(001 ) எத்தனை ஆசிரியர்..!

பள்ளியில்தான் ஆசிரியர் உள்ளார் என்றே பார்க்காதே என்தோழா! அதோ பார் ஆழி
துள்ளிவரும் வெள்ளலை,ஓர் ஆசான்; தோயாச்
சுறுசுறுப்பை அதைப்போலே புகட்டு வோர்யார்?
வெள்ளியுடன் விழித்தெழுந்தே விடியல் தன்னை
விளம்புகின்ற காகம்,ஓர் ஆசான்! நெஞ்சை
அள்ளுகின்ற புன்சிரிப்பின் மாண்பைக் கூறும்
அழகுமலர் ஒவ்வொன்றும் ஆசான் என்பேன்!

தன்கடமை தவறாமல் நடக்கும் ஆறோ
தடமுணர்த்தும் பேராசான் என்பேன்! வீசும்
மென்தென்றல் ஓராசான்! தேடி வந்து
மேனிக்கே மகிழ்வூட்டும் தொண்டைக் கூறும்!
வன்னெஞ்சர் வாளாலே வெட்டி னாலும்
மாளும்வரை நிழல்தந்தே குளிர்ச்சி நல்கும்
நன்மரம்,ஓர் நல்லாசான்! கட்டுத் தேனீ
நமக்கெல்லாம் சேமிப்பை உணர்த்தும் ஆசான்!

சீர்வரிசை ஒழுங்குமுறை செப்பும் ஆசான்
சிற்றெரும்பைப் போலுண்டோ? கழிவு நீரை
வேருக்கே அளித்தாலும் தென்னை தானே
விருப்பமுடன் இனிப்பின்நீர் கொடுக்கும் ஆசான்!
ஏர்முனையால் சீருழவர் வதைத்த போதும்
இதமுடனே உதவும்,மண் புழுவோர் ஆசான்!
பார்நண்பா! உற்றுப்பார்! உலக மெங்கும்
பல்வேறு ஆசிரியர் உள்ளார்; தேடு!
-௦- -௦-

எழுதியவர் : கவிவேந்தர் கா.வேழவேந்தன் (5-Mar-12, 6:16 am)
பார்வை : 265

மேலே