136 . கிறிஸ்துவழிக் குறள்..

ஆதியில் கர்த்தர் அதன்பின் குமரன்,தன்
நீதியில் தூயாவி நேர்!

அம்மா! அறிக; அவரதுவாய்ச் சொற்படிக்கச்
செம்மை விளங்கும் சிறந்து!

கர்த்தர் உடனிருக்கக் காண்பாய் அமைதியினை ;
அர்த்தமும் வாழ்வும் அவர்!

ஆவி தனில்,எளிமை ஆம்,வரத்தைப் பெற்றவர்க்கே
மேவிவரும் மேலரசன் வீடு!

துன்புறுவீர்! நெஞ்சம் துவளாதீர், கன்மலைமேல்
அன்புடையான் பட்டதுயர் ஆய்ந்து!

கன்மலைமேற் சிலுவைக் காட்சியினைக் கண்டோர்க்கே
என்மலை யோ,துயரம் இங்கு?

அப்பமும் நீரும் அருந்துங்கால் பாடுற்ற
அப்பனை எண்ணித் திருந்து!

போற்றி மலைமொழிவாய்! போற்றி நிலைதருதாள்!
போற்றி அவர்தியாகப் புண்!

உள்ளத்தே சுத்தம் உடையார் இறப்பெனும்
வெள்ளத்தும் நிற்பார் எழுந்து!

துறக்க மனமின்றித் துய்க்கவோ வாழ்வும்?
மறக்கிலீர் ஏசு மனத்து!

ஏசுவை நம்பி இடஞ்சேர்ந்தேன்! நான்,அவர்முன்
தூசெனினும் நின்றார் துணை!

பகுத்துச் செயல்படும் பண்பினன் என்னைச்
சகித்துமன் னிப்பவர் ஏசு!

'வகுத்து'ப் பயன்பெற வாழுவேன், என்னைத்
'தொகுத்துவாழ்' என்பவர் ஏசு!

தவமாய்த் தவமிருந்து தான்பிறந்தேன் என்பார்
அவமின்றிக் காப்பார் அவர்!

சுவரும், சித்திரமும், சொல்லும், பொருளும்
நவமும் இனியேசு நம்பு!

மாசு கெடவாழ்வேன்! 'மாண்டான்' எனக்கூறார்
ஏசு துணையாம் என!

காசு பணம்,எதற்கோ? காசினி தானெதற்கோ?
ஏசுவே எல்லாம் இனி!

சுவை,ஒளி, ஊறு,ஓசை நாற்றமென்று ஐந்தும்
அவராக வே,அமைதி ஆம்!
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (5-Mar-12, 7:24 am)
பார்வை : 222

மேலே