"பசி வந்திடப் பத்தும் பறக்கும்" அது எந்த பத்து தெரிந்து கொள்ளுங்கள்...

"பசி வந்திடப் பத்தும் பறக்கும்"

என்பது நாம் அடிக்கடி உச்சரிக்கும் அல்லது கேட்கும் பழமொழி.பசி மிகவும் கொடுமையானது. பசி வந்துவிட்டால் அதன் முன் எதுவும் நிற்க முடியாது. எவ்வளவு பெரிய அறிவையும் ஆற்றலையும் வீரத்தையும் ஏன், தவத்தையும் கூட பசி ஒரே நொடியில் வென்றுவிடும். பசிக் கொடுமை மிகவும் பொல்லாதது. எந்தச் சத்தியாலும் பசியை வெல்ல முடியாது.

இந்தக் கருத்தை உணர்த்துவதுதான் "பசி வந்திடப் பத்தும் பறக்கும்" என்ற பழமொழி.

இந்தப் பழமொழியில் வரும் 'பத்து' எவை?

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம் (நல்வழி பாடல் 26)

ஔவைக் கிழவி நம் கிழவி; அமிழ்தினும் இனிய சொற்கிழவி என்ற சிறப்புக்குரிய தமிழ் மூதாட்டி ஔவையார் இயற்றிய இந்த நல்வழிப் பாடலிலிருந்து பிறந்ததுதான் அந்தப் பழமொழி.

மானம்–குலப்பெருமை–கற்ற கல்வி–அழகிய தோற்றம்–பகுத்தறிந்து பார்க்கும் அறிவு–தானம்
செய்வதால் வரும் புகழ்–தவம் மேற்கொள்ளும் ஆற்றல்–முன்னேற்றம்–விடாமுயற்சி–
பெண்மீது கொள்ளும் காதல் உணர்ச்சி ஆகிய பத்தும் பசியால் வாடும் ஒருவனிடமிருந்து உடனே ஓடிவிடும் என்பதை அன்றே கண்டுபிடித்து பாடிவைத்துள்ளார் நம் ஔவைப்பாட்டி.

பாடல் என்னவோ பழங்காலத்தில் எழுதப்பட்டதுதான். ஆனால், அது இந்தக் காலத்திற்கும் இனிவரும் எந்தக் காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது.





செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (11-Mar-12, 12:30 pm)
பார்வை : 582

மேலே