விளையாட வராதவன்

விளையாட வராதவன்

எங்களுடன் சீனு இப்பொழுதெல்லாம் சீட்டு விளையாட வருவதில்லை. இரண்டு மூன்று முறை கூப்பிட்டு பார்த்தும் வர மறுத்துவிட்டான். காரணம் கேட்டதற்கு “ச்” ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டான்.
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது, என்னையும் இந்த விளையாட்டுக்கு இழுத்து விட்டவனே சீனுதான், அவனே இப்பொழுது வர மறுக்கிறான். ராமமூர்த்தி கூட இரண்டு மூன்று முறை அவனை பற்றி விசாரித்தார். இப்பொழுது கண்டு கொள்வதில்லை.
நாங்கள் எல்லோருமே வெவ்வேறு இடங்களில் இருந்து வருபவர்கள். நல்ல வசதி, இல்லையென்றால் பெரிய பதவி, சொந்த தொழில், சமூகத்தில் செல்வாக்காக இருப்பவர்கள், வெளியில் எங்காவது கிளப், ஹோட்டல் போன்றவற்றில் போய் விளையாட அவ்வளவு விருப்பமில்லை.
ராமமூர்த்திதான் ஒரு வழி சொன்னார். அவருடைய பங்களாவை அடுத்து அவுட் ஹவுஸ் ஒன்று இருப்பதை சொன்னார். அது காலியாகத்தான் இருக்கிறது, அங்கு நம் சீட்டு கச்சேரியை வைத்து கொள்ளலாம் என்று யோசனை சொன்னார். ஆரம்பத்தில் எங்களுக்கு விருப்பமில்லை, குடியிருப்பு பகுதியில் இப்படி கூடி விளையாண்டால் அக்கம் பக்கம் அவருக்கு பேச்சு வரும் என்று நினைத்தோம். ஆனால் அவருடைய அவுட் ஹவுசை பார்த்த பின்னால் மலைத்து போனோம்.
காம்பவுண்ட் கேட்டிலிருந்து அரை பர்லாங்க் உள்ளே தள்ளியிருந்தது அந்த அவுட் ஹவுஸ். சுற்றி வர மரங்கள் அடர்த்தியாய் காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வு. காரை நிறுத்திவிட்டு உள்ளே போனால் முன்னறை விருந்தாளிகள் உட்கார்ந்து பேசுவதற்கும், இடது பக்க அறை இது போன்ற விளையாட்டுக்கள் விளையாடுவதற்கு ஏற்றவாறு மேசை நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. அது போக உள் பக்கமாக “தாக சாந்திக்கு அடுக்கி வைக்கப்பட்ட அலமாரிக்குள் பாட்டில்களாய்”.
இதை எல்லாம் பார்த்தபின் தான் புரிந்து கொண்டோம், ராமமூர்த்தி சாதாரண ஆள் அல்லவென்று. இவ்வளவு வசதி இருந்தும் அவர் ஏன் எங்களை போல் இந்த ஒரு நிறுவனத்தில் அதிகாரியாய் இருக்கவேண்டும்? இந்த எண்ணம் எனக்கு மட்டுமல்ல என்னுடன் வந்த அனைவருக்குமே இருந்தது.
அவர் சொன்னது, ஒரு கெளரவத்திற்காக தான் பணிக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தாலும் பணிக்கு செல்வதுதானே மரியாதை”
ஏன்று அவர் சொன்ன போது அவர் மீது தனிப்பட்ட மரியாதை வரத்தான் செய்தது.
அப்படியும் நண்பர்களில் ஒருவன் கேட்டான், ஏன் வேலைக்கு போகணும்? தனியா பிசினஸ் ஏதாவது செய்யலாமே?
