பாவகை மூன்று கருத்து ஒன்று

பாவகை மூன்று கருத்து ஒன்று
********
1. கலிவிருத்தம் --- ( காய் 4 )
******
ஆக்கமிலாப் பாவியராய் ஆட்சியுற்று ஆர்ப்பரிப்போர் ;
ஊக்கமிலாச் செய்முறைகள் ஊர்முழுதும் சேர்த்தபின்பு ;
நாக்கினிடை தேன்குழைத்து நாலுவிதம் பொய்பரப்பி;
வாக்களித்த மக்களுக்கு வாக்கரிசி போடுவதேன்!
(அனைத்து சீர்களும் கூவிளங்காய் ஆக உள்ளது.
ஒவ்வொரு அடியும் நேரசையில் தொடங்க 16எழுத்துக்கள்)
ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் பொழிப்பு மோனை)

2. வஞ்சி விருத்தம் -- (காய் 3.)
*******
ஆக்கமிலாப் பாவியராய் ஆட்சியுற்றோர்
வாக்குறுதிப் பொய்பரப்பி; நாட்டினிடை,
ஊக்கமிலாச் செய்முறைகள் ஓர்ந்துவிட;
வாக்களித்த மக்களுக்கு வாதனையே!
( அனைத்து சீர்களும் கூவிளங்காய் ஆக உள்ளது
அனைத்து அடிகளும் நேரசையில் தொடங்க 12. எழுத்துக்கள்)


3. நேரிசை வெண்பா
*****
காக்கும் அமைப்பில் களங்கண்ட கோமான்கள்
ஊக்கச் செயலின்றி ஊரார்க்கு -- ஆக்கமிலா
வாக்குறுதி அள்ளியே வார்த்திட ; நம்மிடை,
தேக்கமே சாரும் தெரி!

எழுதியவர் : சக்கரைவாசன் (21-Mar-24, 7:29 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே