறோம் என்று ஆகிவிடும்.

நான் விரும்புவதும் அதுவே.

மாசற்ற எனது அன்பிற்குரிய வாசக அன்பர்களுக்கும் சலிப்பறியாத fake id களுக்கும் இனிய மாலை வணக்கம்.

மினர்வா நான் எழுத திட்டமிட்டு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பருவக்குயில்… நாவலை முடித்தபின் ஒரு வெறுமையை உணர்ந்தேன்.

வாழ்விலும் சரி. வாசிப்பிலும் சரி. ஆனால் அந்த நாவல் எழுதிய காலத்தில் எனக்கு திளைப்பை கொடுத்தது.

ஒரு எழுத்தாளன் தன் சங்கடமான பதிப்பை எழுதி வாசகர் அதில் இன்னும் தர்மசங்கடமான நிலைக்கு சென்றால் அது எழுத்தின் வெற்றியை குறிக்கும் என்று அதை கடந்து சென்று விட்டேன்.

இருந்தபோதிலும் அந்த நாட்களில் அதன் பின் வந்த காலங்களில் சொந்த வாழ்க்கையில் கயமை மனம் கொண்ட ஒரு உறவின் மூலம் வந்து சேர்ந்த பெரிய தேக்கமும் அவஸ்தையும் என்னை இடையற்று நிரடிக்கொண்டே இருந்தது.

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். ஒரு மனதை அடக்க இன்னொரு மனம் வேண்டுமென்றால் அதற்கு வாசிப்பை விடவும் வேறு மார்க்கமில்லை என்பது என் நிலைத்த நிலைப்பாடு.

ஆகவே, உடல்நிலை குறித்த எவ்வித அக்கறையும் இல்லாது நான் மினர்வா நாவலுக்கு உழைக்க தொடங்கினேன்.

மினர்வாவின் கரு தோன்றி தோன்றி மறைந்து கொண்டே இருந்தது. அவள் பகலில் ஒரு மொழியாகவும் இரவில் ஒரு மொழியாகவும் காற்றும் மழையுமாய் மாறி மாறி ஒளிர்ந்து கொண்டிருக்க நான் அதை வெளிப்படுத்தும் சொல்லும் அர்த்தமும் இன்றி திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தேன்.

மினர்வா ஒரு நாவலாக நினைத்து எழுதப்போகிறோம் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.

ஆனால் நாவல் என்ற வட்டத்தில் அது நின்று விடக்கூடாது என்றும் அடிக்கடி தோன்றியது.

எத்தனை விதமான இலக்கிய வடிவம் ஒரு சிறுகதையில் அல்லது நாவலில் இருக்கக்கூடும் என்பது எல்லாம் சில புத்தகங்களை வாசிக்க வாசிக்க எனக்கு முன்பை விடவும் ஏராளமாக சிலவும் புரிய தொடங்கின.

இப்போது ஏராளமான சுதந்திரங்களுடன் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் பெரும் சுமையை இறகால் எடுத்து சொல்வதுபோல் நம் சமகால தொழில்நுட்ப ஊழியில் எழுத்தும் வாசிப்பும் புதிய தடங்களில் விவரிக்க முடியாத கடுமையும் இளமையும் எளிமையும் தீவிரமும் கொண்டு பயணிப்பதை காட்டியது. நம் தமிழ் கிளாசிக்ஸ் படைப்புகள் உள்பட. அவை பெரும்பாலும் தழுவல்களாக இருந்த போதிலும்…

ஒரு மரபு சார்ந்த நாவலுக்கென்று இருக்கும் வடிவம், உத்தி, கோட்பாடு, அமைப்பு, திட்டம், உழைப்பு இவைகளை தாண்டி இன்னும் ஏதேனும் இருக்குமா என்பதை அறிய இன்னும் இன்னும் படிப்பதற்கான தேவையும் உருவானது.

பின் நவீனத்துவம் அதை நிறைவு செய்யும் என்று தோன்றியது.

