மரபுக் கவிதை மறந்து போச்சே

அந்நாளில் பல செந்நாப் புலவர்
பேனாவின்றிப் பென்சிலுமின்றி
காகிதமென்றொரு வெண்பொருளின்றி
ஓலையும் சீலையும் பலவும் கொண்டு
சிலம்பின் காதையும் சீதையின் காதையும்
போரின் கதையும் காதலின் கதையும்
வாழ்வின் முறையும் இன்னும் பலவும்
வெண்பா கலிப்பா பலபாக்கொண்டு
சந்தம் மிகுந்து பொருளும் மிகுந்து
இன்றும் படிக்க இனிதே வடித்தனர்
இன்றைய நாளில் நாமும் பலவித
மென்பொருள் கொண்டு பாவடித்திடினும்
மரபுக் கவிதை மறந்தே போனதோ?
அசையும் சீரும் தளையும் தொடையும்
இசையுடன் வடிப்போர் இன்னும் உண்டோ?
உரைநடையதனை நான்காய் மடித்தால்
கவிதையாகுமோ காண்பீர் நன்றே !


(இதுவும் மரபுக் கவிதையன்று)

எழுதியவர் : உதய நிலவன் (15-Jan-24, 7:15 pm)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 63

மேலே