மந்தை
‘‘ஏம்பா..அவசரத்துக்கு ஒதுங்க போனவன புடிச்சுட்டு வந்து இப்டி மந்தையில உக்காற வச்சு பஞ்சாயாத்து போட்டுருக்கீங்க’’ என அமைதியாக இருந்த கூட்டத்தில் முதல் பேச்சை தொடங்கி வைத்தார் காவக்காரர் கருப்பையா. வாசலை கூட்ட வைத்திருந்த வெளக்கமாறு, தண்ணி குண்டா அப்படியே கிடந்தது. விடியற்காலையில் மாடு போட்ட சாணியும் அள்ளாமல் காய தொடங்கியது. சேவல் கூவிய சத்தத்தில் பறவையை இரைதேடி பறந்து விட்டது. ஆனால், சேவலுக்கு போட்ட பஞ்சாரத்தை எடுக்க கூட நேரமில்லை அனைத்து கூட்டமும் மந்தையில் தான் இருந்தது.
தமிழ்நாட்டில் கூர்ந்து கவனிக்கப்படாத கிராமங்களில் ஒன்று தான் இந்த ஒட்டக்குடி. ஒட்டக்குடி மக்கள் கொஞ்சம் விசித்திரமானவர்கள். இவர்கள் மழைக்கு கூட அடுத்த ஆளுங்க வீட்டு பக்கம் ஒண்ட கூட மாட்டார்கள். அதுனாலே இவர்கள் ஊருக்கு இப்படி ஒரு பேரு வந்ததாம். இந்த ஊரில் மொத்தம் 30 வீடுகள் மட்டும் தான். இந்த 30 வீட்டை கட்டி ஆள்வது காவக்காரர் கருப்பையா, நாட்டாமை நல்லதம்பி, கோடாங்கி கோட்டைச்சாமி.
மந்தையில் கூடியிருந்த கூட்டம் முழுவதும் அமைதியாய் நின்றுகொண்டிருக்க ஒரு புறம் சின்னக்காளையும் அவரது மகள் வள்ளியும் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தனர். விருட்டென்று துண்டை உதறி எழுந்த நாட்டாமை ‘‘ இந்தா பாருயா.. சின்னக்காளை நீ என்ன தான் நம்ம சாதிசனமா இருந்தாலும், ஏதோ பெரிய மனசு வச்சு, உன் மக ஆசப்பட்டானு கவுரவம் பார்க்காம சண்முகம் பையனுக்கு பேசி முடிச்சோம். சண்முகம் மச்சு வீட்டுக்காரன், நீ மண்ணு வீட்டுக்காரன் ஏணி வச்சாலும் எட்டாத தூரம், அப்படி இருக்க உன் மக இப்படி பண்ணிட்டு வந்துட்டு நிக்கிறா’’ என பேச்சை முடித்து மந்தை திண்டில் அமர்ந்தார்.
சின்னக்காளை ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் நின்றுகொண்டிருந்தார், பஞ்சாயத்துக்காரர்கள் கடுகடுவென கடுகு போட்டால் பொரிந்துவிடும் அளவிற்கு எண்ணெய்யாய் கொதித்துக்கொண்டிருந்தனர். இந்த பக்கம் வள்ளியோ முழுவதும் நிரம்பி கண்மாயில் இருந்து மடையை திறந்து விட்டது போல, கண்ணீரால் பேசிக்கொண்டிருக்கிறாள். மந்தையில் உட்கார்ந்து இருக்கும் கூட்டத்திற்கும் ஒன்றும் விளங்காத்தால் புரணி பேச முடியாமல் தவித்தபடி இருக்கின்றது.
‘‘ஏன் தாயி, நடந்த விசயத்தை நாங்க சொல்லட்டுமா, இல்ல நீயே சொல்லுறியா’’ என கரகரப்பாக குரலை உயர்த்தி கேட்டார் காவக்காரர் கருப்பையா. வள்ளியோ பொதுமந்தையில் மெல்லவும், முழுங்கவும் முடியாமல் அழுகையால் வெம்பிக்கொண்டிருந்தாள். ‘‘ ஏ… இந்தாடி, அதான் இத்தன பேரு கேக்குறாங்களே வாய தொறக்க வேண்டியது தான’’, ‘‘இந்த புருசன் தான் வேணும்னு மூணு மாசத்துக்கு முன்னாடி பஞ்சாயத்துல வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சவ, இப்ப என்னவாம் நேத்து சமஞ்சவ கணக்கா பேசாம நிக்கிறவ’’ என மந்தையில் இருந்த பெண்கள் அவரவர் பாணிக்கு வள்ளி மீது கேள்வி அம்புகளை வீசிக்கொண்டிருந்தனர்.
‘‘ஏய், கழுத இத்தன பேரு கேக்குறாங்க. என்னடி பண்ணி தொலச்ச. உன்ன பெத்த பாவத்த எங்க போய் தொலைக்க போறேன்னு தெரியல. இதுல ஊர் பேச்ச வேற வாங்கிட்டு என்னய அலைய சொல்லுறியா’’ என்று பேசிக்கொண்டே சின்னக்காளை வள்ளியை நோக்கி அடிக்க பாய்ந்தார். உடனே, எழுந்து கோடாங்கி கோட்டைச்சாமி, காவக்காரர் கருப்பையா சின்னக்காளையை இறுக்கி பிடித்து அதட்டினர். கூடி இருந்த கூட்டமும், கூச்சலிட, அவர்களுடன் சேர்ந்து மந்தை அருகே அரச மரத்தில் இருந்த பறவைகளும் கூச்சலிட்டன. இத்தனை நடந்தும், வள்ளி அழுவதை நிறுத்தவில்லை.
இதற்கு நடுவே கூட்டத்தை விலக்கிக்கொண்டு பெருமூச்சு விட்டபடியே வள்ளியின் கணவன் மாரிமுத்து வந்து நின்றான். அவ்வளவு நேரம் நிலத்தை பார்த்து அழுதுகொண்டிருந்தவள், கணவனின் கால் செருப்பை பார்த்த கணத்தில் சிறிதும் தாமதிக்காமல் ஓடிச்சென்று மாரிமுத்துவை அணைத்துக்கொண்டாள். திருவிழாக்கூட்டத்தில் தொலைந்து போன சிறுமி பெற்றோரை கண்டதும் ஓடிச்சென்று அவர்களின் கரங்களை பற்றிக்கொண்டு கலங்கி நிற்பது போல் வள்ளி மாரிமுத்துவின் கைகளை இறுக்கி பிடித்தப்படி முதுகிற்கு பின்புறம் மறைந்து கொண்டாள்.
‘‘ஏன்ப்பா பெரிய மனுசனுங்களா, இவள நிக்க வச்சா இன்னிக்கு பொழுதுக்கும் இப்படி தான் அழுதுட்டு நிப்பா. என்ன நடந்துச்சுனு சொன்னாதான எங்களுக்கும் விளங்கும்’’ என மந்தையின் மரத்தடியில் உட்கார்ந்து இருந்த பெரியாத்தா பேச்சை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தினாள். கோடாங்கி எழுந்து சின்னக்காளை, மாரிமுத்து, வள்ளி ஒவ்வொருவரையும் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது பார்வையை வள்ளியிட நின்றது. ‘‘தாயி, நீ நேத்து ராப்பொழுது உன் வீட்டுல இல்ல, விடிஞ்சும் விடியாத பொழுதுல ஒருத்தர் கூட வண்டியில வந்து ஊரு எல்லையில இறங்குன. நீ எங்க போன, யாரு அதுனு நீயா வாய தொறந்து சொல்லிடு. உன்னால இப்போ ஊருல இருக்குற எல்லாருக்கும் அவமானமா இருக்கு’’ கோடாங்கி குறி சொல்வது போல் ஒவ்வொன்றாக கூறிக்கொண்டே செல்ல, மாரிமுத்து வள்ளி இறுக்கி பிடித்த பிடியை தளர்த்தி விட்டான்.
