வளையாத மூங்கில் வேழம்பர்தம் அடிக்கீழ் - நீதி வெண்பா 7
நேரிசை வெண்பா
வருந்தவளை வேய்அரசர் மாமுடியின் மேலாம்
வருந்த வளையாத மூங்கில் - தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாம்திரிந்து
தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான். 7
- நீதி வெண்பா
பொருளுரை:
வளைக்க வளைகின்ற இளைய மூங்கில் அரசர்களுடைய பெருமையாகிய முடிக்கு மேலே சிவிகைக் கொம்பாய் உயர்வை அடையும்;
வளைக்க வளையாத முற்றிய மூங்கில் தரித்திரப்பட்டுக் கழைக் கூத்தாடிகளுடைய கையிற் போய் பூமியெங்கும் உலைந்து திரிந்து அவர்களுடைய காலின் கீழாகி இழிவையடையும்.
கருத்து:
இளமையில் வருத்தப்பட்டுக் கற்றவர் பெருமையடைவர்; அப்படிக் கல்லாதவர் சிறுமையடைவர்.
'அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்' 121 அடக்கம் உடைமை - என்பது தமிழ் வேதம்.
மூங்கில் வளரும் போதே அது நன்கு வளைந்து கொடுக்கும் தன்மையுடன் வளருமானால் அதனை எந்த வகையிலும் வளைத்துப் பயன்படுத்தலாம். அரசனுடைய சிம்மாசனத்துக்கு மேல் விதானமாக அப்படிப்பட்ட மூங்கில் பயன்படும்.
ஆனால் அப்படி வளையாமல் நிமிர்ந்து உறுதியாய் விளையுமானால் அது கழைக்கூத்தாடிகளின் கையில் பயன்படும் வித்தைக் கோலாகத்தான் பயன்படும்.
ஒன்று மேன்மையையும், மற்றது தாழ்ந்தும் போகக் காரணம் அவற்றின் வளர்ச்சி முறை. உடல் வருத்தி வளைந்து கொடுத்துப் போனால் உயர்வும் பெறுவர். அப்படி உடல் வருத்தாமல் உழைக்காமல் நின்றால் அவர்கள் கீழ்மை அடைவர் என்பது கூற்று.