யார் அந்த தாய்மார்கள்
யார் அந்த தாய்மார்கள்?
(கதையின் கரு மட்டும் “கார்த்திகா ராஜ்குமாரின் சிறு கதை ஒன்றில் எடுத்தது. ராஜராஜன் பதிப்பகம், சென்னை-7)
கிட்டத்தட்ட முப்பது, நாற்பது பேர்களால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தோம். நல்ல அடர்ந்த காடு, எப்படி வந்தார்கள் என்றே தெரியவில்லை, நாங்கள் சென்று கொண்டிருந்த ஜீப்பை சுற்றி வளைத்து நின்று கொண்டார்கள். ஒவ்வொருவரின் கையிலும் கருமை நிறத்துடன் நீண்ட குழாயை முனையாக நீட்டியபடி துப்பாக்கிகள் எங்கள் உருவங்களுக்கு நேராய் பிடிக்கப்பட்டிருந்தது.
எங்கள் பாதுகாப்புக்காக முன்னும் பின்னும் வந்து கொண்டிருந்த ஜீப்பில் இருந்த இராணுவ வீரர்கள் கண் மூடி திறப்பதற்குள் இவர்களால் சுடப்பட்டு அப்படியே வண்டிக்குள் கவிழ்ந்து கிடந்தார்கள்.
நாங்கள் ஆறு பேர் முன்னும் பின்னும் வரிசையில் மூன்று பேர்களாக உட்கார்ந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டிருந்தது. ஓட்டுநரின் பின் பக்கமாக எங்களை பார்த்தபடி ஒற்றை இருக்கை, அதில் எங்களுக்கு இந்த காட்டை பற்றி ஆங்கிலத்தில் எடுத்து சொல்ல மொழி பெயர்ப்பாளர். முன் இருக்கையில் ஓட்டுநர்.
எங்களது ஜீப் மட்டும் அப்படியே நின்று கொண்டிருந்தது. ஜீப் டிரைவர் கையை மேலே தூக்கியபடி அவர்கள் மொழியில் கத்தி பே அவர்களின் தலைவன் போலிருந்தவனிடம் பேசிக்கொண்டிருந்தான். எங்களுக்கு புரியவில்லை என்றாலும் அவன் “என்னை சுட்டு விடாதீர்கள்” என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. ஏறக்குறைய நாங்களும் அந்த நிலையில்தான் இருந்தோம். ஆனால் மனதுக்குள் நாம் இந்த நாட்டுக்கு வந்துள்ள விருந்தாளிகள்தானே, நம்மை என்ன செய்து விடப்போகிறார்கள்? என்றும் ஒரு நம்பிக்கை இருந்தது. அதுவும் கொஞ்ச நேரத்தில் காணாமல் போனது, அவர்களின் தலைவன் போலிருந்தவன் சொன்ன வார்த்தையால்..!
ஓட்டுநரிடம் அவர்களின் தலைவனை போலிருந்தவன், ஏதோ சொல்ல அவன் மொழி பெயர்ப்பாளனை சுட்டி காட்டினான். அவன் அலறி அடித்து இறங்கி ஓடி வந்தவன் அவர்களின் மொழியில் அழுது புலம்பினான். அவன் முகத்துக்கு நேராக துப்பாக்கியை வைத்த தலைவன் அவர்கள் மொழியில் ஏதோ சொன்னான். தலையாட்டிக்கொண்டு எங்கள் ஜீப் அருகே வந்தவன், உங்களை இவங்க கைது பண்ணி கூட்டிட்டு போகறாங்களாம். நீங்க எதுவும் சொல்லாம அவங்க பின்னாடி வரணுமாம். ஆங்கிலத்தில் சொன்னான்.
என் அருகில் உட்கார்ந்திருந்தவர் சீன நாட்டை சேர்ந்த லீ பெங், ஓவியர், ஆங்கிலத்தில் அவனிடம் “நாங்கள் கலைஞர்கள்” எங்களை கெளரவிக்க வர சொல்லியிருந்தது உங்கள் நாடு, எங்களை வர சொல்லிவிட்டு இப்படி செய்வது என்ன நியாயம்?
மொழி பெயர்ப்பாளன் அவர் சொன்னதை அப்படியே அவர்கள் தலைவனிடம் சென்று அவர்கள் மொழியில் சொன்னான்.