‘‘ இங்க பாருங்க, இப்போ வரைக்கும் இங்க என்ன நடக்குதுனு தெரியாது. நேத்து ராத்திரி எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டை. ரெண்டாம் சாமத்துல எந்திரிச்சு பாக்குறேன் ஆளக்காணாம். என்ன பண்றது, ஏது பண்றதுனு தெரியல. அவள தேடி தான் ராத்திரி முழுக்க ஊர சுத்தி தேடி பாத்துட்டு, இப்போ தான் என் மாமன் சின்னக்காளைக்கு தாக்கல் சொல்லலாம்னு கிளம்புனேன். அதுக்குள்ள இங்க வரசொல்லி தாக்கல் வந்துடுச்சு’’ என பஞ்சாயத்தில் பேச ஆரம்பித்தான் மாரிமுத்து.
‘‘அப்புறம் என்ன, புருஷன் கூட சண்ட போட்டு எவன் கூட போயிட்டு வந்த’’
‘‘அய்யா சாமிகளா, என் புள்ள மேல பழிச்சொல்லு போடாதீங்கய்யா’’ என கதறினார் சின்னக்காளை.
‘‘பிறவு என்னப்பா உன் மவ வாயத்தொறக்காம இருக்கான்னா, அவ புட்டு ஆம்புடுக்கிச்சுன்னு தான அர்த்தம்’’ என இழுத்தார் நாட்டாமை.
‘‘என்ன ? காவக்காரரே ஏதும் பேசாம இருக்கீங்க. என்ன பண்ணலாம்’’ என கோடாங்கி பேசிக்கொண்டிருந்த போது, தைரியத்தை வளர்த்துக்கொண்டு கண்ணீருடன் கதையை தொடங்கினாள் வள்ளி. ‘‘நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம், நான் ஓடிப்போகல, எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் நித்தம் சண்டை. கல்யாணம் ஆன மூணு மாசம் ஆச்சு, விசேசம் இல்லையா... விசேசம் இல்லையானு நிதம் என் மாமியா கேக்குறாங்க. அத இந்த மனுசன் கிட்ட சொன்னதுக்கு, வாய மூடுனு சொல்லிட்டாரு. என் சங்கடத்தை யாரு கிட்ட சொல்லி அழுகுறதுனு தெரியல. அதான் என் சிநேகிதி வீட்டுக்கு போயிட்டேன்.’’ என அவ்வளவு பொறுமையாய் இருந்தவள் பொங்கி பொங்கி பேசினாள்.
‘‘ சரிம்மா.. யார் அந்த சிநேகிதி. கோமதி மக சிவகாமியா, இல்ல சுடலை மக ராக்கா’’ என்றார் காவக்காரர்.
முந்தியில் கண்ணீரையும், மூக்கையும் துடைத்துக்கொண்டு‘‘ அவளுக கிடையாது பக்கத்து ஊருல இருக்குற கோமதி வீட்லதான் இருந்தேன்’’ என பேசிவிட்டு மாரிமுத்துவை ஓரப்பார்வையால் பார்த்தாள். மாரிமுத்து வெட்கி தலைகுணிந்து தரையை பார்த்துக்கொண்டிருந்தான்.
‘‘ஏய்.. இந்தாம்மா பேச்ச நிறுத்து...’’ என விறுட்டென்று எழுந்தார் நாட்டாமை.
‘‘நம்ம ஊருக்காரங்க இத்தன நாளா சேர்த்து வச்ச மானம், மருவாதிய இந்த புள்ள அந்த ஊர் ஆளுங்ககிட்ட ஏலம்விட்டுட்டு வந்துருக்கா, நீங்க என்னடானா நிக்க வச்சு விசாரிச்சுட்டு இருக்கீங்க’’ நாட்டாமை பேச்சுக்கு அனைவரையும் மவுனத்தில் ஆழ்த்தியது. வள்ளி சுற்றி சுற்றி பார்க்கிறாள். அவளது தரப்பு நியாயத்தை பேசுவதற்கு அல்லது கேட்பதற்கு கூட இங்கு யாரும் இல்லை. மந்தை முழுவதும் நிசப்தம் நிலவியது.
மந்தையின் திண்டில் இருந்த தூசியை துண்டால் தட்டிவிட்டு நாட்டாமை காவக்காரருக்கும், கோடாங்கிக்கும் நடுவில் அமர்ந்தார். இருவரின் காதுகளிலும் குசுகுசுவென சில நிமிடம் முழங்கினார். மருளாடியிடம் வாக்கு கேட்பது போல இருவரும் , ‘‘சரிங்க.. பெருசு, நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்’’ என நாலா பக்கமும் ஆட்டினர்.
‘‘க்க்க்கும்..’’ குரலை சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்தார் நாட்டாமை நல்லதம்பி. ‘‘இங்க பாரு சின்னக்காளை நம்ம ஊருக்கு, நம்ம ஆளுங்களுக்குனு ஒரு கவுரவம் இருக்குது. அது உன் மகளுக்கு புரியல. அவுங்க ஆளுங்க என்ன நினப்பாங்க, ஓடுகாலி பொம்பளைங்கள வளத்துருக்காய்ங்கனு நினைக்க மாட்டாங்களா?’’ என்றார்.
நாட்டாமை சின்னக்காளையிடம் இருந்து திரும்பி மாரிமுத்துவை நோக்கி, ‘‘ ஏலேய், நீயெல்லாம் என்னடா ஆம்பள, பொட்டச்சிய ஊர்ல திரியவிட்டுட்டு வீட்டுல, கோழி புடிச்சுட்டு இருந்தியா’’ என அவேசமாய் வார்த்தைகளை கொட்டினார்.
‘‘இந்த பாரு மாரிமுத்து, ஊரு மானத்த காப்பாத்த இத விட்டா எங்களுக்கு வேற வழி தெரியல. உன்னையும் உன் பொண்டாட்டியையும் ஊரவிட்டு ஒதுக்கி வைக்கிறோம். யாரும் அவங்க கூட அன்னம், தண்ணி புழங்க கூடாது. இனி பேசுறதுக்கு எதுவும் இல்லை பஞ்சாயத்து கலையட்டும்’’ என பேசிக்கொண்டே துண்டை உதறி தோளில் போட்டு கிளம்பினார். அவருடன் காவக்காரரும், கோடாங்கியும் கிளம்பினர். மந்தையில் கூடிய கூட்டம் நடந்தது புரியாமல் மெல்ல கலைந்து சென்றது.
தலையில் அடித்துக்கொண்டு அழுத சின்னக்காளை அழுது கொண்டிருக்க, அருகே தொடச்சென்ற வள்ளியின் கைகளை தட்டிவிட்டு தத்தி தத்தி அடியெடுத்து நடந்தபடியே வீட்டை நோக்கி சென்றார். மாரிமுத்துவும், வள்ளியை பிடித்து எழுப்பி வீட்டை நோக்கி அழைத்து சென்றான்.
காலையில் இருந்து ஆரவாரமாய் காணப்பட்ட மந்தை வெறிச்சோடியது. அங்கிருந்தவர்கள் சென்றதும், ஆடுகளும், நாய்களும் வந்து மந்தையை ஆக்கிரமித்துக்கொண்டன. பெண்கள் காலையில் போட்ட வேலைகளை செய்ய தொடங்கினர். தண்ணீர் தொட்டி அருகே பெண்கள் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. காரசார விவாதமாக, வள்ளியின் பஞ்சாயத்து தீர்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காலை நேரம் 10 மணியை தாண்டியது....
விடிந்தும் விடியாமலும் பஞ்சாயத்து நடைபெற்றுக்கொண்டிருந்ததால் சின்னக்காளை கடையை திறக்கவில்லை. மகளின் நிலையை நினைத்தபடியே சின்னக்காளை கடையை திறந்து வைத்துக்கொண்டிருந்தார். திடீரென்று வீட்டிற்குள் விழுந்தது போல் சத்தம் கேட்டது. சின்னக்காளை போட்டதை போட்ட இடத்தில் விட்டுவிட்டு திடுதிடுவென்று வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
கட்டிலில் இருந்த சின்னக்காளையின் ஆத்தா பூவாயி கீழே விழுந்து கிடக்கிறார். ‘‘ஏ.. ஆத்தா, பெத்தாரே’‘ என ஓடிச்சென்று பூவாயியை தூக்கி மடியில் வைத்து கன்னத்தை தட்டுகிறார் உணர்வு எதுவும் இல்லை. அருகில் டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளிக்கிறார். அப்போதும் எந்த உணர்வும் முகத்தில் தென்படவில்லை, உடம்பில் அசைவில்லை என்றதும் சின்னக்காளைக்கு பதற்றம் அதிகரிக்கிறது. வேகமாய் ஓடிச்சென்று ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் மாலதி வீட்டின் கதவை தட்டுகிறார். மாலதி வெளியே வந்து, ‘‘ என்னண்ணே ஏன், இப்டி மூச்சு வாங்குது. என்ன விஷயம்’’ என கேள்வி கேட்க, சின்னக்காளை நடந்ததை சொல்கிறார். மாலதியும், முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டு சின்னக்காளையும் பூவாயியை பார்க்க வீட்டிற்கு செல்கின்றனர்.
