புத்தாண்டு வாழ்த்து 2024

இனிய புத்தாண்டு
இரண்டாயிரத்து இருபத்து நான்கு..
எடுத்த சபதங்கள் முடிப்பது
தென்றல் வீசும் மலர்த் தோட்டத்தில்
பூப்பறிக்கப் போவது போலில்லை..

வியூகங்கள் விடாமுயற்சியில்
கைகூடும் மகிழ்ச்சியில்
பூந்தோட்டங்களை விடவும்
போராடும் களங்கள் சுகம்
தராமல் போவதில்லை...

வெற்றி என்பது அடையும்
இலக்குகளில் மட்டுமல்ல.. அதை
நோக்கி அமைக்கும்
பயணங்களிலும் கூட.. அது
பாரதி கண்ட சுதந்திரம் போல..

சனவரிக் குளிரில் துவங்கி
டிசம்பர் குளிரில் முடியும்
இன்னொரு புத்தாண்டு...
மார்கழிப் பனியில் நனைந்து
வெற்றிக் கனிகள் தரும்...

மகம் நட்சத்திரம்.. அதில் துவங்கும்
புது வருஷம் மகத்துவம் படைக்கும்..
நியாயங்கள் மகுடங்கள் சூடும்...

கற்காலம் கண்ட இப்பூவுலகம்
மின்சாரம் பார்த்தது.. தானியங்கி
வாகனங்கள் பார்த்தது..
புதுப்புது எந்திரங்கள் பார்த்தது
கம்ப்யூட்டர்.. கைபேசி பார்த்தது...

வான் நோக்கிய ராக்கெட்டுகளும்
செயற்கைக் கோள்களும்
சாத்தியம் ஆகியது... மாறாத
மாற்றம் என்பதில் மாறும்
உலகின் மகத்துவம் தொடர்கிறது..

அணைக்கட்டுகளில் நீரின் ஆழத்தில்
வரப்புகள் உயரும்..
உழவுத் தொழில் வளரும்..
கால்நடைகள் செழிக்கும்..
வசந்தங்கள் வரமாகும்
வளங்கள் வசமாகும்..

வாழ்த்துக்களில் மலர்ந்த
இன்றைய விடியல்
வருஷம் முழுமைக்கும் ஒளி தரும்..

எதையும் சிறப்பாய் செய்வதில்
உதவிக்களம் உருவாக்கிக் கொள்வதில்
சாதனைப் பட்டியல் நீளட்டும்...
பொதுநலமே தன்னலம் ஆகட்டும்..
அனைவருக்கும் ஆங்கில
புத்தாண்டு வாழ்த்துகள்...

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.

👍🪷🌷🌺🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (1-Jan-24, 3:19 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 146

மேலே