சில அழகான இல்லைகள்
வானவில்லில் சறுக்கி விளையாடும்
வண்ண ஆசையில் மிகையில்லை
வனவாசிக்கு வனம் கடந்த
வாழ்க்கை மீது ஆசையில்லை
நீந்தும் நதியில் மிதப்பதற்கு
ஏங்கும் மனதில் பாரமில்லை
நேரத்தை அசைபோடும் பசுவோ முதுகைக்
கொத்தும் காகத்தை நினைப்பதில்லை
புல்லாங்குழல்களைச் சுமந்து போகும்
மூங்கில் கூடைக்கு வருத்தமில்லை
நில்லாமல் பாயும் ஜீவ நதிகளுக்கு
நேற்றைய யுகங்களின் நினைவில்லை
திறந்தே தூங்கும் தூக்கத்தை
தட்டி கனவுகள் வருவதில்லை
தூர தூரங்கள் தூரமில்லை
கண்ணுக்குள் இருப்பவை அருகில் இல்லை
மின்னல் மேக இடிகளில் சிக்கி
ஒருநாளும் நிலவு உடைவதில்லை
நிலவைக் கிள்ளிக் கிள்ளி உண்ண
நதி மீன்களுக்குத் தடையில்லை
சிந்தைக் கோயிலில் ஒரு பொழுதும்
நடை சாத்தப்படுவதில்லை
சொர்க்கத்துக்குச் செல்ல
நுழைவுச் சீட்டு தேவையில்லை