கட்டிலில் கிடக்கும் பூவாயி கைகளை பிடித்து மாலதி பல்ஸ் பார்க்கிறாள். மாலதியின் முகத்தை பதற்றத்துடன் பார்த்து, ‘‘ என்ன மா.. ஆத்தாவுக்கு என்னாச்சு’’ என சின்னக்காளை கேட்கிறார். பூவாயி கண்களை மூடிவிட்டு, ‘‘அண்ணே, ஆத்தா நம்மள விட்டு போயிடுச்சே’’ என்று கூற சின்னக்காளைக்கு கண்கள் இருட்டி, அதே இடத்தில் மயங்கிவிட்டார். மாலதி பதறிப்போய் தண்ணீரை எடுத்து சின்னக்காளை முகத்தில் தெளிக்கிறாள்.
மயக்கத்தில் இருந்து தெளிந்து எழுந்தவர், ‘‘ என்ன பெத்தாளே....நான் பெத்ததையும் இழந்து, என்ன பெத்ததையும் இழந்துட்டு, இப்படி நிக்கிறேன்னு’’ என அழ ஆரம்பித்தார். சின்னக்காளையின் அழுகுரல் கேட்டு, கூட்டம் கூடியது. ‘‘நீயே இப்படி இடிஞ்சு போனா எப்படிண்ணே, ஆத்தாவுக்கு யாரு எடுத்து செய்யுறது’’ என்று மாலதி ஆறுதல் வார்த்தை சொல்லி திண்ணையில் சின்னக்காளையை அமரவைத்தாள்.
அந்த வழியாக சென்ற சிறுவனிடம் காவக்காரர், நாட்டாமை, கோடாங்கியிடம் தகவலை சொல்லி கையோட அழைத்து வர சொல்லி அனுப்பினாள் மாலதி. காலையில் மந்தையில் கூடிய கூட்டம் சின்னக்காளை வீடு முன் கூடியது.பந்தல் போடுபவர் ,கோமாளி கலைஞர், நய்யாண்டி மேளக்காரர், சங்கு சவுண்டி, மைக் செட் காரர் என அனைவருக்கும் தகவல் சொல்ல ஆட்கள் அனுப்பப்பட்டது. பந்தல் வந்து இறங்கும் நேரத்தில், ஊரு முக்கியஸ்தர்கள் மூவரும் சின்னக்காளை வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
‘‘என்னப்பா.. சின்னக்காளை ஆத்தாக்கு இப்படி ஆகும்ணு நினச்சுக் கூட பாக்கலியே’’
‘‘மருதாயி உடம்புக்கு நோவு வந்து நீ பாக்குறதா, நான் பாக்குறதானு படுத்த படுக்கையா கிடந்து அல்லோஅல படாம... கீழ விழுந்ததும் போய் சேந்துடுச்சு’’
‘‘அதுக்குனு, ஆத்தாவ அப்படியே எடுத்துட முடியாது, தேர் கட்டி வாண வேடிக்கையோட ஆட்டம் பாட்டம் சந்தோசமா அனுப்பி வைக்கணும். சரி தான சின்னக்காளை’’
சின்னக்காளை வந்தவர்களின் பேச்சை காதில் வாங்காதபடி திண்ணையில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தார். மூன்று பேரும் சின்னக்காளையையே பார்த்துக்கொண்டிருந்தனர். சின்னக்காளை பித்து பிடித்தது போல் இருந்தார். நாட்டாமை நல்லதம்பி அருகில், ‘‘ ஏ.. இந்தாப்பா.. நீயே இப்டி இடிஞ்சு உக்காந்தா என்ன அர்த்தம். ஆத்தாவ யாரு எடுத்து செய்யுறது. எந்திரிப்பா’’ என்றார்.
தோளில் இருந்த துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டு சின்னக்காளை எழுந்தார். வீட்டிற்குள் சென்று இரும்பு பெட்டியை எடுத்து திறந்து, துணிமணிக்குள் மடித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவரை பிரித்து அதில் இருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து எண்ணினார். அதில் ரூ.5 ஆயிரம் இருந்தது. அதனை எடுத்து வந்து, நாட்டாமையிடம் கொடுத்தார். ‘‘ஐயா, என்கிட்ட இருக்குறது, இப்புட்டு தாங்க. இத வச்சு நீங்களே எல்லாத்தையும் பாத்துக்கோங்க’’ என கையெடுத்து கும்பிட்டு அழுதபடியே தலையில் விழுந்தார்.
அவரை தாங்கி பிடித்து காவக்காரரும், கோடாங்கியும் திண்ணையில் அமர வைத்தனர். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், சங்கு சவுண்டியும், மைக் செட் காரரும் வந்து வேலைகளை ஆரம்பித்தனர்.
‘‘ஆடிய ஆட்டமென்ன... பேசிய வார்த்தை என்ன.. தேடிய செல்வமென்ன...’’ என குழாய் ரேடியோவில் டிஎம்எஸ் குரலில் ஊர் விட்டு ஊர் கேட்டுக்கொண்டிருந்தது. மாரிமுத்துவின் வயலில் கிணத்தருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மாரிமுத்துவிற்கும், வள்ளிக்கும் அந்த சத்தம் கேட்டது.
பொதுவாக கிராமத்தில் சோகப்பாடல் கேத வீட்டில் தான் ஒலிக்கும். வள்ளிக்கு காலையில் நடந்த சங்கதி மட்டுமின்றி மேற்கொண்டு ஏதேதோ சிந்தனைகள் மண்டைக்குள் ஓட மாரிமுத்துவிடம் ஊருக்குள் சென்று என்ன ஏதுவென்று பார்க்கலாம் என்று கேட்கிறாள். மாரிமுத்து மவுனமாய் இருக்கிறான்.
அப்போது, ‘‘ ஏன் ஆத்தா நாளைக்கு இப்டி ஒன்னோட அயித்தகாரி செத்துக் கிடந்தாலும், இப்டி தான் குத்துக்கல்லு மாதிரி உக்காந்து இருப்பியா?’’ என இவர்களுக்கு பின்னால் இருந்து ஒரு குரல் ஒலித்தது. வள்ளியும், மாரிமுத்துவும் திரும்பி பார்க்கின்றனர். அது, வள்ளியின் அத்தை பேச்சியின் குரல். சின்னக்காளையின் கூடப்பிறந்த தங்கை பேச்சி ஒரு முறை வெளியூர் ஆளுங்களுடன் கட்டிட வேலைக்கு சென்ற காரணத்தினால், 5 ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டாள்.
பேச்சியை கண்டதும் ஓடிச்சென்று வள்ளி கட்டிப்பிடித்து கதறி அழ ஆரம்பித்தாள். பேச்சியும் அரவணைத்தபடி அழுதாள். சிறிது நேரம் கழித்து, ‘‘ என்ன ஆத்தா இந்த நேரத்துல இப்படி கிணத்து மேட்டுல உக்காந்து, தம்பியும் நீயும் அழுதுட்டு இருக்கீங்க’’ என கேட்டாள் பேச்சி.
வள்ளியும் கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டு மந்தையில் நடந்தவற்றை கூறினாள். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பேச்சி,‘‘ இவனுங்க புளு புளுத்து தான் சாவ போறாணுங்க. இன்னும் எத்தன பேரு வாழ்க்கையில இப்டி மண்ணு அள்ளி போட காத்துருக்காய்ங்கணு தெரியல. ஊருக்குள்ள எவன் எவனுக்கோ சாவு வருது. இவனுங்களுக்கு ஒரு கேடு நடக்க மாட்டுது’’ என ஆத்திரத்தை கொட்டினாள்.
‘‘ ஆத்தாவ பாத்து வருச கணக்குல ஆச்சு அதுக்கு தான் சீலத்துணி வாங்கி வந்தேன்’’ என லேசான புண்சிரிப்புடன் கூறினாள்.