அவன் கோபமாக சட்டென எங்களை நோக்கி துப்பாக்கியை காட்டி வேகமாக பேசினான். அவன் பேசி முடித்ததும், மொழி பெயர்ப்பாளன் நேராக எங்களிடம் வந்தவன், உங்களை அழைத்த அரசாங்கம் எங்களுக்கு எதிரி. அதனால் அவர்கள் உங்களை அழைத்ததை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இங்கு நான் சொல்வதுதான் சட்டம், மீறி பேசினால் உங்கள் ஆறு பேரையும் சுட்டு போட்டு உடலை உங்களை அழைத்த அரசாங்க அலுவலக வாசலில் போட்டுவிட்டு போய்விடுவேன். சம்மதா? இதை அவன் ஆங்கிலத்தில் சொன்னதும் எங்கள் உடம்பு அப்படியே நடுங்கியது. ஏதோ சொல்ல வந்த லீ பெங்க்கை” அமைதி படுத்திய மலேசியாவை சேர்ந்த “சாங்க்” ப்ளீஸ் வேற எதுவும் பேச வேண்டாம், அவங்க என்ன செய்யறாங்கன்னு பார்ப்போம்’ முணூமுணுப்பாய் சொல்லவும் அமைதியானார் லீ பெங்க். சாங்க “ஓகே” நாங்க உங்களுக்கு கட்டுபடறோமுன்னு சொல்லிடுங்க.
“அப்பாடி” என்னும் முகபாவனையை காட்டிய மொழி பெயர்ப்பாளன் தலைவனிடத்தில் நெருங்கி அவர்கள் மொழியில் பேசினான். அதன்பிறகு எங்கள் ஆறு பேரிடமிருந்த செல்போன்களை பறித்து வைத்து கொண்டனர். தலைவனின் முக பாவம் சுபாவ நிலைக்கு மாறியது. மீண்டும் ஏதோ சொன்னான்.
மொழி பெயர்ப்பாளன் எங்கள் அருகில் வந்தவன் “அவர்கள் எங்களின் பேச்சை கேட்டு நடந்தால் உங்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை” சரி என்று தலையசைத்தோம் வேறு வழி..?
நாங்கள் ஆறு பேரும் ஆசிய நாட்டை சேர்ந்துவர்கள் ஒவ்வொருவரும் ஒரு துறையில் ஓரளவுக்கு பெயரும் புகழும் பெற்றிருந்தவர்கள் சீனாவை சேர்ந்த லீ பெங்க் ஓவியராகவும், மலேசியாவை சேர்ந்த சாங்க் மேடை நாடகராகவும் நான் இந்தியாவை சேர்ந்த ஒப்பனை கலைஞனாகவும், இலங்கையை சேர்ந்த ரத்னாயகா மிருதங்க இசைகலைஞனாகவும், சிங்கப்பூரை சேர்ந்த சிவபாலன் சிறந்த நாட்டுப்புற பாடகராகவும்,பாகிஸ்தானை சேர்ந்த அஸ்ஸன் பாஷா சிறந்த கவிஞராகவும் செயல்பட்டு கொண்டிருந்தோம் அவரவர்கள் நாட்டில்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாங்கோ அரசு கலாச்சார பரிமாற்றங்கள் என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எங்களுக்கு அழைப்பு அனுப்பி வர சொல்லியிருந்தது. நேராக அவரவர் நாட்டிலிருந்து இந்த நாட்டிலிருந்து தொலைதூரமிருந்த பன்னாட்டு விமான நிலையத்தில் நாங்கள் வந்து இறங்கி கொள்ள வேண்டும். அங்கிருந்து ஒரு ஹெலிகாப்டர் வாடகைக்கு அவர்கள் ஏற்பாடு செய்து எங்களை அழைத்து கொண்டு அவர்கள் நாட்டுக்கு கூட்டி சென்றார்கள். அவர்கள் நாட்டின் விமான நிலையங்களோ விமான ஓடு தளங்களோ இல்லை என்பது தெரிந்தது. அப்படி பிரயாணம் செய்து நேற்று மாலைதான் நாங்கள் இங்கு வந்தோம். வந்தவர்களை அழைத்து கொண்டு அங்கிருந்த பெரிய ஓட்டலுக்கு அழைத்து சென்று எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் தங்க வைத்த நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நாளை மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் கலாச்சார விழாவில் நீங்கள் கலந்து கொண்டால் போதும், அது வரை உங்களுக்கு பொழுதை கழிக்க நாங்கள் நாளை காலையில் எங்கள் நாட்டின் சிறப்பான காடு வளங்களை பார்வையிட அழைத்து செல்லுகிறோம். இரவு நன்கு உறங்கி ஓய்வெடுங்கள். காலையில் சந்திப்போம் என்று விடை பெற்று சென்றார்கள்.