பகபகவென சிரித்த ராமமூர்த்தி பிசினசுக்கு போன பின்னால் இந்த மாதிரி அனுபவிக்க முடியுமா? நேரம் காலம் இல்லாம அதுலயே இருக்கணும். இதுன்னா அஞ்சு மணி ஆச்சுன்னா “டாண்ணு” கிளம்பிடலாம், அதுக்கு அப்புறம் நிர்வாகம், வேலை இதை பத்துன எண்ணமெல்லாம் இல்லாம மறு நாள் காலையில வரைக்கும் இருக்கலாம்.
அவர் சொன்னது நியாயமாகத்தான் பட்டது எங்களுக்கு. தினமும் மாலை ஆறு மணிக்கு அங்கிருப்போம். விளையாட்டு முடியும்போது இரவு பத்துக்கு மேல் ஆகிவிடும். சில நேரங்களில் அதற்கு மேலும் ஆகியிருக்கும். இதில் கட்டுப்பாடாய் இருக்கும் சில நண்பர்கள் ஒன்பது மணியானால் “டானென்று” கிளம்புவதும் உண்டு.
ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் பணம் தோற்றாலும் விடாப்பிடியாய் விளையாண்டு கொண்டிருப்பவர்களும் உண்டு. “இவ்வளவுதான் அளவு” என்று குறிக்கோள் வைத்து அந்த பணத்தை தோற்றவுடன் உடனே கிளம்பி விடுபவர்களும் உண்டு.
கிட்டத்தட்ட நானும் அந்த ரகம்தான் என்றாலும் இதுவரை தொலைத்ததுதான் அதிகம். என்றாலும் இந்த ஆட்டம் பழகி விட்டால் அடிமையாகத்தானே ஆகிவிடுகிறோம்.
எங்களுக்கு ஒரு வசதியும் செய்து கொடுத்தார். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அனைவருக்கும் அவர்கள் விருப்பபட்டது, டிரிங்க்ஸ், காபி இவைகளை தருவித்தும் விடுவார். இதற்காகவே இரண்டு பணியாளர்கள் எப்பொழுதும் அங்கிருப்பார்கள்.
ஒன்றை சொல்லித்தான் ஆக வேண்டும், எங்கள் விளையாட்டில் அதிகமாக வெற்றி பெறுவது ராமமூர்த்திதான். அதற்காக நாங்கள் வருத்தப்படமாட்டோம். காரணம் இவ்வளவு வசதிகள் தந்து விளையாட இடமும் கொடுத்தவர் வெற்றி பெற்றால் என்ன குடியா முழுகி விடும்.
இப்படிப்பட்ட இடத்தையும், ராமமூர்த்தி போன்ற நண்பர்களையும் அறிமுகப்படுத்திய சீனு மட்டும் போன வருடம் நான் இனிமே அங்க வரலை என்று சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. எனக்கு முன்னாலிலிருந்து சென்று வந்து கொண்டிருப்பவன்.
ஏம்ப்பா திடீருன்னு? இந்த கேள்விக்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை, நீயும் கூட போக வேணாம், இதை மட்டும் அடிக்கடி சொன்னான்.
அவனது அறிவுரையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, போப்பா நீ வரலையின்னா விடேன், என்னை எதுக்கு தொந்தரவு பண்ணறே” நைசாக கழண்டு கொண்டேன்.
அன்று கம்பெனி விசயமாக ஒரு கிளையண்டை பார்த்து விட்டு அவருடன் ஒரு நட்சத்திர ஓட்டலுக்குள், சாப்பிடுவதற்காக நுழைந்தோம். தனியாக ஒரு இடம் தேடி என் கண்கள் அலைந்த போது ஓரிடத்தில் ராமமூர்த்தியையும், சீனுவையும் கண்டவுடன் வியப்பால் விரிந்தன.
சீனு கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக, ராமமூர்த்தியின் இருப்பிடத்திற்கு எங்களுடன் விளையாட வருவதில்லை, அப்படியிருக்கும்போது ராமமூர்த்தியும், சீனுவும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தால் ..!