‘‘ஏதோ கேதம் போல யாரு வீட்டுலனு தெரியுமா?’’
‘‘இல்ல.. அத்தை யாருனு தெரியல. காலையில மந்தையில நடந்த சம்பவத்துல இருந்து மனசு ஒரே பதட்டமா இருக்கு. அதுக்கு தான் இந்த மனுசன கூப்புடுறேன் ஊமசாமியார் கணக்கா உக்காந்துருக்காப்டி’’
‘‘நீ ஒரு கூறு கெட்டவ.அதெல்லாம் ஒன்னும் ஆகிருக்காது. நீயும் வா, ஒரு எட்டு ஆத்தாவ பாத்துட்டு வருவோம்’’ என வள்ளிக்கு ஒரு தைரியத்தை கொடுத்து பேச்சி அழைத்தாள்.
வயக்காட்டில் இருந்து மாரிமுத்து, பேச்சி, வள்ளி என மூவரும் ஊரை நோக்கி கிளம்பினர்.
மந்தை அமைதியாக இருந்தது. ஊருக்குள்ளும் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக தெரியவில்லை. 100 நாள் வேலைக்கு போனவங்க, காட்டு வேலைக்கு போனவங்க என ஊரில் பாதி சனம் வெளியேறிவிட்டது. இவர்கள் மூவரும் ஊருக்குள் நெருங்க நெருங்க பாடல் சத்தம் கொஞ்சம் அதிகமாக கேட்டது. மந்தையில் இருந்து சின்னக்காளை வீட்டு பக்கம் சத்தம் கேட்கவே வள்ளிக்கு பேச்சு மூச்சு இல்லை. அதிலும், இவர்களை தட்டிவிட்டு ஒரு கூட்டம் அழுதபடியே சின்னக்காளை வீட்டை நோக்கி சென்றபோது, அவளது உயிர் உடம்பில் இல்லை.
வெட வெடத்து கால்களை நடக்க பழகும் குழந்தை எட்டு வைப்பது போல் மெல்ல நடந்து சின்னக்காளை வீட்டை பார்க்கிறாள். வாசலில் பந்தல் போட்டு சங்கு சவுண்டி இருப்பதை கண்டு அதிர்ந்தாள். திண்ணையில் இருக்கும் சின்னக்காளை கண்டதும், குளமாய் கண்ணீர் தேங்கி நிற்கிறது.
வள்ளி உறைந்து போய் நிற்க, ‘‘என்ன பெத்தவளே...’’ என மார்பில் அடித்துக் கொண்டு சின்னக்காளையை நோக்கி ஓடினாள் பேச்சி.
‘‘ வருச கழிச்சு உன்ன பார்க்க வந்த சிறுக்கி உனக்கு வாய்க்கரிசி போட தான் வந்தேன்னா. இந்த பாதகத்திய ஊர விட்டு ஒதுக்குனதுனால, நீயும் என் மூஞ்சியில முழிக்க கூடாதுனு போயிட்டியா ஆத்தா’’ என தலைவிரிக்கோலமாய் சின்னக்காளையை கட்டியணைத்து அழுகிறாள் பேச்சி.
பேச்சியின் குரல் கேட்டு ஊர்க்காரர்கள் ஓடி வர, காவக்காரர், நாட்டாமை, கோடாங்கியும் உடன் வந்தனர்.
‘‘இத்தன வருசம் கழிச்சு வந்தவ, இப்படி கிழவி இழவுக்கா வருவா’’
‘‘ம்ம்ம்க்கும், ஊர விட்டு ஒதுக்கி வச்சாலும் வச்சாங்க, பகுமானமா டவுன்ல தான் இருந்தா. இப்போ என்னவா ஆத்தா பாசம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு’’
‘‘டவுன்ல வேலைக்கு போன இடத்துல எவனையோ வச்சுருக்கா போல, பாத்தியாக்கா தாலி இழந்தாலும், இந்த வயசுல காதுல, கழுத்துல எப்படி போட்டு மினிக்கிட்டு இருக்கா’’ என கேத வீட்டில் எட்டி பார்த்த பெண்கள் முந்தானையால் வாயை மறைத்துக்கொண்டு முணுமுணுத்த பேச்சுகளை பேச்சி கேட்டவாறே அழுது கொண்டிருந்தாள். சின்னக்காளைக்கு என்ன செய்வதென்று தெரியாமல், உட்கார்ந்து இருந்தார்.
பேச்சியை சுற்றி ஒரு கூட்டம் கூடவே, கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஊர் பெரியவர்கள் மூவரும் உள்ளே நுழைந்தனர். பேச்சியை கண்டதும், ‘‘ இந்த ஓடுகாலி எதுக்கு இங்க வந்தா?’’ என வானத்திற்கும் பூமிக்குமாக குதித்தார் நாட்டாமை.
‘‘என்ன விட்ட உறவ, இழவுல சேர்த்துகலாம்னு முடிவு பண்ணிருக்கியா சின்னக்காள’’ என்றார் காவக்காரர் கருப்பன்.
கோடாங்கியும் அவர் பங்கிற்கு, ‘‘ என்னப்பா சின்னக்காள இப்படி பேசாம இருந்தா எப்படி, 5 வருசத்துக்கு முன்னாடி அத்துவிட்டவ வந்துருக்கா, காலையில அத்துவிட்டவளும் வந்துருக்கா. உனக்கு அவங்க முக்கியம்னா நாங்க விலகிடுறோம். ஆனா, உன் ஆத்தா புணத்த தூக்க ஊரு சனம் ஒன்னு கூட வராது. நீ... உன் தொங்கச்சி.. உன் மவ.. உன் மாப்ள இவங்கள வச்சு எடுத்து போட்டுக்கோ’’ என மிரட்டினார்.
அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த சின்னக்காளை எழுந்து பேச்சியை இழுத்து தெருவில் தள்ளி விட்டு, ‘‘உன்னால தாண்டி என் கெதி இப்படி கெடக்கு. என்னைக்கு ஓடுகாலியா நீ ஓடுனியோ, உன் புத்தி இப்போ இவளுக்கு வந்துருக்கு. இந்தா பாருங்கடி ஓடுகாலிகளா. அயித்தைக்கும், மவளுக்கும் சேத்து சொல்றேன். என் ஆத்தாள எப்புடி தூக்கி போடணும்னு எனக்கு தெரியும்’’ என வீராப்பை பேசிவிட்டு, மூன்று பேருக்கு பின்னால் சென்று நின்றுகொண்டார்.
தனது தந்தையின் மாற்றத்தை கண்டு கோபமும், அதிர்ச்சியும், அழுகையுமாக நின்றுகொண்டிருந்த வள்ளி மெதுவாக பேச்சி தூக்கி தெருவின் முனையில் அமர்ந்து கொண்டாள்.
‘‘ நீ அழுவாத அத்த. எதுக்கு அழுவுற, இவனுங்க எல்லாம் பெரிய மனுசனுங்களா. இவனுங்க நம்பி அப்பா அப்படி பேசிட்டாரேனு வருத்தபடுறியா. எங்க , ஊர விட்டு ஒதுக்கி வச்சுட்டா ஊர நம்பி இருக்குற பொழப்பு என்ன ஆகுமேனு, அப்படி பேசிட்டு போகுது. சமயத்து ஏற்ப மாறுறது அப்பாக்கு ஒன்னும் புதுசு இல்லையே ’’என பேச்சிக்கு ஆறுதல் சொன்னாள் வள்ளி.
நேரம் சென்றது....
கேதம் கேட்டு ஒவ்வொருவராக சின்னக்காளை வீட்டை நோக்கி வரத் தொடங்கிவிட்டனர்.
‘‘என்ன பெத்தவளே.. உன்ன பாக்கத்தான் போறோம்னு சந்தோசமா இருந்தேன்.
உனக்கு கண்டாங்கி புதுச்சீல சந்தையில வாங்கி வந்தேன்.
ஆனால் பாதகத்தி என்ன விட்டு இப்படி பாதியிலே போயிட்டியே.
நீ பெத்த மக உனக்கு வாய்க்கரிசி கொண்டு
சீயக்காயரப்புக் கொண்டு சீயாளி மேளம் வச்சு ரோசாப்பு மாலை கொண்டு
தலையில நான் அடிச்சு ஓங்கியழுது வந்தா உங்கள் வாசல் உயர்ந்த மரம் ஓசையிடும்’’
என முச்சந்தியில் அமர்ந்து ஓலமிடும் பேச்சியின் குரல் காண்போரை கலங்கச் செய்தது.
