வழித் துணையாய் வாராய்

'வழித் துணையாய் வாராய்...*

ஆத்தோரம் குளத்தோரம்
துள்ளித் திரியும் மீன்குஞ்சாய்
அக்கினி பிளக்கும் வெயிலிலும்
ஆடிப்பாடி ஆனந்தமாய்
ஆட்டம் நாமும் போட்டோமே..!

நஞ்சை புஞ்சை தரிசெல்லாம்
நனிநாடி நாமும் சென்றோமே...
குற்றால மலைக் குரங்காட்டம்
கொம்புகள் தோறும் மேலேறி
குதித்து ஆட்டம் போட்டோமே...!

சட்டைப் பையில் புளியங்காய்
சப்பிச் சாப்பிட உப்பு காரம்
பொட்டலம் போட்டே எடுத்துச் செல்வோம்.
போகும் தூரம் வெகு தூரம் - எனில்
சிட்டாய் பறந்தே செல்வோமே...!

ஒரு நாள்- ஒரு கணம்-

அம்மா தடுத்தும் கேளாமல்..
அத்தை சொல்லும் மதியாமல்..
என்றும் இல்லா எக்காலத்துடன்
ஏரிக் கரைக்குச் சென்றாயே
ஏமன் அழைத்துப் போனானே...

பால்ய காலப் பங்காளா..
பாவம் அறியாப் பண்பாளா..
சேர்ந்தே சென்றோம் எப்போதும்... இன்று
அதிகாரப் பணியில் நானிருந்தும்
நட்போடு கைகோர்த்து நடந்திடவே..
வழி துணையாய் வாராய் ....உறவே!

எழுதியவர் : முனைவர் மா.தமிழ்ச்செல்வி (22-Feb-24, 7:16 pm)
சேர்த்தது : Dr M Tamilselvi
பார்வை : 171

மேலே