அவர்கள் இருவரும் நான் நினைத்தது போல் அமைதியாக பேசி கொண்டிருக்க வில்லை, என்பது காரசாரமான சில வார்த்தைகள் அந்த அமைதியான சூழ்நிலையில் சத்தமாய் வெளி வரும்போது தெரிந்தது.
நான் கூட வந்தவரை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு “ஓரு நிமிடம்” அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு இவர்கள் அருகே சென்றேன். இருவருமே என்னை எதிர்பார்க்கவில்லை. சட்டென முகம் களை இழந்து சமாளித்து கொண்டது போல் இருந்தது.
நீயெங்கே இங்கே? சீனுவின் கேள்விக்கு திரும்பி நண்பரை சுட்டி காட்டி அவருடன் வந்திருப்பதாக தெரிவித்து விட்டு வந்து விட்டேன்.
இரண்டு நாட்கள் கடந்திருக்கும் என் காதில் விழுந்த தகவல் அதிர்ச்சியாக இருந்தது. சீனுவுக்கு ஆக்சிடெண்ட் நல்ல காயம், ஐ.சி.யூவுல அட்மிட் பண்ணியிருப்பதாக.
அன்று மாலையே அவனை காண மருத்துவமனைக்கு விரைந்தேன். பால்ய கால நண்பன் என்று சொல்லிக் கொள்ள இவன் ஒருவன் தான் இங்கிருக்கிறான்.
ஐ.சி.யூ முன்னால் அவன் மனைவி மட்டும் இருந்தாள், அவளுடன் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தேன். திடீரென நான் இனிமே சீட்டு விளையாட போக மாட்டேன் என்று அவளிடம் சொன்னது, குழந்தைகளுடன் இந்த ஒரு வருடமாய் பொழுதை போக்கியதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள்.
அடிக்கடி சே இந்த விளையாட்டுனால அஞ்சாறு லட்சம் இழந்துட்டேன், இதை அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு, ஏதோ சொல்ல வருவாரு, அப்புறம் அவரே வேண்டாமுங்கற மாதிரி தலையாட்டிக்குவாறு. எங்களுக்கு புரியலையின்னாலும் மனுசன் இந்த விளையாட்டை விட்டு வெளியே வந்தாரேன்னு சந்தோசப்பட்டோம். அது பொறுக்காம இப்படி வந்து இவர் தலையில இடி விழுந்துடிச்சு.
இவன் காரை விட்டு இறங்கி பாதையை கடக்க முயற்சித்த பொழுது வேகமாய் வந்த கார் ஒன்று சட்டென்று மோதி கண்ணிமைப்பதற்குள் பறந்து விட்டது.
வெளியே வந்தவனுக்கு மனசே சரியில்லை, என்றாலும் விளையாட போகலாம் என்று மனசு இழுக்க, கிளம்பி விட்டேன்.
அன்று யதேச்சையாய் நண்பன் கிருஷ்ணனை பார்த்தேன், அவன் என்னுடன் கல்லுரியில் படித்தவன், காவல்துறையில் அதிகாரியாக பணிபுரிகிறான். இருவரும் கை குலுக்கி சேம நலங்களை விசாரித்தபின் சீனுவுக்கு இப்படியாகும்னு நினைக்கவே இல்லை என்றான்.
பேச்சு சீனுவை பற்றி திரும்பியது. அவனும் நானும் ஒன்றாய் சீட்டு விளையாட போனது, திடீரென அவன் விளையாட வர மறுத்து விட்டது, இப்படி எல்லாம் பேசி விட்டு அப்படிப்பட்ட அவன் ராமமூர்த்தியுடன் அன்று காரசாரமாய் பேசிக் கொண்டிருந்த தையும் சொன்னேன்.