நீர்மாலை எடுக்க சின்னக்காளையுடன் ஊர் பெரியவர்கள் புறப்பட்ட போது, பேச்சியும் எழுந்தாள். வள்ளியும், மாரிமுத்துவும் உடன் எழுந்து அவர்களை பின் தொடர்ந்தனர்.
முச்சந்தியை கடந்ததும், இவர்கள் பின்னால் வருவதை பார்க்கிறார் நாட்டாமை.‘‘ஏம்ப்பா , உன் மனசுல என்ன நினச்சுட்டு இருக்க. இவளுக எதுக்கு இப்ப பின்னாடியே வந்துட்டு இருக்காளுங்க. இவளுக தேவையில்லாம நீர்மால எடுக்குற இடத்துல பிரச்சனை பண்ணுவாளுங்க. அதுக்கு முன்னாடி இங்கிருந்து அடிச்சு அனுப்பு முதல்ல, ஏன்டா.. எளந்தாரிகளா உங்களுக்கு வேற தனியா சொல்லணுமா ’’என ஆட்களை ஏவிட்டார்.
இளந்தாரிக் கூட்டம் சின்னக்காளையுடன் விறுவிறுவென சென்று பேச்சி, வள்ளி இருவரையும் பிடித்து தரதரவென்று இழுக்க முயல்கிறது. மாரிமுத்து அவர்களை தடுக்க முயற்சி செய்கிறான். ஆனால், அவனை அடித்து கீழே தள்ளிவிட்டது அந்த கும்பல். சின்னக்காளை மகளையும், தங்கையும் பார்க்காமல் இருவரையும் கன்னத்தில் ஓங்கி அரைந்தார். அவருடன் வந்த இளசுகளும் அவர்களது பங்கிற்கு கண்மூடித்தனமாக தாக்கினர். இரண்டு பெண்களை ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருந்தது.
தூரத்தில் ஒரு சத்தம் ‘‘டேய்.. எதுக்குடா இரண்டு பொம்பளைங்கள போட்டு இப்படி அடிச்சுட்டு இருக்கீங்க’’ என கேட்டது. சுமார் 30 முதல் 35 வயது இருக்கும். நல்ல உயரம், அந்த உயரத்திற்கு ஏற்ப உடல் உருவம். கதர் அரைக்கை சட்டை வேஷ்டி அணிந்து தோளில் சிவப்பு துண்டு அணிந்திருந்தது அந்த உருவம். அந்த ஊரில் இதற்கு முன்பு அந்த குரலையோ, அப்படிபட்ட உருவத்தையோ யாரும் பார்த்தது கிடையாது.
குரல் கேட்ட அந்த உருவம் சைக்கிளில் அருகே வந்தது. இந்த கும்பலின் அருகே வந்து சைக்கிளை நிறுத்திவிட்டு, ‘‘ஏய்யா.. பெரிய மனுசனுங்களா ரெண்டு பொம்பளைங்களா போட்டு அடிச்சுட்டு இருக்காங்க வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க’’ என ஆவேசமாக பேசியது அந்த உருவம்.
‘‘தம்பி இது உங்களுக்கு தேவையில்லாத வேலை. ஆமா, முதல்ல நீங்க யாரு’’ என இரண்டடி முன்னே வந்து கேட்டார் காவக்காரர் கருப்பையா.
‘‘என்னோட பேரு மதியழகன். பக்கத்துல இருக்குற சாம்பிராணிபட்டி தான் எங்க ஊரு. நாங்க தொழிற்சங்கம் வச்சுருக்கோம். கிராமம் கிராமமா போய் தொழிலாளர்களை ஒன்று திரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வர்றோம். அப்படி தான் இந்த ஊருல கூட்டம் போட அனுமதி கேட்டு வந்தேன்’’
‘‘ ஓஹோ, புரட்சிக்கார கூட்டமா...! இங்கப்பாருப்பா எங்க ஊருக்காரங்க எல்லாருக்கும் போதுமான அளவு விழிப்புணர்வு இருக்கு நீ நடைய கட்டு’’ என்றார் கோடாங்கி.
‘‘அதான் பாத்தேனு இரண்டு பொம்பளைங்கள ஒரு ஊரே அடிக்கிறத.’’
‘‘ தம்பி, உனக்கு அவ்ளோ தான் மரியாத. ஒழுக்கமா கிளம்பிடு அம்புட்டு தான்’’ என நாட்டாமை பேசிவிட்டு அனைவரையும் ஜரூர் படுத்தினார். அந்த கும்பலும் அவர்கள் இருவரையும்விட்டு விட்டு கிளம்பியது.
மதியழகன் சென்று கீழே விழுந்து கிடந்த மாரிமுத்துவை தூக்கி திண்ணையில் அமர வைத்தான். பேச்சிக்கும், வள்ளிக்கும் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. மதியழகன் இருவரையும் பார்த்து, ‘‘ கேக்குறேனு தப்பா நினைக்காதீங்க. என்ன நடந்துச்சு, ஏன் அவங்க உங்கள அடிச்சாங்க’’ என கேட்டான்.
வள்ளியும் காலையில் மந்தையில் நடந்த்தில் இருந்து இப்போது நடந்தது வரை அனைத்தையும் அழுதபடியே கூறினாள். மதியழகன் இரண்டு நிமிடம் யோசித்தான். பேச்சியை பார்த்து, ‘‘உங்களுக்கு உங்க அம்மாவ பார்க்கணும், அவங்களுக்கு இறுதி சடங்கு செய்யணும். அவ்ளோ தான’’ என்றான்.
‘‘ஆமாம், சாமி என் ஆத்தாவ கடைசியா ஒருதடவ பார்த்து அவ மாருல கதறி அழணும்’‘ என மதியழகனின் கைகளை பற்றிக்கொண்டு அழுதபடியே கெஞ்சினாள்.
‘‘சரி, என் கட கொஞ்சம் டவுன் முடிய வாங்க. மத்த விஷயங்களை அங்க வச்சு பேசிக்கலாம்.’’ என கூறிவிட்டு மதியழகன் முன்னே சைக்கிளை நோக்கி நடந்தான். மூவரும் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்து, சரியென்றபடியே மதியழகனை பின் தொடர்ந்து சென்றனர்.
நேரத்திற்கு வர வேண்டிய டவுன் பஸ் அன்று பார்த்து வரவில்லை. அந்த வழியாக வந்த டிராக்டரை மதியழகன் வழி மறித்தான். 4 பேரும் அதில் ஏறி டவுனை நோக்கி புறப்பட்டனர். டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறம் உள்ள டீக்கடை முன்பாக நின்றது. அனைவரின் கீழே இறங்கினர். அனைவரையும் டீக்கடையில் அமர வைத்த மதியழகன். ஆளுக்கொரு டீ சொன்னான்.
‘‘தம்பி அதெல்லாம் வேண்டாம்ப்பா. எனக்கு எங்க ஆத்தாவ பாக்குறவரைக்கும் பச்சத் தண்ணி பல்லுல படாது’’ என்றாள் பேச்சி.
‘‘ உங்க ஆத்தாவ பார்த்து அழுக தெம்பு வேண்டாமா? அதுக்காவாச்சும் இத குடிங்க’’என்று கூறிவிட்டு, மாரிமுத்துவை அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றான் மதியழகன்.
சில நிமிடங்கள் கழித்து, போலீஸ்காரர்களுடன் இருவரும் வெளியே வந்து ஜீப்பில் ஏறினர். மாரிமுத்துவும் ஓடி வந்து டீக்கடையில் இருந்த பேச்சியையும், வள்ளியையும் அழைத்துக் கொண்டு ஜீப்பை நோக்கி சென்றான். முன் இருக்கையில் எஸ்ஐ , பின் இருக்கையில் இரண்டு போலீசார் மற்றும் மதியழகன் அமர்ந்திருந்தான்.
‘‘வாங்க, வந்து வண்டியில ஏறுங்க’’ என இருவரையும் அழைத்தான். மாரிமுத்து, வள்ளி, பேச்சி மூன்று பேரும் ஜீப்பில் ஏறி ஒட்டக்குடி கிராமத்தை நோக்கி சென்றனர்.
