தெளியானைத் தேறல் அரிது - பழமொழி நானூறு 385
நேரிசை வெண்பா
ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
மாறி ஒழுகல் தலையென்ப - ஏறி
வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப!
தெளியானைத் தேறல் அரிது. 385
- பழமொழி நானூறு
பொருளுரை:
காற்றால் கரைமீது ஏறித் திரைகள் வீசுகின்ற வளைந்த கடல் நாடனே!
மனத்தெளிவு இல்லாதவனை நம்புதல் முடியாது. அதுபோல, தணியாத கோபத்தை உடையவனும், அறிவு இல்லாதவனும் ஆகிய அவனோடு சேர்ந்திருத்தல் முடியாது.
ஆதலால், அவனை நீங்கி ஒழுகுதல் சிறந்ததென்று நல்லோர் சொல்வர்.
கருத்து: மிக்க சினம் உடையாரோடு சேர்ந்திருத்தல் இயலாது.
விளக்கம்:
பேச்சு ஒழித்தல், காண்பதை ஒழித்தல் முதலியன பிறவும் விட்டு நீங்குதலே சிறந்தது என்பதை 'தலையென்ப' என்றார்.
சினம் சேர்ந்தாரைக் கொல்லியாதலால், அஃதுடையாரைவிட்டு நீங்காவிடின் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள்.
மனத்தெளிவில்லானை நம்புதல் கூடாதது போல சினம் உடையானோடு சேர்ந்தொழுகல் கூடாது என்பதாம்.
'தெளியானைத் தேறல் அரிது' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.