இருவரும் விடைபெற்று கொண்டோம். இரண்டு நாள் ஓடியிருக்க திடீரென ஒரு போன் கால் கிருஷ்ணனிடமிருந்து, உடனே அவனது அலுவலகத்தின் முகவரியை சொல்லி அங்கு வருமாறு.
என்னை எத்ற்கு ஸ்டேசனுக்கு கூப்பிடுகிறான்? பல சந்தேகங்களுடன் அவனது அலுவலகம் சென்ற போது வாசலிலேயே நின்று என்னை அழைத்து சென்றான்.
அவனது மேசையின் எதிர்புறம் என்னை உட்காரவைத்தவன் நீ நினைக்கறமாதிரி சீனுவுக்கு தெரியாம ‘ஆக்சிடெண்ட்’ நடக்கலை, திட்டம் போட்டே நடந்திருக்கு என்றான்.
திடுக்கிட்டு என்ன சொல்றே? கேட்டேன்.
இங்க பாரு தனது செல்போனை திருப்பி காட்டினான், அதில் இவன் கார் வருவதும் எதிர்புறமிருந்து ஒருவன் கை ஆட்டி இவனது காரை நிறுத்த சொல்லி கையை ஆட்டுவது தெரிந்ததது. இவன் காரை நிறுத்தியதும், அவன் இறங்கி வர சொல்லி சைகை காட்டுவதும் தெரிந்தது. இவன் இறங்கி அவனை நோக்கி இரண்டு மூன்று எட்டு வைத்து நடக்கிறான், ஒரு கார் வேகமாக வந்து அவனை மோதி விட்டு செல்வதும் தெரிந்தது. நல்ல வேளையாக இவன் நிறுத்தியிருந்த கார் பக்கமாகவே வீசப்பட்டதால் உயிர் தப்பித்திருக்கிறான்.
நாங்களும் நார்மல் ஆக்சிடெண்டுதான்னு நினைச்சோம், ஆனா இங்க பாரு..!
இவனை கூப்பிட்டவன் எல்ல்லோரும் அடிபட்டவனை நோக்கி ஓடிக்கொண்டிருக்க,
எதிர்பக்கமாய் இவன் காரை நிறுத்தி வர சொல்லி சைகை காட்டியவன், சுற்றும் முற்றும் பார்த்து யாருக்கோ போன் செய்வதும், அப்படியே பேசிக்கொண்டே வேகமாக நடந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்து போய்க் கொண்டிருப்பதையும் காட்டினான்.
எனக்கு பகீரென்றது, யாராய் இருக்கும்? ஏம்ப்பா போனவனை அடையாளம் கண்டு பிடிச்சீட்டீங்களா?
இல்லை விசாரிச்சுகிட்டிருக்கோம், நீ அவனோட “குளோஸ் பிரண்டு” உனக்கு அவனை பத்தி நல்லா தெரியும், யாராவது அவனுக்கு விரோதிங்க இருக்காங்களா?
அப்படி ஒண்ணும் இது வரைக்கும் தெரியலை, நானும் அவனும் அப்பப்ப சண்டை போட்டுக்குவோம், அப்புறம் சரியாயிடும். அதுவும் இந்த இந்த மூணு வருசமா என்னை சீட்டு விளையாடறதுக்கு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனான். அதுல இருந்து இரண்டு பேரும் அங்க சந்திச்சுகிட்டாத்தான் உண்டு. மத்தபடி அவன் கூட நேரத்தை செலவு பண்ண முடியலை. திடீருன்னு நான் சீட்டு விளையாட வரலைன்னுட்டான். அப்புறம் அதுவும் கட்டாயிடுச்சு.
ஏன் வரலையின்னு ஏதாவது சொன்னானா?
இல்லை, ஒரு முறை அவனையும் ராமமூர்த்தியையும் ஒரு ஹோட்டல்ல வச்சு பார்த்தேன். அவங்க இரண்டு பேரும் கொஞ்சம் வேகமா பேசிகிட்டிருந்தாங்க. என் கூட கிளையண்ட் இருந்ததுனால அவங்க கிட்ட சொல்லிட்டு நான் சீக்கிரம் கிளம்பிட்டேன்.
