பிரிந்து போனவன்..

உயிர் கொடுத்தாய்,
உதிரம் கொடுத்தாய்,
இந்த
உடல் என்னும்
வரம் கொடுத்தாய்...

சுகமாய் இந்த
சுமை சுமந்து...
மகனாய் பெற்றெடுத்தாய்.

பூவாய் நான் சிரிக்க
பூமிக்குள் வேராக
நீ இருந்தாய்...

தன்னலம் கழற்றி எரிந்து
என் நலம் மட்டும்
எண்ணியிருந்தவளே!...

எப்பொழுது?
எங்கிருந்து?
அந்த ஒரு சொட்டு
சுயநலம்
விழுந்தது நமக்குள்...

என் காதல்...

சொட்டு விஷம்
பாத்திரத்தின்
மொத்த பாலையும்
பாழாக்கியது போல்,
மொத்தமாய்
திரிந்து போனது
நம் உறவு...

நானா? அவளா?
என்றாய்
இருவரும் வேண்டுமென்றேன்..
ஊரார் என்ன
நினைப்பர் என்றாய்,
நமக்காக வாழ்வோமேன்றேன்...

முதன் முதலாய்
நானே முடிவெடுக்க
முடிவெடுத்து,
எடுத்த முடிவுதான்
என் திருமணம்...

பிரிந்து போவதற்கும்
இறந்து போவதற்கும்
நிறைய வித்தியாசம்... அம்மா...

எனக்காக
இதைமட்டும் புரிந்துகொள்ள
முயற்சியுங்கள்...

எத்தனை தொலைவில்
இருந்தாலும்
இன்னும் நீ என்
தாய்தான்...
கொஞ்சம் விலகி இருந்திருந்தாலும்,
இன்னொருவன்
மனைவி ஆகியிருப்பாள்
அவள்...

பிரிந்து போனவன்தான்,
நான்
இறந்து போனவனில்லை...

எழுதியவர் : சிராஜ் (29-Nov-11, 11:53 am)
பார்வை : 236

மேலே