சுமார் 15 நிமிடத்தில் பறந்து சென்ற ஜீப் ஊருக்குள் நுழைந்தது. சின்னக்காளை வீட்டை நோக்கி போலீசாருடன் மதியழகன் சென்றனான். நீர்மாலை எடுக்க சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லை. போலீசார் சின்னக்காளை வீட்டின் முன் அனைவரும் காத்திருந்தனர். தூரத்தில் சங்கு சவுண்டி சத்தத்துடன் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
எஸ்ஐ பேச்சி மற்றும் வள்ளியை உள்ளே சென்று மருதாயி உடலை பார்க்க சொன்னார்.
‘‘சார் இது ஊர் கட்டுப்பாடு. எங்களுக்கு எதுக்கு வம்பு. எதுவா இருந்தாலும் அந்தா வர்ராங்கள ஊருக்காரங்க அவங்க கிட்ட பேசிக்கோங்க’’ என அங்கிருந்தவர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து வாசலிலே தடுத்து நிறுத்தினர்.
நீர்மாலை எடுத்து வந்தவர்கள் வாசலில் நின்ற போலீசாரை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
‘‘ஏன் சார், என்ன விவகாரமா வந்துருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா?’’ என்றார் நாட்டாமை.
‘‘ இந்தா பாருங்கய்யா, இந்தா இருக்காங்களே பேச்சி அவங்க அம்மாவோட சடலத்த பார்க்க கூடாது. அவங்க இறுதி சடங்கு செய்யக்கூடாதுனு சொல்லியிருக்கீங்க. அதுனால அவங்க போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துருக்காங்க. அந்த புகாரின் பேருல நடவடிக்கை எடுக்க வந்துருக்கேன். நீங்க மரியாதை ஒத்துழைப்பு கொடுத்தா நல்லா இருக்கும்’’ என பேசி முடித்தார் போலீஸ் எஸ்ஐ.
‘‘சார் நீங்க சொல்றது வாஸ்தவம் தான். ஆனால், இவங்கள ஊர விட்டு ஒதுக்கி வச்சுருக்கோம். அதுனால ஊரு கட்டுப்பாட்ட மீற முடியாது. அதே மாதிரி இந்த ஓடுகாலிகள நம்பி சார் இவ்ளோ தூரம் வந்துருக்க கூடாது. இது எங்க ஊரு விவகாரம் நீங்க தலையிட வேண்டாம்’’ என சிரித்தபடியே காவக்காரர் பேசிக்கொண்டிருக்கும் போது, எஸ்ஐ பளார் என்று கருப்பையா கன்னத்தில் அரைந்தார்.
சுற்றி இருந்த கூட்டம் அமைதியானது. நாட்டாமை தோளில் இருந்த துண்டை எடுத்து வியர்வை பதட்டத்துடன் துடைத்தார்.
‘‘என்ன தைரியம் இருந்தா ஓடுகாலி, அது இதுனு என்னையவே இதுல தலையிடாதீங்கனு சொல்லுவீங்க’’ என்ற எஸ்ஐயின் கம்பீரக்குரல் கோடாங்கி உடுக்கை இல்லாமலேயே அரண்டுவிட்டார்.
‘‘இங்க பாருங்க, ஒழுங்கா ஒத்துழைச்சா அமைதியா இறுதி ஊர்வலம் நடக்கும். இல்லைனா, மருதாயி அம்மாவ ஜிஹெச்சுக்கு கொண்டு போயிடுவோம். அங்க படிக்குற மெடிக்கல் ஸ்டூடன்ஸ்க்கு அவங்க யூஸ் ஆவாங்க’’ என ஒரே போடு போட்டார்.
ஒட்டுமொத்த ஒட்டக்குடியும் ஒரு நிமிடம் அமைதியானது.
சின்னக்காளை காதருகே சென்ற நாட்டாமை,‘‘ என்ன, இவளுக போலீச கூட்டிட்டு ஆட்டம் போட்டுட்டு இருப்பாளுக. நீயும் பாத்துட்டு இருக்க. இப்படியே போனா நாம ஆம்பளையா இருக்குறதுக்கே அர்த்தம் இல்ல. போய் நான் தான் அந்த அம்மாவோட மவன் எனக்கு தான் உரிமை இருக்குனு சொல்லு’’ என தூண்டிவிட்டார்.
எஸ்ஐ பேச்சியை திரும்பி பார்த்து ‘‘ ஏம்மா, அவங்க சொல்றதுலயும் நியாயம் இருக்குதுல’’ என்றார்.
‘‘ஏன்.. சார் இன்னும் எத்தன காலத்துக்கு இவீங்க இப்படி நாட்டாமத்தனம் பண்ணிட்ட்டு இருப்பாய்ங்க,. அத நாங்க பார்த்துட்டு இருக்கணும். வயித்து பொழப்புக்கு வேலை இல்லையேனு, பக்கத்து ஊருக்காரங்க வேலைக்கு கூப்டாங்க. பசியா, வறட்டு கவுரவமானு பார்த்தா பசி ஜெயிச்சிடுச்சு. ஆனால், இவனுங்க என்னைய ஓடுகாலினு முத்திரை குத்தி இப்படி ஊர விட்டு ஒதுக்கி வச்சுட்டாய்ங்க. அவங்க கூட யாரும் பேசக்கூடாது, பழகக்கூடாது. சொந்த ஊருக்குள்ளயே அகதி மாதிரியே, திரிய வச்சுட்டானுங்க. இந்த அவமானம் சில பேரு, ஊரவிட்டே போயிட்டாங்க. இவனுங்க கிட்ட போய் நியாயத்தை எதிர்பாக்குறீங்களே’’ என கண்ணீர் விட்டு கதறி அழுதாள் பேச்சி.
பேச்சியின் அழுகையை பெரிதாக பொருட்படுத்தாமல், நாட்டாமை நமட்டு சிரிப்பு சிரித்த்தை எஸ் ஐ கவனித்துவிட்டார். எஸ் ஐக்கு அப்போது இந்த ஊரை மூவரும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, நாட்டாமைத்தனம் செய்து வருவது புலப்பட்டது.
போலீஸ் எஸ்ஐ உடன் வந்த போலீஸ்காரர்களை அழைத்தார்.
‘‘யோவ்.. உடனே ஆம்புலன்ஸ் வர சொல்லி, இறந்து போன மருதாயி அம்மா பாடிய ஜிஹெச்க்கு எடுத்துட்டு போக சொல்லுங்க. ரெண்டு பேரும் இதுல ஒரு முடிவுக்கு வர மாதிரி தெரியல. மருதாயி ஆத்தாவுக்கு நாமலே காரியம் செய்ஞ்சுக்கலாம்’’ என உத்தரவிட்டார்.
உடனே, ஆம்புலன்ஸ் அழைத்து வர போலீஸார் புறப்பட்டனர். அங்கிருந்த கூட்டத்திற்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நாட்டாமை, கோடாங்கி, காவக்காரர் ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர். பேச்சியும், வள்ளியும் ஏதோ பெரிய யுத்தத்தில் வெற்றி பெற்றது போல கண்ணில் ஆனந்தம் தோன்றியது. ஆனால், கடைசிவரை எங்கு மருதாயி முகத்தை பார்க்க முடியாத ஏக்கமும் இருந்தது.
நாட்டாமை, காவக்காரர், கோடாங்கி மூவரும் சின்னக்காளையை ஓரமாக அழைத்து சென்றனர். ‘‘இங்க பாரு சின்னக்காளை, உன் மவ செஞ்சத கூட ஒரு விதத்துல மன்னிச்சு விட்டுறலாம்னு வச்சுக்க. ஆனால், இப்போ உன் தங்கச்சி பண்ணிருக்கா பாரு. அத மன்னிக்கவே முடியாது. நம்ம மரியாத, நம்ம ஊரு மரியாத எல்லாத்தையும் இவ காத்துல பறக்க வச்சுட்டா. பத்தாதுக்கு இந்த போலீஸ்காரன கூட்டிட்டு வந்துட்டு நம்ம இத்தன நாளா கட்டிக்காத்து வந்த கவுரவம் எல்லாத்தையும் கெடுத்துட்டா. இதுக்கு மேல அவள உயிரோட விட்டா நாம மீச வச்சுட்டு வேட்டி கட்டி திரியுறதுக்கு அர்த்தம் இல்லை’’ என நாட்டாமை தூபம் போட ஆரம்பித்தார்.
