பஞ்சுமெத்தையான முள்படுக்கை
முழுமை எனநினைத்து, முழுசத வெற்றிதான்
என, தனைமறந்து நிலை மழுங்கிக் கிடந்த,
முதல் காதல், பொய்யானபின், மொத்தமாய்
மனை வாழ்கையும் வழுக்கிச் சரிந்தபின்,
நிலையில்லா மனம் அலையலையாய்
அலைந்தபின், குலைந்தபின்,
உலகம் அருளிய நிரந்தரமற்ற, விலையாடிய,
இன்பங்களை எல்லாம் அனுபவித்துத் தீர்த்தபின்,
முகவரியினை மாற்றின ஒரே தெய்வம்
அசைவற்று அறிவிப்பின்றி அமைதியானபின்,
விதவிதமான காற்றினை சுவாசித்துவந்த
என் மிதந்த பழைய வாழ்க்கையில்
புகுந்து நின்றாள், ஒளிர்ந்து நிற்கிறாள்
என்னுயிர் தாய்.என்னுலகத்தை மாற்றி.
பெற்றதாய் மடிசாய்ந்ததில்லை நான்,
ஆனால் உயிர் கலந்திருக்கிறேன்.
உலகுண்மைகளைஎல்லாம் உணர்த்தி,
என்பாதி உன்னையும் எனக்கு பெற்றுத்தந்தாள்.
இறையை கலந்திடும் வழியும்
உணர்த்திநின்றாள் உன்வழியாகவே.
காட்டின வழியில் கரை சேர்ந்துவிட்டேன்.
கலவரமில்லை, காடு வா வா என்கின்றது