இரவு அந்த ஓட்டலிலேயே சாப்பிட்டபடி நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டோம். கிட்டத்தட்ட நள்ளிரவு வரை பேசி கழித்தவர்கள் அதன் பின் உறங்க சென்றோம். காலை எழுந்து தயாராகி வெளியே வந்து நின்று கொண்டோம். கையில் எதுவும் எடுத்து கொள்ளவில்லை. என்ன எடுத்து செல்வது என்று புரியாதாதால், அவரவர்கள் செல்போன்களை மட்டும் எடுத்து கொண்டோம். ஒன்பது மணி அளவில் எங்களை ஏற்றி செல்ல பாதுகாவலர்கள் ஏற்பாட்டுடன் ஜீப் ஒன்று நாங்கள் தங்கியிருந்த ஓட்டலின் முன் வந்து நின்றது.
“சாங்கோ” நாட்டில் காட்டின் வள அமைப்பு எங்களை உண்மையிலேயே வியப்பிலாழ்த்தியது. நகரத்தின் அமைப்பே காட்டுக்குள் இருப்பது மாதிரியாகத்தான் இருந்தது ஒவ்வொரு கட்டிடத்தை சுற்றி மரங்கள்தான். நகரை விட்டு ஐந்தாறு கிலோ மீட்டர் தாண்டியதும் அடர்ந்த காடுகளாகத்தான் காணப்பட்டது. ஒவ்வொன்றாய் இரசித்து இரசித்து பார்த்து வந்து கொண்டிருந்த பொழுதுதான் இப்படி ஒரு சிக்கல். பாவம் எங்களுக்காக உயிர் விட்ட இந்த பாதுகாவலர்கள்..! அவர்களுக்கு என்ன தெரியும்? எங்களால் அவர்களுக்கு இப்படி ஒரு மரணம் வரும் என்று.
அவர்கள் எங்களை அழைத்து சென்ற பகுதி இன்னும் அடர்ந்த காடாகத்தான் இருந்தது. நிறைய வீடுகள், வாசலில் நின்றபடி மக்கள் எங்களை வேடிக்கை பார்த்தார்கள்.அனைவரும் எங்களை ஏதோ ஒரு பிராணியை பார்ப்பது போல பார்த்தார்களே அன்றி எந்த வித முக மாற்றமில்லாமல் இறுகிய நிலையில்தான் இருந்தது. அவர்களின் கண்களில் ஒரு வெறுமை தெரிந்தது.
எங்கள் முன்னால் சென்று கொண்டிருந்த ஜீப்பில், நின்றபடி சென்று கொண்டிருந்த தலைவனுக்கு அவர்கள் மரியாதையை தெரிவிக்கும் சமிக்கையாக தலையை தாழ்த்தி நின்றதையும் பார்த்தபடியே சென்று கொண்டிருந்தோம்.
எங்களை தங்க வைத்த அறை விசாலமாகத்தான் இருந்தது என்றாலும் சுற்றி வர துப்பாக்கியை வைத்தபடி மொடமொடப்பான பச்சைநிறத்தில் ஒரு உடுப்பை போட்டிருந்தபடி அவர்கள் மொழியில் கத்திக்கொண்டும், பேசிக்கொண்டும் ஆட்கள் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தது எரிச்சலையும் விரக்தியையும் கொடுத்தது. நாங்கள் கூடி பேசினாலும் அவர்கள் எங்களையே உற்று பார்த்துக்கொண்டு இருந்தார்கள். செல்போங்கலும் கையில் இல்லாதாதல் பொழுதை கழிப்பதே சிரமமாக இருந்தது.
கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அதிலேயே அடைபட்டு கிடந்தோம். அவ்வப்போது அந்த மொழி பெயர்ப்பாளனுடன் வந்த தலைவன், அவனை பற்றிய பெருமைகளை எடுத்து சொல்லும்படி மொழி பெயர்ப்பாளனிடம் சொல்லுவான். அவன் எங்களிடம் நீண்ட நேரம் பேசுவான். கடைசியிலோ இடையிலோ “இடை செருகலாய் என்னை மன்னித்து கொள்ளுங்கள்’ நான் இதை எல்லாம் சொல்லாவிட்டால் என்னை இங்கேயே சுட்டு போட்டு விடுவார்கள், தயவு செய்து என்னை காப்பாற்றவாவது கேட்பது போல நடியுங்கள்.
