தொலைத்ந்த இன்பங்கள்

பச்சை பசேலென்று வயல் வெளிகள்
எசப்பாட்டு பாடி ஏத்தம் இரைக்க
காளைகள் இரண்டு கவலையை இழுக்க
சில்லென்று கொட்டும் பனிநீரில் நனைந்து

வாய்க்காலில் ஓடும் தெளிந்த நீரும்
காற்றோடு தலையாட்டும் தன்மான நெற்கதிரும்
வரப்பு தலையணையில் தலைசாய்ந்த சாரைப்பாம்பும்
சுற்றிஅரணாய் எழும்பி நிற்கும் மலைமுகடும்

மோர் கலந்த கம்பங் கூழும்
கடிச்சிக்க பச்சைமொளகாயும் சின்னவெங்காயமும்
படுத்து உறங்க கயத்துக் கட்டிலும்
சாமரம் வீசும் வேப்ப நிழலும்

அடுப்பு ஊதும் புல்லாங்குழல் சப்தமும்
அலையில் கொதிக்கும் குத்தரிசி சாதமும்
மண்சட்டியில் வதங்கும் நாட்டுக்கோழி கறியும்
ஊரே மணக்கும் கத்தரிமுருங்கை சாம்பாரும்

வீட்டில் சமைத்ததை ஊரோடு பங்கிடும்
அத்தே மாமே உறவு கொண்டாடிடும்
சித்தப்பு பெரியப்பு உரிமை கொண்டாடிடும்
அக்கா தம்பி பெருமை போற்றிடும்

அந்த பாசக்கூட்டை குலைத்து நிற்கின்றோம்
அந்த இயற்கை காற்றை தொலைத்து வாடுகிறோம்.
செயற்கையாய் நமக்குநாமே இட்ட சிறைக்குள்
சிக்கி நம்மைநாமே தொலைந்து அலைகின்றோம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (5-Oct-23, 9:35 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 107

மேலே