மற்ற கதைகள் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன்.
மாலை சீட்டு விளையாட போகலாமா வேண்டாமா என்னும் குழப்பம் வந்தது, என்றாலும் ஆட வேண்டும் என்னும் மன அரிப்பினால் மாலை ஆறு மணிக்கு கிளம்பி விட்டேன்.
அன்றைக்கு என்னமோ ராமமூர்த்தியின் முகம் சரியாக இல்லை. பார்க்கும்போது ஏதாவது சிரிப்பார். இன்று யோசனையில் இருந்தது போல் இருந்தது. மறு நாள் அலுவலகத்தில் இருந்த போது போன் வந்தது. எடுத்து பார்க்க வெறும் நம்பராய் இருந்தது. தயக்கத்துடன் ஹலோ என்றேன்
வணக்கம் நான் ரத்னா ஏஜன்சீஸ் புரோபரைட்டர் சாம்பசிவம் பேசறேன்
சொல்லுங்க சார், போகும்போதும் வரும்போதும் அவரது கடையை பார்த்திருக்கிறேன்.
சார் உங்கனால எனக்கு ஒரு வேலை ஆகணும்.
சொல்லுங்க..
ஒண்ணுமில்லை, நானும் என் பிரண்டும் ஜானி கிளப்ல சீட்டு விளையாடுவோம், ரொம்ப நாளா ஆடிகிட்டி இருந்தோம். திடீருன்னு அதை குளோஸ் பண்ணிட்டாங்க. எங்களுக்கு என்ன பண்ணறதுன்னு தெரியலை. அப்ப நீங்க ஒரு இடத்துக்கு போறதா எங்களுக்கு தெரிஞ்சுது. அங்க போய் கேட்டோம், யாராவது அறிமுகமானவங்க வந்து சொன்னா சேர்த்துக்குவோமுன்னு சொன்னாங்க, நீங்க வந்து கொஞ்சம் சொல்ல முடியுமா?
நான் இது வரைக்கும் யாரையும் கூட்டிட்டு போனதில்லை, எனக்குமே மூணு வருசம்தான் ஆச்சு, இருந்தாலும் பரவாயில்லை, இன்னைக்கு சாயங்காலம் கடையில இருங்க, போகும்போது கூட்டிட்டு போறேன்.
வேண்டாம் வேண்டாம், உங்களுக்கு அவ்வளவு சிரமம் வேண்டாம், அது போக கடையில இருக்கறவங்களுக்கு தெரிஞ்சா வீடு வரைக்கும் போயிடும். சிரித்தார்.
புரியுது, அப்ப நீங்க இங்க வந்துடுங்க. போனை வைத்தேன்.
ராமமூர்த்தி ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லை, இது கிளப் அல்ல, ஏதோ நீங்கள் நண்பர்கள் ஆனதால் உங்களை வாவழைத்தேன்,இதில் சீனுவால் வேண்டாத பிரச்சினை, இப்பொழுது நீங்களும் யாரோ புதிதாக இருவரை கூட்டி வந்திருக்கிறீர்கள்.
நான் அவர்கள் இருவரும் ஜானி கிளப் உறுப்பினர்களாக இருந்த கார்டை காட்டினார்கள். அதை வாங்கி உற்று பார்த்த ராம மூர்த்தி சரி புதுசா இனி யாரையும் கூப்பிட வேண்டாம் என்றார்.
இப்பொழுது நாங்கள் மூவருமாக சென்று கொண்டிருக்கிறோம், அந்த நிகழ்வு நடக்கும் வரை.