‘‘ஆமான்யா, இவளுக இப்படி ஆட விட்டா அது சரியா இருக்காது. அப்புறம் ஊருக்குள்ள ஒரு பொம்பளைங்க நம்மள மதிக்கமாட்டாளுக. அப்ப நாம இத்தன நாளா கட்டி வச்சு காத்த்தெல்லாம் என்ன அர்த்தம்’’ என கோடாங்கியும் சின்னக்காளைக்கு தூபம் போட்டார்.
இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஆம்புலன்ஸும் வந்து சேர்ந்தது. எஸ்ஐ மருதாயி உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற உத்தரவிட்டார். மருதாயி உடல் ஆம்புலன்ஸில் ஏற்ற ஸ்டெரச்சரை எடுத்துக்கொண்டு மருத்துவ பணியாளர்கள் சென்றனர். சின்னக்காளைக்கு நாட்டாமை,கோடாங்கி போட்ட தூபாஅம் லேசாக புகைய ஆரம்பித்தது. மருதாயி உடலை ஸ்டெரச்சரில் வைத்து எடுத்து வருகின்றனர். அங்கிருந்த பேச்சியும், வள்ளியும் உடலை பார்த்து கதறி அழுகின்றனர்.
ஈமசடங்கு செய்ய வந்தவரின் கையில் இருந்த அரிவாளை எடுத்து பேச்சியை நோக்கி ஓடினார் சின்னக்காளை.
‘‘உன்னாள தான் டி, என் குடும்பம் மான மரியாத எல்லாம் போச்சு’’ என பேச்சியை வெட்டினார். அங்கிருந்த கூட்டம் அலறி ஓடியது. சின்னக்காளையை எஸ்ஐ பிடிக்க வருவதற்குள், பேச்சிக்கு சரமாரியாக வெட்டு விழுந்த்து. தடுக்க சென்ற வள்ளி, எஸ் ஐக்கும் வெட்டு விழுந்தது. ஒட்டக்குடி கிராமம் முழுவதும் ஓலச் சத்தம். குலதெய்வ கோயிலில் கிடா வெட்டிய போது, துடித்த ஆட்டுக்கிடாய் போல பேச்சி சம்பவ இடத்தில் துடி துடித்து மயங்கினாள்.
சுற்றி இருந்த மக்கள் வந்திருந்த ஆம்புலன்ஸில் மருதாயி,பேச்சி, வள்ளி, எஸ்ஐ என அனைவரையும் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற சின்னக்காளையை மதியழகனும், மாரிமுத்துவும் பிடித்து அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். சின்னக்காளை ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் போலீஸ் ஜீப்பில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அந்த மந்தை முழுவதும் ரத்தக் காடாய் காட்சியளிக்கிறது.
இந்திய வரைபடத்தில் கண்டுபிடிக்க முடியாத ஒட்டக்குடி கிராமத்தில் பெயர் பேசுபொருளானது. மாலை நேர செய்திதாள்களில் நடந்த சம்பவம் செய்தியாக வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டக்குடி கிராம சம்பவம் கலெக்டர் வரை செல்ல, தாசில்தார் தலைமையில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
முதற்கட்ட தகவலை விசாரிக்க தாசில்தார் பெருமாள் போலீஸ் ஸ்டேஷன் சென்று சின்னக்காளையிடம் விசாரித்தார்.
‘‘ஏன்யா, எந்த காலத்துல வந்து ஊரு கட்டுப்பாடு, அந்த கட்டுப்பாடுனு எங்க தாலியை அறுக்குறீங்க. ஆளும் மூஞ்சியும் பாரு. உன் கூட தங்கச்சி தான, அவள போய் இப்படி காட்டுமிராண்டி தனமா வெட்டியிருக்க. தட்டுக்க வந்த உன் மகளையும் வெட்டியிருக்க. ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிருந்தா, என்ன பண்ணிருப்ப?’’ என அடுத்தடுத்த கேள்விகளால் தாசில்தார் சின்னக்காளையை சின்னாபின்னமாக்கி கொண்டிருந்தார்.
‘‘இவளுக இப்படி பண்ண எங்க ஊரு ஆளுங்க மத்தியில என் கவுரவம் என்ன ஆகுறது’’ என எதிர் பேச்சு பேசினார் சின்னக்காளை.
‘‘யோவ். வாயில எதாச்சு வந்துட போகுது. உன்ன புடிச்சுட்டு வந்து, 3 மணி நேரமாச்சு. உன்ன தூண்டி விட்டவன், எவனாச்சும் இந்த பக்கம் எட்டி பார்த்தானா?. அவ்வளவு தான் உங்க கவுரவத்த தூக்கி கவட்டைல போடுங்க’’
‘‘ஐயா, இப்போ நான் என்ன பண்றது’’
‘‘ம்ம்ம்ம்.. நடந்தத சொல்லிட்டு, போய் ஜெயில்ல இரு’’
‘‘இத நானா செய்யல, எங்க ஊரு ஆளுங்க சொல்லி தான் செஞ்சேன்’’
‘‘யாரு? உங்க ஊர் ஆளுங்க’’
‘‘நாட்டாமைக்காரரு, கோடாங்கி, அப்புறம் காவக்காரரு’’
‘‘ஓஹோ.. அப்படியா சங்கதி’’ என விபரங்களை எழுதி சின்னக்காளையிடம் கை நாட்டு வாங்கிவிட்டு பெருமாள் ஒட்டக்குடி கிராமம் நோக்கி புறப்பட்டார்.
ஒட்டக்குடி கிராமமே ஒட்டு மொத்தமாய் உறைந்து போய் மந்தையில் அமர்ந்திருந்தது.
‘‘என்னய்யா, ஊருக்குள்ள இப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு, இப்போ என்ன பண்றது.’’ என கூட்டத்தில் இருந்து குரல் ஒலித்தது.
‘‘ம்ம்ம்.. என்ன இருந்தாலும், பொம்பள புள்ள மேல சின்னக்காளை கை வச்சுருக்க கூடாது. பொம்பளைங்கள சாமி கும்புடுற நம்ம ஊருல, இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க கூடாது. ஆனாலும் நடந்துருச்சு, அந்த ஆத்தா மகமாயி என்ன பண்ண காத்திருக்காளோ?’’ என்றார் நாட்டாமை நல்லதம்பி.
‘‘அது சரிங்க, நாட்டாமை அதுக்கு இப்போ என்ன தீர்வு நீங்க சொன்னா தான தெரியும்’’ என்றார் கோடாங்கி.
‘‘ அதாவது, இதுக்கு முன்னாடி நம்ம ஊருக்கு போலீஸ் அது, இதுனு யாரும் வந்தது கிடையாது. ஆனா, இப்போ சின்னக்காளை குடும்பத்தால இப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு, நம்மனாள போலீஸ் ஸ்டேசன் கோர்ட்டுனு போக முடியாது. அது நம்ம ஆளுங்களுக்கு ரொம்ப அவமானம். அதுனால, இப்போ என்ன சொல்ல வர்றேன்னா, சின்னக்காளை குடும்பத்தால தான் இந்த நிலைமை நமக்கெல்லாம். அதுனால சின்னக்காளையையும் இந்த ஊர விட்டு ஒதுக்கி வைக்கிறோம். அவனுக்கு யாரும் வக்காலத்து வாங்கி போலீசு, கோர்ட்டுனு போகக்கூடாது. என்ன சொல்றது புரியுதா’’ என பேசி முடித்தார் நாட்டாமை.
அப்போது, ஊருக்குள் ஜீப் வரும் சத்தம் கேட்டு மந்தையில் இருந்த சனம் திரும்பி பார்த்தது. மூன்று ஜீப்பில் சுமார் 10க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அவர்களுடன் தாசில்தார் பெருமாளும் உடன் வந்திருந்தார்.
‘‘என்னய்யா, இப்போ தான் ஒரு பிரச்னை நடந்து முடிஞ்சு சூடு குறையல, அதுக்குள்ள அடுத்து என்ன பிரச்னை பண்ணலாம்னு கூட்டம் போட்டு டிஸ்கஸ் பண்றீங்களா?’’ என ஜீப்பை விட்டு இறங்கி பேசியபடி கூட்ட்த்தை நோக்கி நடந்தார் தாசில்தார் பெருமாள்.