அதாவது, அனைத்தையும் நிராகரித்து பின் ஒன்றை உருவாக்குவது. இப்படி சொல்வதால் இதுவே பின் நவீன கோட்பாடு என்று எடுத்துக்கொள்ள கூடாது.

மினர்வா ஒரு கட்டுரையில் இருந்து நாவலாகவும் அங்கிருந்து வெவ்வேறு சிறுகதைகளாகவும் விழுது விடுகிறாள் என்பதை முதலில் வரைவாக எடுத்து எழுதி கொண்டேன்.

எழுதப்பட்ட வரைவுகள் ஒன்று இரண்டு என்று இருபதுக்கும் பின் ஐம்பதுக்கும் மேலாக செல்ல கதையின் மனிதர்கள் அங்கும் இங்குமாக சிதறி விழவும் தம் காத்திரத்தன்மையை இழக்கவும் தொடங்கி விட்டனர்.

ஒருபுறம் பெருமளவில் குறிப்புகள் சேர்ந்து கொண்டே இருக்க மறுபுறம் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களை தாங்களே பிரதி எடுப்பதும் அழித்து கொள்வதுமாக இருக்க கதை என்பதும் கரு என்பதும் தம்முள் முரண்பாடுகள் கொண்டு சிக்கலாகி ஒரு இடத்தில் திடமாக இறுகி நின்று விட்டனர்.

வெறும் கருத்துக்களோடு கதையும் முழுக்க ஸ்தம்பித்து விட்டது.

ஆனால் எழுத்தை குறித்து தொடர்ந்து வாசிப்பில் இருந்து வந்ததால் வேறு உலகம் திறந்து கொண்டு அங்கே சில நாட்கள் வாழ தொடங்கினேன்.

அங்கே புரிந்து கொண்டதில் முதன்மையானது என்னவென்றால்…

ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்குரிய ஆதர்ச எழுத்தாளரை கொண்டு இருப்பதும் அவரை வைத்துக்கொண்டு தன் சொந்த பாணியில் எழுதுவதும் இயற்கையானதுதான்.

அவர்களே தன்னை விடவும் தன் ஆதர்ச எழுத்தாளரை விடவும் மேன்மையான ஒரு பாத்திரத்தை மனதில் வாங்கி அதில் தங்களை நிறுவி எழுதுவதும் உண்டு.

அப்படி பல கதைகள், நாவல்கள் தமிழ் உள்பட உலக மொழிகளில் ஏராளமான அளவில் வந்து உள்ளன.

புத்தகம், வாசகர், சிறுகதை, நாவல், கோட்பாடுகள், தத்துவம், அரசியல், சமூகம் என்றெல்லாம் விரிந்த தளத்தில் புதிய புதிய உளவியல் பார்வைகளோடு ஒரு எழுத்தாளன் என்பவனும் அவனுக்கு போட்டியாக வாசகன் என்பவனும் நேர்கோடு, கட்டளைகள், உத்திகள், சமயோசிதம் என்றெல்லாம் இல்லாமல் அதீத வேகத்தில் பயணம் கொள்ளும் தகவல் தொழில்நுட்ப தலைமுறையில் நாம் எங்கே மோதி விழுகிறோம், எப்படி இயங்கி கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொரு நாளும் நமக்குள் நாமே கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி.

மினர்வா அதை தேடுகிறாள்.

அப்படி தேட துவங்கும் ஒருவளோடு இணைந்து விட்டால் பின், தேடுவது மினர்வாவாக மட்டுமே இருக்க வேண்டும் அல்லது மினர்வாதான் தேட வேண்டும் என அவசியம் இல்லையே?

இங்கு நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.

மரபு வாசிப்பில் திளைத்து ஊறிப்போன நெஞ்சங்கள் இதை வாசிக்கும்போது சலிப்பை தவிர வேறு எதுவும் கிடைக்க போவது இல்லை.

அவர்கள் இதை வாசிப்பதில் இருந்து விலகி விடலாம்.