அன்று இரவு பத்துமணி ஆகி விட்டது, நானும் சரி என்னுடன் புதிதாக வந்தவர்களும் நிறைய பணத்தை இழந்து விட்டோம், விட்டதை பிடிக்க வேண்டும் என்னும் வெறியுடன் விளையாட்டை தொடரும்போது திடீரென்று வெளியே கூச்சல். என்னவென்று திரும்புவதற்குள், சட சடவென காக்கி சட்டைகள் உள்ளே வர எல்லோரையும் எழுப்பி அப்படியே வேனில் ஏற்றி கொண்டு போனார்கள்.
இரவு முழுக்க காவல் அலுவலகத்தில் உட்கார வைக்கப்பட்டேன். நண்பன் கிருஷ்ணன் கூட உத்தியோக உடையுடன் எல்லோரையும் விசாரித்து கொண்டிருந்தான். என்னை கண்டு கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. எனக்கு எரிச்சல், சே..போலீஸ்காரன் அவன் புத்திய காண்பிச்சுடறான், மனதுக்குள் வைது கொண்டேன்.
காலையில் எல்லோரையும் எச்சரித்து அனுப்பினார்கள். கிட்டத்தட்ட இருபத்தைந்து பேர்கள் இருந்தோம். எல்லோருமே “சமூகத்தின் பெரியமனிதர்களாய் காட்டிக்கொண்டு நடந்து கொண்டிருப்பவர்கள்” என்னுடன் விளையாட வந்து கொண்டிருந்த இருவருடன் மூவராக ராம மூர்த்தியின் அவுட் ஹவுசுக்கு எங்களது காரை எடுத்து வர சென்றோம். அங்கு போலீஸ் காவல் போட்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் போலீஸ். எப்படியோ அவரவர்கள் காரை எடுத்து வீட்டுக்கு போய் சேர்ந்தோம்.
கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடி விட்டன. சீட்டு விளையாட்டையே மறந்து மாலை ஆனதும் வீட்டுக்கு பறந்து விடுகிறேன். வீட்டிலேயே இருந்த சிறிய கோர்ட்டில் மனைவியுடன் டென்னிஸ் ஆடிக்கொண்டிருக்கிறேன். உற்சாகப்படுத்த மகனும் மகளும். இது நன்றாகத்தான் இருக்கிறது. அப்புறம் எதற்கு சீட்டு விளையாட்டில் விழுந்தேன்.
செல்போன் அழைக்க எடுத்தேன் கிருஷ்ணன் அழைத்தான். துண்டித்து விடலாமா என்று நினைத்தேன். அந்தளவுக்கு அவன் மேல் கோபம், ராஸ்கல் அன்றைக்கு கண்டு கொள்ளாதவன் போல் நடந்து கொண்டவான் இன்று ஏன் அழைக்கிறான்?
ஹலோ விருப்பமில்லாமல் சொன்னேன்.
ஏண்டா என் மேல கோபமா? போனை எடுக்கறதுக்கு இவ்வளவு நேரம்?
ஆமா என்று சொல்வதா,இல்லை என்று சொல்வதா, திணறினாலும் பரவாயில்லை சொல்லு விட்டேற்றியாய் கேட்டேன்.
சரி எனக்கென்ன, உன்னைய அப்படி உட்காரவைக்கலியின்னா இன்னைக்கு பொண்டாட்டியோட, டென்னிஸ் விளையாடுவியா, இல்லை குழந்தைகளோடத்தான் பேசிக்கிட்டிருப்பியா? சிரித்தான்.
ராஸ்கல் என்னை வாட்ச் பண்ணிகிட்டிருந்திருப்பான் போல, கோபம் வந்தாலும் ஒரு சந்தோசமும் இருந்தது, அதெப்படி உனக்கு தெரியும்?
எல்லாம் தெரியும், சரி சீனுவை ஆக்சிடெண்ட் பண்ணவனை புடிச்சிட்டோம், அது தெரியுமா?
அப்படியா..! சாரி எனக்கு விசயமே தெரியலை, பேப்பர்ல கூட ஒண்ணையும் காணொம்.