‘‘ஐயா, நீங்க யாரு’’ என்றார் நாட்டாமை.
‘‘நான் தான் தாசில்தார் பெருமாள். உங்களுக்கு சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் கொடுக்குறது நான் தான். அது சரி மழைக்கூட பள்ளிக்கூடத்துக்கு ஒதுங்காத உங்களுக்கு இதெல்லாம் தெரிய போகுது’’ என சிரித்தப்படியே பேசினார் தாசில்தார்.
‘‘சரிங்க, உங்களுக்கு இங்க என்ன சோலி’’ என்றார் காவக்காரர்.
‘‘அது சொல்றேன் பெரியவரே. அதுக்குள்ள என்ன அவசரம்’’ என கூறிவிட்டு ஒவ்வொருத்தரின் முகத்தையும் பார்த்தார்.
‘‘சரி, இங்க நாட்டாமை நல்லதம்பி யாரு?’’ என்றார் தாசில்தார்.
‘‘நான் தான் நாட்டாமை நல்லதம்பி’’
‘‘சரி, உங்க கூட இருக்குற மத்த ரெண்டு பேரு’’
‘‘ இவங்க தான் ’’ என இருவரையும் கை காட்டினார் நாட்டாமை.
‘‘சரி மூனு பேரும் வந்து வண்டியில ஏறுங்க’’என்றார் தாசில்தார்.
‘‘சார், எங்க வந்து என்ன பேசிட்டு இருக்கீங்க. அந்த சின்னக்காளை என்ன சொன்னான்?. அவன இந்த ஊர விட்டு ஒதுக்கி வச்சாச்சு. அவனுக்கும் எங்க ஊருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவையில்லாம பிரச்னைய கிளம்ப்பாம ஊரு போய் சேருங்க’’ என மிரட்டும் தொணியில் பேசினார் நாட்டாமை நல்லதம்பி.
‘‘சொன்னா கேளுங்க மரியாதையா வந்து வண்டியில ஏறுங்க. இல்லையினா அடிச்சு இழுத்துட்டு போக ஆட்கள் ரெடியாக இருக்காங்க. எப்படி வசதி’’ என்றார் தாசில்தார்.
தாசில்தார் பேசி முடித்ததும், போலீஸ் ஜீப்பில் இருந்து போலீஸ்காரர்கள் வண்டியில் இருந்து இறங்கினர். மந்தையில் இருந்த கூட்டம் சட்டென்று எழுந்தது. போலீஸ்காரர்கள் மந்தையை சுற்றி இறங்கியதும், கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு வரவில்லை. அந்த போலீஸ் கூட்டத்திற்கு நடுவே மதியழகனும் நின்று கொண்டிருந்ததை பார்த்த, நாட்டாமை நல்லதம்பி ஆவேசத்துடன் கத்தினார்.
‘‘இவனாள தான் எல்லா நடந்துச்சு. முதல்ல இவன புடிச்சுட்டு போங்க’’ என ஆத்திரம் பொங்க கத்தினார் நாட்டாமை.
அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த தாசில்தார் பெருமாள், ‘‘இங்க பாருங்க, எனக்கு நிறைய வேலை இருக்கு வண்டியில ஏறுங்க’’ என்றார்.
‘‘ யோவ் என்னய்யா, நாட்டாமை ஐயா சொல்லிட்டு இருக்காரு. நீ என்னமோ உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க’’ என எகிறினார் காவக்காரர் கருப்பன்.
‘‘ம்ம்ம்.. இது சரிப்பட்டு வராது. என்னையவே மிரட்டுறீங்களா. போலீஸ் சார் நீங்களே கவனிச்சு வண்டியில ஏத்துக்க. மதியழகன் வாங்க போகலாம்’’என சொல்விட்டு ஜீப்பை நோக்கி நகர்ந்தார் தாசில்தார் பெருமாள்.
மந்தையை சுற்றி வளைத்த போலீசார் நாட்டாமை, காவக்காரர், கோடாங்கி மூன்று பேரையும் தரதரவென்று இழுத்துக்கொண்டு ஜீப்பில் ஏற்றினர்.
தொட்டு பிடித்து இழுத்த போலீஸை தள்ளிவிடவே, நாட்டாமைக்கு கன்னத்தில் பளார் என்று விழுந்தது. மூவரும் நடத்திய களேபரத்தில் மந்தை முழுவதும் புழுதிக்காடானது. காலை தொடங்கி மாலை வரை பரபரப்பாக காணப்பட்ட ஒட்டக்குடி பொழுதுசாய மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.
பொழுது விடிய வயலுக்கு வேலை சென்றவர்கள் பொழுது சாய ஊருக்குள் வந்தவுடன், நடந்த கதைகளை விளக்கு வைத்து ஊரே பேசிக்கொண்டிருந்தது. வீடுகளுக்குள் உலை கொதித்ததை விட வாசல்களில் தான் உலை கொதித்துக்கொண்டிருந்தது. சூரியன் விடை பெற்றுச் செல்ல இருள் சூழ்ந்தது. ஊருக்கதைகளை பேசிவிட்டு சனங்கள் உறங்க சென்றனர். ஊர் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் செல்ல, ஆந்தைகளும் கோட்டான்களும் விழித்து கொண்டு இரவினை கொண்டாடிக்கொண்டிருந்தது.
பொழுது விடிந்தது..
மந்தையில் மீண்டும் ஊர் மக்கள் கூட்டமாய் கூடி ஒருவருகொருவர் பேசிக்கொண்டிருந்தது. அதிகாரி ஒருவர் மந்தை அருகில் மரத்தில் ஒரு நோட்டீஸை ஒட்டுகிறார். அங்கிருந்த மக்களுக்கு , ஒன்றும் விளங்கவில்லை. நோட்டீஸ் ஒட்டிவிட்டு திரும்பிய அதிகாரியை வழிமறித்து, ‘‘ஆபீஸர் ஐயா, இது என்னங்க’’ என ஊர்மக்கள் கேட்டனர்.
‘‘உங்க ஊருல நடந்த சம்பவத்திற்கு காரணமான நாட்டாமைக்காரரு, கோடாங்கி, காவக்காரரு, சின்னக்காளை எல்லாரையும் கைது பண்ணிட்டாங்க. அதுமட்டுமில்லாம, மனுசங்கள மனுசன் பேசக்கூடாது பழகக்கூடாதுனு ஊரவிட்டு ஒதுக்கி வைக்கிறது தப்பு. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி கட்டப்பஞ்சாயத்து நடத்துன மந்தையும் இடிக்கப்படும்னு போட்டுருக்கு’’ என்றார் அதிகாரி.
‘‘ஐயா, அதுக்கு கீழ ஒருத்தரோட படம் போட்டுருக்கு. அது யாருங்க. அங்கையும் ஏதோ எழுதியிருக்கு. கொஞ்சம் அதையும் படிச்சு சொல்லுங்க’’ என்றனர் ஊர் மக்கள்.
கிழிஞ்சது, அவர் யார்னு கூட தெரியாம இப்படி ஆட்டுமந்தைகளா வாழ்ந்துருக்கிறீங்களே என நினைத்துக்கொண்டார் அதிகாரி.
‘‘ அது வந்து என்ன போட்டுருக்குனா, சமுதாய முன்னேற்றம் ஒடுக்குமுறையாலும் சாதியின் பெயராலும் கட்டப்பட்ட கட்டுகதைகள் உடைக்கப்படும், அடிமைத்தனம் ஒழிக்கப்படும், செயல்களில் பகுத்தறிவு பிறக்கும், தனி மனித ஒழுக்கம் பெருகும், மனித நேயம் உருவெடுக்கும். ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை,தீண்டாமை அடிமைத்தனத்தை விட ஆபத்தானது. அப்படினு போட்டுருக்கு. அந்த படத்துல இருக்குறது அம்பேத்கர் ’’ என்றார் .
ரொம்ப படிச்ச மனுசன் போல எல்லாத்தையும் சரியா தான் சொல்லிருக்காரு என பேசிக்கொண்டே மந்தை கூட்டம் கலைந்தது.
மந்தையை இடிக்க பொக்லைன் இயந்திரமும் தயாராக இருந்தது.
_முற்றும்_