கொள்ளிக்கூடம்.! -பொள்ளாச்சி அபி

இந்திப்பாடத்தில்
மதிப்பெண் குறைவாம்..!
குறைகூறிய ஆசிரியைமீது
குற்றம் கண்டான் மாணவன்.

குற்றம்தந்த அழுத்தத்திலிருந்து
விடுபடயோசித்த மனது..
புதுவழியொன்றை கண்டது.
புத்தியால் யோசித்தவன்-பின்
கத்தியை வாங்கினான்.
சக்தியெலாம் திரட்டி
குத்தினான்...!
ஒரு தலைமுறையின்
ஆல விருட்சம்
மண்ணில் ரத்தம் சிந்தி
மரித்ததே..கேட்டபோது
கண்ணீர் உதட்டைக் கரித்ததே..!

பள்ளியில் பிஞ்சு-அதன்
மனதில் என்ன நஞ்சு..?
கொஞ்சும் பெற்றோர்
முதல் ஆசிரியர்.

ஆசிரியரோ இரண்டாவது
பெற்றோர்..இப்படித்தான்
நாம் கற்றதும்,
கல்விபெற்றதும்...!

இதில் எங்கே வந்தது
குழப்பம்.?
பள்ளிக்கூடம் இன்று-தீக்
கொள்ளிக்கூடம் ஆனதேன்.?

புரிதல் இல்லாத
மண்ணாய் வருபவனை
பொன்னாய் மாற்றி,
பொன்னுலகம் படைக்கவொரு
போர்வீரனாய் அனுப்பும்
இடமல்லவா அது.

கல்விக்கூடம் வெறும்
மாணவர்களின்
காட்சிக்கூடமானதா..?
ஆசிரியர்களுக்கான
அட்சய பாத்திரமானதா..?

ஆசிரியப்பணி
அறப்பணியென்றுதான்
இருந்தது..-அது
அரைப்பணியாயிற்றோ..?

கேள்விக்கு விடையை
அந்த மாணவனே
சொன்னான்..
புதிய திரைப்படம்
பார்த்தேன்.அதில்
வந்த காட்சி
என்னை திட்டம்
தீட்ட வைத்ததென்று.

நெஞ்சம் பகீரென்கிறது.
நம்மைத் தொடரும்
இளம் தலைமுறைக்கு
நாம் கற்றுக் கொடுப்பது
இதைத்தானா..?

புதிதாய் படைக்கும்
இடத்திலிருப்பவரெல்லாம்
வெட்கப்பட வேண்டாமா.?.

இறந்தது ஒரு உயிர்
என்பதில் சுரந்தது
கண்ணீர்-ஆனால்
இதற்கு என்ன காரணம்.?
வளரும் தலைமுறைக்கு
வழிகாட்டும் பொறுப்பு
நமக்கில்லையா..?

நமது கலாச்சாரம்
பிரதிபலிப்பதே நம்
படைப்புகளின் சூத்திரம்.
நம் சூழ்நிலையே
சிந்தனைகளின் தாய்..!

உயிர்ச்சூழ்நிலையை
மாற்றுவோம்..!
உயர் சூழலை
உருவாக்குவோம்.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (10-Feb-12, 8:12 pm)
பார்வை : 226

மேலே