அவ்வப்போது நாங்கள் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியே வந்து காலார நடக்க ஆரம்பிப்போம். எங்களின் பின்னாலும், முன்னாலும் துப்பாக்கியை தூக்கி கொண்டு இவர்கள் வேறு. நாங்கள் ஏதோ தப்பித்து ஓடிவிடுவது போல, எங்கு போக முடியும்? வேறு ஒரு நாடு, அதுவும் காடு, மொழி தெரியாத சிக்கல், இப்படி இருக்கும்போது..!
அக்கம் பக்கம் நிறைய வீடுகள், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பெண்களும் ஆண்களுமாய் எங்களை ஏக்கமாய் பார்த்தபடி, ஏதோ பேச வருவது போல இருந்தது , ஆனால் எங்களின் முன்னாலும் பின்னாலும் வரும் ஆயுத கூட்டங்களை கண்டதும் முகங்கள் அப்படியே சுருங்கி பயந்து பின் வாங்குவதையும் எங்களால் கவனிக்க முடிந்தது.
இந்த பகுதி முழுக்க இவர்களின் கட்டுப்பாட்டுகுள் இருப்பது புரிந்தது. இதை போல இந்த நாட்டில் பல குழுக்கள், பல இடங்களை பிடித்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக மொழி பெயர்ப்பாளன் சொன்னான். அரசாங்கம் ஒன்றுதான், ஆனால் போட்டி அரசாங்கம் பல இருக்குமாம். வலிமை பெற்றவன் அரசாங்கத்தை பிடித்து நடத்துவான், மற்றவர்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி கொள்வார்கள். இது போல், கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறதாம்.
அதற்கு முன்னால் வெள்ளைக்காரர்கள் இருந்தவரை ஒரே அரசாங்கம்தானாம். அதுவும் பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்ததாம். அவர்கள் போன பின்னால் “ஜன நாயகம்” தேர்தல் இதையெல்லாம் இங்கிருந்த படித்தவர்கள் ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் எல்லாம் தோல்வியில் முடிய அவர்கள் சத்தமில்லாமல் ஒதுங்கி விட்டார்களாம், இதை எல்லாம் மொழி பெயர்ப்பாளர் சொன்னதுதான்.
மூன்றாவது நாள் மொழி பெயர்ப்பாளனுடன் வந்த தலைவனின் முகம் மகிழ்ச்சியில் இருந்தது. பேச்சு வார்த்தை வெற்றியாம். கிட்டத்தட்ட பல கோடி பண பரிமாற்றம் செய்ய ஒத்து கொண்டதாம் அவர்கள் அரசாங்கம்.
நாங்கள் கிளம்பும்போது எங்களை வழி அனுப்புவது போல ஏராளமான ஆண்களும் பெண்களும். எங்களை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். அவர்களின் முகங்கள் ஏனோ என் மனதுக்கு பரிதாபமாய் தெரிந்தது. எங்களின் ஜீப்பிற்குள் ஏராளமான மூட்டைகளை கொண்டு வந்து வைத்தார்கள். இவை எல்லாம் இங்கு விளைந்தவை, எங்களின் பரிசாக இவைகளை எடுத்து செல்லுங்கள். கிட்டத்தட்ட ஆறு மூட்டைகள், பெரிய அளவு கொண்டவைகளாக இருந்தன. அது வைக்கும்போது காவல்காத்தவர்கள் அதை தட்டி பார்த்து சோதனை செய்த பொழுது எழும்பிய சத்தத்தை வைத்து அட்டைப்பெட்டிதான் என்று அனுமானம் செய்ய முடிந்தது. அட்டைப்பெட்டிக்குள் பொருட்கள் அடுக்கப்பட்டு, பின் அது முழுவதும் துணியால் சுற்றப்பட்டிருக்கலாம் என்று தெரிந்தது. அவை அனைத்தும் ஜீப்பில் ஏற்றப்பட்டன. அங்கு இறக்கிவிடப்பட்ட பின்னரே எங்கள் கையில் செல்போனை கொடுத்தனர்.
அந்த கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எங்களை அழைத்தவர்கள், நடந்த சம்பவங்களுக்கு எங்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டனர். அதன் பிறகு எங்களுக்காக ‘தனி ஹெலிகாப்டர்’ ஏற்பாடு செய்யப்பட்டு, மீண்டும் நாங்கள் வர்ம்போது இறங்கிய பன்னாட்டு விமான தளத்தில் இறக்கி விட்டு சென்றது. அங்கு அனைவரும் ஒரு நாள் தங்கி மறு நாள் அவரவர் நாட்டுக்கு சென்று கொள்ளும்படி ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு சென்று விட்டார்கள்.