பாலியல், பேய் பிடித்தல், திகில், மர்மம், சஸ்பென்ஸ், குடும்ப அங்கலாய்ப்புகள் என்பது அறவே இல்லை.

அம்மாதிரி மட்டும் வாசிப்பு ஆவல் கொண்டவர்கள் விலகி விடலாம்.

எத்தனை எளிமையாக எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அத்தனை அளவுக்கு அதன் பாகங்கள் அதிகரித்து செல்வதால் வாசிப்பதில் பொறுமை அற்றவர்கள் விலகி விடலாம்.

பொழுதுபோக்கு மற்றும் மேம்போக்கான வாசகர்களுக்கு இங்கே எந்த வாய்ப்பும் இல்லை என்பதால் அவர்களும் விலகி விடலாம்.

பின் யார்தான் வாசிக்க முடியும் என்று கேட்டால் மேலே கூறியவர்களை தவிர மற்றவர்கள் வாசிக்க முடியும் என்று தோன்றுகிறது.

தன் வாழ்க்கையை தனக்காக வாழ விரும்பும் வாசகர்கள் படிக்க முடியும்.

ஏதேனும் தேடல் கொண்டவர்கள் அது பற்றிய ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்க முடியும்.

புதிது புதிதாக கற்று கொள்ள விரும்புபவர்கள் படிக்கலாம்.

எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தோழமைகள் இதை படிக்க உற்சாகம் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

அதுவும் தேர்ந்தெடுத்து வாசிக்கும் இயல்புள்ள, நாட்டமுள்ள, தேவையுள்ள வாசகர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இதன் இறுதிப்பகுதி வரையில் தொடர்ந்து மூன்று நபர்கள் வாசித்தாலும் அதுவே போதும் என்றே ஆழ்மனம் கணக்கிட்டு சொல்கிறது.

இந்த நாவலை முதலில் கட்டுரை பகுதியில் சேர்த்து விடலாம் என்று நான் நினைத்தாலும் நாவல்தான் சரியான புள்ளி என்பதை பிரதிகளை சீர் செய்து எழுதும்போது உணர்ந்து கொண்டேன்.

நீங்களும் அப்படி அதை வாசிக்கும் போது கணித்தால் சரியான பாதையில் செல்கிறது என்று கொள்ள முடியும்.

நாவலை கோடிட்டு காட்டவும் அதில் கிளர்ச்சி தரும் பகுதிகளை எடுத்து போடவும் பெரிதாக எதுவுமில்லை என்றாலும் தொடர்ந்து வாசித்து வர, ஏதோ ஒரு தருணத்தில் அது ஏதோ ஒரு உதவியை உங்களுக்கு நிச்சயமாக செய்யும் என்ற அளவுக்கு உழைப்பை கொடுத்து இருக்கிறேன்.

சிலருக்கு ஆச்சர்யங்களை கொடுக்கும் அதே நேரத்தில் பலருக்கு சமாதானம் சொல்லிக்கொள்ள முடியாத அலுப்பையும் கொடுக்கக்கூடிய ஒரு பிரதியாகவே மினர்வா இருக்கலாம். இது இயல்புதான் என்பதை நான் ஏற்று கொள்கிறேன்.

எப்போதும் விமரிசனத்துக்கு பதில் கொடுக்காமல் தவிர்த்து வந்த நான் இம்முறை மனதுக்கு நிறைவை தரும் கேள்விகளுக்கு பதில் கொடுக்க ஆவலாக உள்ளேன்.

இதை கர்வமாக சொல்லவில்லை. உங்கள் கேள்விகள் எனக்கு அடுத்த தேடலுக்கான தெம்பை கொடுக்க வேண்டும் என்ற ஆவல்தான்.

வழக்கம்போல் உங்கள் அன்புக்கு மிக்க நன்றிகள்.

மிக்க அன்புடன்
ஸ்பரிசன்.

வெயில் மிகுந்த மாலையில்.

திருவனந்தபுரத்திலிருந்து.

எழுதியவர் : ஸ்பரிசன் (10-Aug-23, 1:44 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 42

மேலே