பூச்சி அரிக்கும் (க )விதைகள்!
எல்லோருக்கும் கவிதை
எழுத ஆசைதான்!
எல்லோரைச் சுற்றியும்
எத்தனையோ நிகழ்வுகள்
கவிதை எழுதத் தூண்டுதலாய் !
அதோ பூப்பு அடையாத
சிறுமி ஒருத்தி
பூக் கூடையுடன்
இங்கும் அங்கும் ஓடி
பூ விற்க அலைகிறாள்!
அதோ இரு கண்களை இழந்தவர்
அந்துருண்டைக் கொத்துகளை
மாலையாய்ச் சுற்றிக் கொண்டு
நடமாடும் கடையாக
நடந்து திரிகிறார் !
அதோ ஒரு மொடாக் குடியன்
மித மிஞ்சிய சரக்கால்
புழுதியில் மல்லாந்து
மயங்கிக் கிடக்கிறான் !
காதலி ஒருத்தி கோபித்துக் கொண்டு
அழுதபடி நடக்கிறதும்
அவளை விட்டுக் கொஞ்சம்
தள்ளி நடந்தபடி அவள் காதலன்
அவளைக் கெஞ்சிக் கொண்டு போவதும்
ஆட்டோ ரிக்க்ஷாக்காரரிடம்
இலஞ்சம் கேட்டு
மிரட்டுகிற போலீஸ் காரர்
அங்கே நிற்கிற கார்க்காரரிடம்
சல்யூட் அடித்து வளைவதும்
இப்படி
எத்தனையோ நீர்த்துளிகள்
நினைவின் சிப்பியில் விழுந்து
கவிதை முத்தாய் மலர
நம் முன்னே வந்து நிற்பதை
காண முடியாமல்
நம் கண்களை பிரச்சினை
துணி போட்டு மறைத்து விட
பூச்சி அரிக்க அனுமதிக்கும்
விளையாத விதைகளாய்
வாழ்க்கையை முடிக்கிறோம்!