நான் நன்றாகத்தான் இருக்கிறேன்

நான் நன்றாகத்தான் இருக்கிறேன்
என்பதை ஒவ்வொரு நொடியும்
எனக்கு நானே
நிரூபித்துக் கொண்டிருக்கிறேன்..
என் மகிழ்ச்சியின்மீது
அதீதமாக கவனம் செலுத்த
ஆரம்பித்துவிட்டேன் - காரணம்
என்னைப்பற்றி அத்தனை
நுணுக்கங்களும் தெரிந்த உனக்கு
என் சிரிப்பிற்கு பின்னால்
சில்லாகிக்கிடக்கும்
சில ரகசியங்கள்
தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக..
நான் நன்றாகத்தான் இருக்கிறேன்
எதிர்பார்த்த விஷயங்கள்தான்
ஆனாலும்
எதிர்பாராத சமயத்தில்
நடப்பதாலோ என்னவோ
அதை அதிர்ச்சியாகவே
இந்த மனம் எடுத்துக்கொள்கிறது..
அந்த தீடீர் அதிர்வலைகள்
இதயத்தைத் தாண்டி
உடலின்‌ ஒவ்வொரு
செல்களையும்‌ அதிரவைக்கின்றன..
நான் நன்றாகத்தான் இருக்கிறேன்..
உன் வாழ்க்கை வேறு திசையில்
நகர ஆரம்பித்துவிட்டது..
சில நாட்களோ அல்லது
சில மாதங்களோ - நான்
உனக்கு முற்றிலும் அந்நியமாகிவிடுவேன்..
பிரதிமையாக வரும் உறவு
உன்னை நிச்சயம் மாற்றிவிடும்..
நான் நன்றாகத்தான் இருக்கிறேன்
அடுக்கி வைத்த புத்தகங்கள் போல
உன் மனதின் அடிமட்டத்தில்
நான் படிந்திருப்பேன்..
உன் கடந்தகாலத்தில்
இருந்த பலரில் நானும்
ஒரு அங்கமாக மாறியிருப்பேன்..
தனித்துவம் எல்லாம் தற்காலிகம் தான்
நிகழ்காலம் நிலைமையை
முற்றிலும் மாற்றியிருக்கும்..
சற்று கால‌ இடைவேளையில் - உன்
மனதிலிருந்து முற்றிலும் பறந்துபோயிருப்பேன்..
நான் நன்றாகத்தான் இருக்கிறேன்..

எழுதியவர் : கீர்த்தி (17-Aug-23, 10:12 pm)
சேர்த்தது : Keerthana Velayutham
பார்வை : 100

மேலே