நம்பிக்கை

நடுத்தர வர்க்கத்தின் தினசரித் தோழனான மின்சார இரயில் நிலையத்தில், அவன் கால்கள் தினம் தழுவும் அந்த நடைமேம்பாலத்தின் படிகளில்,பார்வைக் குறைபாடு உள்ள ஒரு மாற்றுத்திறனாளி ஒருவர் மெழுகுவர்த்தி விற்றுக்கொண்டிருப்பார்.

சிலமுறை இவன் இரயில் வரும் வரை பாலத்தின் மேலேயே நிற்பான்.அவர் செயல்களை உற்று நோக்குவான்.அவர் காலையிலும் மாலையிலும் கூவும் முறை வேறுபடும்.அவர் நெரிசல் நேரத்தில் அதிகம் கூவுகிறார் என்று சொல்ல முடியாது.அவருக்கென்று ஒரு தனி முறை கடைபிடித்தார்.விந்தை இவனை உந்த,அவரிடமே கேட்டுவிட்டான்.

அதற்கு அவர், 'பார்வை இல்லாத நான் காலடி சத்தங்கள் வைத்து கூவுவேன்.காலையில் நெரிசல் இருந்தாலும், வேலைக்கு செல்லும் அவசரத்தில்,என்னை பலர் கவனிக்கமாட்டார்.அதனால் மாலையில் அதிகம் கூவுகிறேன்.என் அனுபவ அறிவும்,செவியால் வருகை அறியும் திறனும் எனக்கு துணை புரிகின்றன்' என்றார்.

'அவ்வாறெனில்,மாலையில் மட்டும் விற்கலாமே' என்றான் அவன்.

'அடிக்கடி மின் தடை ஏற்படும் இந்நாளில்,காலையில் ஒரு சிலரேனும் வாங்குவர் என்ற நம்பிக்கையில் விற்கிறேன்.'

'உங்க கிட்ட திருட மாட்டாங்கனு என்ன நிச்சயம்' அவன் கேட்க,

'நம்பிக்கை தான் தம்பி.நம்பிக்கை இல்லைனா கண்ணு இருந்தாலும் யாராலயும் வாழ முடியாது' என்றவர் முடிக்க,

இரயில் வரும் சத்தம் கேட்டது.

'மனிதனின் உயிரிருக்கும் மந்திரப்பெட்டி நம்பிக்கை'.....
எங்கோ ஒரு நூலில் படித்த வாசகத்தை அசைபோட்டபடி இரயில் பிடிக்க ஓடினான்.

எழுதியவர் : ....................கந்தசுவாமி............... .... (26-Feb-12, 3:53 pm)
Tanglish : nambikkai
பார்வை : 705

மேலே