மாட்டினவங்க பெரிய இடத்து ஆளுங்க, அப்படியே ஆளுங்களை வச்சு அமுக்கிடுவாங்க, அதை பத்தி நமக்கென்ன, அவங்க கையாளு ராமமூர்த்திதான் இப்ப மாட்டிகிட்டு நிக்கறாரு.
ராமமூர்த்தியா?
அவருதான், அவருக்கு வேலையே உங்களை மாதிரி இருக்கற பெரிய மனுசங்களை இந்த விளையாட்டுல இழுத்து விடணும், அதுவும் இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்து விளையாட வைக்கணும். அப்படி மாட்டுனவங்கதான் சீனுவும், நீயும். சீனு அங்க நடக்கிற தில்லு முல்லை கண்டு பிடிச்சுட்டான், அதுக்குள்ள இரண்டு மூணு லட்சத்தை விட்டுட்டான். அங்க சுத்திகிட்டிருக்கற வேலைக்காரங்க மூலமா உங்க கார்டுல என்ன என்ன இருக்குங்கற விசயம் மேல செட் பண்ணி வச்சிருக்கற கேமரா மூலமா அவங்க காதுக்கு போய் ஒவ்வொரு சீட்டாட்ட குழுவுல இருக்கற அவங்க ஆளுங்க கிட்ட போயிடும், அப்புறம் என்ன எதிராளி என்ன வச்சிருக்கான் அப்படீங்கறதை வச்சு இவங்க ஆட்டத்தை தொடருவாங்க, இல்லையின்னா கவுத்தூருவாங்க.
சீனு இதை கண்டு பிடிச்சு எதுத்து கேட்டிருக்கான், ஆரம்பத்துல அவனை கண்டுக்காம விட்டுட்டாங்க, விருப்பமில்லையின்னா நீ ஒதுங்கிக்கோ அப்படீன்னு சொல்லிட்டாங்க, அவன்தான் விட்ட பணத்தை கேட்டு தொந்தரவு பண்ணிகிட்டிருந்தான். இனி விட்டா பிரச்சினை ஆயிடும்னு அவனை ஒரு நாள் திட்டம் போட்டு “ஆக்சிடெண்டா” முடிக்க பார்த்தாங்க. ராமமூர்த்திய வச்சுத்தான் பண்ணியிருக்காங்க.
அவங்களை பிடிக்கணுனா நல்ல எவிடெண்ஸ் வேணும், அதனால உனக்கே தெரியாம உன்னை யூஸ் பண்ணிகிட்டோம், சிரித்தான்.
என்னைய யூஸ் பண்ணிகிட்டீங்களா? அதுவும் எனக்கே தெரியாம..!
ஆமா, பின்னே அவங்க எப்படி இந்த ஆட்டத்துல சம்பாதிக்கறாங்கன்னு கண்டு பிடிக்கணும்னா அவங்களோட கூட போய் ஆடினாத்தான கண்டு பிடிக்க முடியும், அவங்களை கூட அன்னைக்கு இராத்திரி அங்கதான் உக்கார வச்சோம், அதுக்காக அவங்க கோபிச்சுகிட்டாங்களா? சிரித்தவன் எங்களுக்கும் ஆளுங்க இருக்காங்கப்பா..!
ராமமூர்த்தி வெறும் கையாளுதான், மத்தபடி இதை நடத்தறது பெரிய அரசியல் கோஷ்டி, அதனால அவங்க யார் பேரும் வெளியே வராது, ராமமூர்த்தி பேர்லயே கேசை முடிச்சிடுவாங்க.
எங்களுக்கு பைல் குளோஸ் ஆகணும், அவ்வளவுதான் என்ன பண்ண முடியும்? மேலிடத்து உத்தரவு, சிரித்தான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-Dec-23, 10:23 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 69

மேலே