அழகில்லை என்பதுவுமேனோ

********
சலசல சலவென சதிசொல லெனவே
சிலுசிலு சிலுவென சிதறிடு கிறதே
சலமது அருவியி னிடைவெளி தனிலே வளியோடே!
*
சலமதி லெழுகிற சலசல வொலியே
சரிகம பதவெனு மிசைமொழி யெனவே
சகலரு மொழுகிட வளிவழி வருமே அலைபோலே
*
மலமல மலவென மழைதர வெனவே
மலைமுக டுகளொடு முகிலின மதுவோ
மருகிடு கிறநிற மொருவித வழகே அறிவோமே!
*
மதிவிடை பெறுகிற மறுகண முடனே
மலரென விரிகிற தொருபொழு ததிலே
மலரித ழதனது குறுநகை யதுவோ எழிலோடே!
*
நிலவொளி விழுகிற இரவித முறவே
நிலவிழி துயிலுவ லமைதியி னுருவே
நினைவொடு படிகிற நிழலெனு மதிலே குறையேதோ?
*
நிசிவெளி உருகிய நிலவுதி ரிகளே
நிலமல ரிதலொடு விழுகிற பனியே
நிசமதை இதயமு மறிவதி லுளதே கனியாறே
*
அலகுக ளுரசிடு மபிநய முடனே
அழகொடு குலவிடு கிறசிறு கிளியோ
அகமினி துறுகிற நிலைதரு கிறதே பதிவாயே!
*
அலறிய பொழுதிலு மினிமையு மெழவே
அதிசய பறவைக ளொலியது முளதே
அவையெது மிலையென ஒருசில ருளரே அதுவேனோ?
*
(வண்ணம்)
03-04-2024

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-Apr-24, 2:37 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 38

மேலே