ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா

பாரெங்கும் கண்டதில்லை
பாதியிலே வளைந்த மூங்கில்
பல்லாக்கின் தூக்குபிடியாய்
பார்வையிலே பட்டதொன்று!

பின்னாளில் வளைத்திருந்தால்
பின்னமாகி போகுமென்று
பருவத்திலே வளைத்ததனை
பாங்காக வடிவமைத்தார்!

இளம்மூங்கில் வளைந்ததாலே
இயம்பும் மொழி கேட்டது
இன்னும் பாரம் ஏற்றினாலும்
இன்முகத்துடன் ஏற்றது!

ஐந்திலே வளையாதது
ஐம்பதில் வளையுமா? என்றே
அனுபவ பாடமொன்றை
அம்மூங்கில் உரைத்தது!

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (3-Sep-24, 5:12 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 41

மேலே