இவ்வுலகை கேள்விகேட்க நான் யார்
இவ்வுலகை கேள்விகேட்க நான் யார்?
ஆனால் இவ்வுலகில் நடப்பது நியாயமா?
அறிவியலில் அபரிமித வளர்ச்சி என்கிறோம்
விஞ்ஞானம் மட்டுமே அறிவின் வளர்ச்சியாகுமா?
மெய்யறிவில் வளர்ச்சி வேண்டாமா?
நம் விஞ்ஞானம் எப்படிப்பட்டது தெரியுமா?
எலி தவளைகளை சோதித்துப் பார்ப்பது
இவைகளை கொன்று நம் உயிரை காப்பது
நம் அறிவியல் எந்த அளவில் இருக்கிறது?
கோளம் முதல் கோள்கள்வரை அறிந்துகொள்வது
பசியில் வாடும் மக்களை பசியால் சாகவிடுவது
இவ்வுலகை கேள்விகேட்க நான் யார்?
ஆனால் இவ்வுலகில் நடப்பது நியாயமா?
நம் சரித்திரம் எப்படி இருக்கிறது தெரியுமா?
வரும் சந்ததியினர் நம்மை தரித்திரம் என்பதற்கு
நம் கணித வளர்ச்சி எந்த அளவுக்குத் தெரியுமா?
பூஜ்ஜியங்கள் லட்சத்தை எப்படி கோடியாக்கும்!
நம் பூகோள வளர்ச்சி உள்ள நிலை என்ன?
அண்டை நாட்டு ஐந்து சதுரஅடி என்னுடையது
இவ்வுலகை கேள்விகேட்க நான் யார்?
ஆனால் இவ்வுலகில் நடப்பது நியாயமா?
நம் பரிணாம வளர்ச்சி எப்படி மிளிர்கிறது?
குரங்கிலிருந்து பிறந்து அதைவிட கேவலமாகிவிட்டோம்
நம் மனிதாபிமான வளர்ச்சியின் சிகரம் தெரியுமா?
பிடிக்காததை உதைப்பேன் பிடித்ததை கொல்வேன்
இயற்கை விதிப்படி விலங்குகள் பசிக்காக கொல்லும்
செயற்கை கைப்பிடியில் நாம் ருசிக்காக கொல்கிறோம்
இவ்வுலகை கேள்விகேட்க நான் யார்?
ஆனால் இவ்வுலகில் நடப்பது நியாயமா?
இன்றைய தேசப்பற்றின் அறிகுறி என்ன?
என் மொழி என் மாநிலம் என் இனத்தவர்!
ஒழுக்கம், கடமை, நேர்மை, நாணயம், வாய்மை
திருக்குறள் நூலில் மட்டுமே வாழும் அப்பாவிகள்!
மதம் சடங்கு வழிபாடு இவைகளின் நிலைப்பாடு?
குலம் இனம் சாதி, இதனுடன் நாம் படுகின்ற பாடு
இன்று பக்தி முத்திவிட்டது, ஆன்மிகம் பின்தங்கிவிட்டதா?
மனிதனே பின்தங்கியபின் பக்தியாவது, முக்தியாவது!
இவ்வுலகை கேள்விகேட்க நான் யார்?
ஆனால் இவ்வுலகில் நடப்பது நியாயமா?