முகடு

மூங்கில் வலை கட்டி
முற்றம் தடுத்த
முகடு பின்னி

செவக்க சுட்ட
செங்கல் அடுக்கி
கை குலைத்த
களிமண் வைத்து

காவி படிந்த
சுவர் எழுப்பி
நீட்டி படுக்க
திண்ணையும் வைத்து

தண்ணீர் நனைத்த
பாலை கிழித்து
பழுத்த மட்டை
கிடுகு முடைந்து

ஏணி வைத்து
எட்ட பிடித்து
கட்டி முடித்த
பட்டி காட்டு
கிழவன் ஓட
கூரை வீடு

ஆடி காற்றில்
பறக்காது
அடை மழையிலும்
ஒழுகாது

வறுமையிலும்
நிழல் தரும்
வெறுமையிலும்
சுகம் தரும்

இப்ப வருஷம்
ரெண்டு கலுஞ்சுருச்சு
வயதான கிழவன் போல
மாறி போச்சு அவன் கூரை வீடு

இனி தூறல் மழைக்கு
நடு வீடு நனையும்
வாடை காற்றுக்கும்
வலி கொடுத்து கூரை பறக்கும்

என்னவென்று சொல்ல
இனி எடுத்து கட்ட
கிழவனுக்கு தெம்பில்லை

மச்சு கொட்டும்
கூரையாய்
எச்சி இருக்கும்
கிழவனின் உயிர்

வறுமை புகழ் பாடி
வயது அழைத்தாலும்
உலர்ந்து போன
வாழ்க்கையை நினைச்சுகிட்டே
இன்னும் இழுத்துகிட்டேதான் கிடக்கு
கூரை மேஞ்ச முகடு போல
கிழவனோட உயிர்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (14-Nov-11, 3:23 pm)
பார்வை : 309

மேலே