நிலைக்கும் நிலை வருமா

கற்காலம் கரைந்து
நற்காலம் பிறந்து
பொற்காலம் கடந்து
கலிகாலம் நடக்கையில்
மாறவில்லை இன்றும்
சமுதாயத்தில் பாகுபாடு
ஏற்றத்தாழ்வில் மாறுபாடு !

ஏழையென அழைப்பவர்
அதிகாலை துயிலெழுந்து
பழஞ்சோறு உண்டபின்
அன்றாடப் பணிக்காக
உழைத்து உறங்குவது
பட்டுத்துணி விரிக்கப்பட்ட
மெத்தையில் இல்லை !
உடுத்தும் உடைகளில்
அங்கம் தெரிந்திடும்
மாற்றிட துணியில்லை
தேற்றிட மனங்களில்லை
உலகில் மனிதமுமில்லை !


கோடிகளில் புரள்பவர்
அடுத்தவர் உழைப்பை
உறிஞ்சிக் குடிப்பவர் !
மாளிகையில் வாழ்பவர்
வெள்ளியும் தங்கமும்
வைரமும் சேர்த்திடுவர் !
அகங்காரமும் அலங்காரமும்
ஆடைகளாக அணிந்திடுவர் !
உதவிடும் இதயமிருக்காது
நெஞ்சில் ஈரமிருக்காது !

சமூகம் சகதியானது
நெஞ்சங்கள் நஞ்சானது
உலகமே ஊழலானது
அரசியல் அசிங்கமானது !
கறையில்லா சமுதாயம்
அமையும் காலம் வருமா ?
சாதிமதங்கள் மரணிக்குமா
வசதியுள்ளோர் இல்லார்
பிரிவினை அழிந்திடுமா ?
கள்ளமில்லா உள்ளமுடன்
கருணைமிகு இதயமும்
நிலைக்கும் நிலை வருமா ?


பழனி குமார்
03.09.2023

எழுதியவர் : பழனி குமார் (3-Sep-23, 2:29 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 124

மேலே