நான் தங்கியிருந்த அறையில் ஏதோ ஒரு சத்தம் அதுவும் குழந்தை அழுவது போலவே” படுக்கையில் இருந்து எழுந்தவன் சுற்று முற்றும் பார்க்க “ஆம் குழந்தை அழுவது போலத்தான்” சுற்று முற்றும் குனிந்து பார்த்தேன், எங்கே சத்தம்? அதோ அந்த மூட்டையிலிருந்துதான். பரபரவென துணி மூட்டையை பிரித்து, அட்டைபெட்டியையும் பிரித்தவன் அதிர்ந்து போனேன். கைக்குழந்தை ஒன்று, சுற்றி வர பொருட்களை வைத்து அதன் நடுவே துணி ஒன்றில் சுற்றப்பட்டு, அழுதபடி கையை காலை அசைக்க முடியாமல் கிடந்தது. பரபரப்பாய் அந்த குழந்தையை வாரி எடுத்தவன் அதனடியில் ஒரு கடிதம் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்தேன். அதை படிக்க முடியவில்லை. காரணம் மொழி தெரியாததால்.
என்ன செய்வது என்று புரியாமல் கதவை திறந்து வெளியே வந்தவன் அதிர்ந்து போனேன். என்னை போலவே ஐந்து பேர் கையிலும் ஒரு கைக்குழந்தையுடன் கையில் கடிதத்தையும் வைத்தபடி மிரள மிரள விழித்தபடி நின்றிருந்தனர்.
சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கும் விமானத்தில் பயணித்து கொண்டிருக்கிறேன். அந்த குழந்தையின் ஸ்பரிசம் இன்னும் என் கையின் மேல் உணர்வுடன். “சே” அந்த குழந்தையை நாம் கொண்டு வந்திருக்கலாமோ? இப்படி ஒரு எண்ணம். ஆனால் எப்படி? எப்படியோ ஆறு குழ்ந்தைகளையும் நல்ல இடத்தில்தானே ஒப்படைத்து வந்திருக்கிறோம். இந்த எண்ணம் வந்ததும் மனம் திருப்தியானது.
அந்த கடிதமும் அதில் இருந்த வாசகமும் அந்த பன்னாட்டு விமானதளத்தின் அதிகாரி, வேறொருவர் மூலம் வாசித்து காட்டியபோது அனைவரின் கண்களிலும் கண்ட துக்கம் “ ஐயா நீங்கள் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியாது, ஆனால் எங்கள் நாட்டை சேர்ந்த இந்த குழந்தைகளாவது உங்கள் நாட்டில் வளர்க்கப்பட்டு நல்ல கல்வி அறிவும், வன்முறையும் அற்ற உலகத்தில் வாழ கொடுத்து வைக்கட்டும். இந்த குழந்தைக்கு மயக்க மருந்தாக மூலிகை சாறு கொடுத்துள்ளோம். நீங்கள் இங்கிருந்து செல்லும் வரை அந்த குழந்தைகள் அழுது உங்களை காட்டி கொடுக்காது. இந்த குழந்தைகளின் தாய்மார்கள் எதிர்பார்ப்பது இது ஒன்றுதான் “இந்த குழந்தைகள் மனிதர்களாக எங்களை போன்று யாருக்கும் பயப்படாமல் சுதந்திர உணர்வோடு கலைகளை இரசிக்கும் மனதோடு வாழ வேண்டும்” செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
எங்களை வழி அனுப்ப சுற்றி நின்ற மனித முகங்களை ஒவ்வொன்றாய் ஞாபகப்படுத்தி பார்க்க முயன்றேன். அவர்களிள் ஒரு முகத்துக்கு சொந்தக்காரியின் குழந்தையை என்னிடம் கொடுத்தனுப்பி இருக்கிறாள் யார் அவள்? யார் அந்த தாய்? அது போல மற்றும் ஐந்து குழந்தைகளின் தாய்மார்கள்..?
இவர்கள் ஆறு பேருக்கும் குழந்தையை எடுத்து செல்ல அனுமதி இல்லாததால், நல்ல வேளையாக அந்த பன்னாட்டு விமானதளத்தை சேர்ந்த அந்த நாட்டு அரசாங்கம் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து தர ஒப்புக்கொண்டு பெற்று சென்று விட்டது.
குழந்தை என்னால் வளர்க்க முடியாவிட்டாலும் நல்ல இடத்தில் வளர்வதற்கு ஏற்பாடு செய்து விட்ட மகிழ்ச்சியில் கண்களை மூடியபடி விமான இருக்கையில் சாய்ந்தேன்.