‘ஆசிரியர்’ பெயர் உருவான கதை

அந்த காலத்தில் குருகுலம் வழியில்தான், மாணவர்கள் பயின்று வந்தார்கள். வயலூரில் இருந்த ஒரு நெல்வயல் பக்கத்தில், நெல்லையப்பர் எனும் குரு, சுமார் பத்தொன்பது மாணவர்களுக்கு கல்வி போதித்து வந்தார். அதிகமான மாணவர்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். மாத ஆரம்பத்தில் மாணவர்கள், குருவுக்கு ஒண்ணேகால் படி நெல்லை காணிக்கையாக கொடுத்துவந்தனர்.
ஒரு நாள், நெல்லையப்பரின் மனைவி தொல்லையம்மா "நெல்லை அரிசியாக்குவதற்கு மிகவும் உழைக்கவேண்டியிருக்கிறது. வெளியிலிருந்து ஆளை போட்டு செய்தால், கொடுக்கும் கூலியிலேயே பாதி நெல் தீர்ந்துவிடுகிறது. எனவே அடுத்த மாதத்திலிருந்து, ஒவ்வொரு மாணவரையும் ஒரு படி அரிசியை கொடுக்கச்சொல்லுங்கள்" என்று புலம்பினாள்.
நெல்லையப்பர் மாணவர்களிடம் இதைக் கூறினார். அப்போது ஐந்தாவது வரிசையில் ஐந்தாவதாக அமர்ந்திருந்த ஐந்துகரத்தான் (ஆறுமுகத்திற்கும், அஞ்சலைக்கும் பிறந்தவன்) எனும் மாணவன், ஐந்து விரல்களை கோர்த்துக் கொண்டு, பரபரப்பான குரலில் "நெல்லையப்பராக இருந்த நீங்கள், அரிசியப்பர் ஆகிவிட்டீர்கள்" என்றான். அன்றிலிருந்து எல்லா மாணவர்களும் குருவை அரிசியப்பர் என்றே அழைக்கத்தொடங்கினர்.
ஒருவருடம் கழித்து, நெல்லையப்பரின் தொல்லை தாளாமல் தொல்லையம்மா, இரண்டாவது முறையாக இரட்டை குழந்தைகளை பெற்றாள். ஒருநாள், தொல்லையம்மாவின் தொல்லை தாங்கமுடியாமல் நெல்லையப்பர் "அடுத்த மாதம் முதல், நீங்கள் ஒண்ணரை படி அரிசி தரவேண்டும்" என்று மாணவர்களிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆபத்பாண்டவன் (அவன் தம்பி அனாதரட்சகன்) எனும் மாணவன் "அரிசியப்பரே, நீங்கள் சொல்வது எங்களுக்கு கட்டுபடியாகாது, எங்களுக்கே அவ்வளவு அரிசி கொள்முதல் ஆகாது” என்று அரிசித்தபடியே, இல்லை, சிரித்தபடியே கோபத்துடன் கேட்டான்.
குரு "நீங்கதான் என் வாழ்க்கையில் ஆபத்பாண்டவர்கள். எங்களுக்கு மீண்டும் இரட்டை குழந்தை பிறந்திருப்பதால், தட்சிணையைக் கொஞ்சம் உயர்த்தினேன்" என்றார்.
அப்போது, ஏணியப்பன் எனும் மாணவன் (வகுப்பிலேயே குள்ளமானவன்) "ஆ..ஆ. என்ன இது அரிசியப்பரே? ரொம்ப அநியாயமாக இருக்கே? என்று வகுப்பே அதிரும்படி, பணிவுடன் முறையாக முறைத்துக் கேட்டான்.
குரு "நீங்கள் முறையுங்கள். ஆனால், அரிசியை குறைக்காதீர்கள்." என்று அழுதார்.
எட்டடி தூரம் எட்டி அமர்ந்திருந்த எட்டையப்பன் " இவரை இனி ஆ..ரிசியப்பர் என்று அழைக்கவேண்டும்" என்றான். இப்படியாகத்தான், எல்லா குருவையும் ஆரிசியப்பர் என்று சொல்வது பின்னர் வழக்கமானது.
காலப்போக்கில், வாய் கோணிய போக்கில் ஆரிசியப்பர் என்பது மழுங்கி, புழுங்கி, ஆசிரியப்பர் என்றானது. பின்னர் வந்த சில மாயாஜால பேர்வழிகள், 'ப்ப' என்ற இரு எழுத்துக்களை, யாருக்கும் தெரியாமல் திருடிக்கொண்டு போய்விட்டனர் (இன்றுவரை, இந்த 'ப்ப' வை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று எவராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை).
இப்படிப்பட்ட சங்கடங்களினால், ஆசிரியப்பர் என்பது தேய்ந்து, உருகி, மருவி, இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் ஆசிரியர் என்றாகிவிட்டது.

வாழ்க ஆசிரியர் தொண்டு! புதிய ஆசிரியர்களுக்கு கிடைக்கட்டும் ஸ்டைபண்டு! அவர்கள் குடும்பங்கள் வாழட்டும் சோறுண்டு! எல்லா ஆசிரியர்களுக்கும் கிடைக்கட்டும் பிராவிடண்ட் பண்டு!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (4-Sep-24, 3:07 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 30

மேலே