நிழல் அரசாங்கம்

இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் "நிழல் அரசாங்கம்" என்பது இந்திய துணைக்கண்டத்தில் ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு அவர்கள் சார்ந்திருக்கக் கூடிய நபர்களாலோ , அல்லது அவர்களுக்கும் மேலான நபர்களாலோ வழிநடத்தப்பட்டிருக்கின்றனர்.

இது போன்ற சம்பவங்கள்
காலம் காலமாக இப்படிப்பட்ட நிழல் அரசாங்கங்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் நியாமான காரணங்களை முன்னிட்டே செயல்பட்டன. ஒரு சில மட்டும் இதற்கு விதிவிலக்கு.

மகாபாரதப் புராணத்தில் கிருஷ்ணரால் பாண்டவர்கள் வழி நடத்தப்பட்டனர்.

கவுரவர்கள் சகுனியால் வழி நடத்தப்பட்டனர்.

முக்கியமான சந்தர்ப்பத்தில் கையேயியால் தருமர் இராமாயணத்தில் வழி நடத்தப்பட்டார்.

சந்திரகுப்த மௌரியர் சாணக்கியரால் வழிநடத்தப்பட்டார்.

கரிகாலப் பெருவளத்தான் தன் தாய்மாமனால் வழி நடத்தப்பட்டார்.

அதியமான்,தொண்டைமான் ஒளவையாரால் வழி நடத்தப்பட்டனர்.

அக்பர் தன தாய்மாமனால் வழிநடத்தப்பட்டார்.

வீரசிவாஜி தன் குருநாதரால் வழிநடத்தப்பட்டார்.

ராஜராஜ சோழன் தன் அக்காவினால் வழிநடத்தப்பட்டார் .

ராணி மங்கம்மா மருது பாண்டியரால் நடத்தப்பட்டார்.

இது இந்த தேசத்தில் மட்டுமல்ல, எந்த தேசத்திலும் நடைபெறக்கூடிய ஒன்று.

நான் மேற்கூறியவையனைத்தும் புராணகாலத்திலும், மன்னராட்சி காலத்திலும் நடைபெற்றவை.

இவை நல்லதைச் செய்யும் பொழுது சுகம் கண்டு , அல்லவை செய்யும்பொழுது வெந்து புலம்பி இறைவனிடம் மக்கள் வேண்டிநின்றனர்.

ஆனால், மக்களாட்சி நடைபெறும் இன்றைய காலகட்டத்திலும் இத்தகைய நிழல் அரசாங்கங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது வேதனைக்குரிய ஒன்று.

மக்களாட்சி தத்துவத்தின் மகத்துவத்தை மக்கள் மறந்து போனதன் விளைவை - மக்களே இன்று மாபெரும் துயரங்களை அனுபவித்துவருகின்றனர் தாங்கள் உணராமலே.

எப்படி என யோசிக்கிறீர்களா?

தமிழகத்தில் கலைஞரின் ஆட்சி பெரும்பாலும் யாரால் வழிநடத்தப்பட்டது என்பதை நாடறியும்.

செல்வி.ஜெயலலிதாவின் ஆட்சி யாரால் வழிநடத்தப்படுகிறது என்பது கண்கூடான உண்மை.

ஆந்திராவில் பல ஆண்டுகளுக்கும் முன் என்.டி.ஆர். ஆட்சி பெரும்பாலும் அவர் குடும்பத்தினரால் வழி நடத்தப்பட்டது.

இதுபோன்ற உதாரணங்களையும் , அதனால் நாட்டுமக்கள் பட்ட, பட்டுவரும் என்பதையும் அதிகம் சொல்லத் தேவையில்லை.

இதேபோல் இந்திய ஜனநாயக வரலாற்றில் எந்த ஆட்சியின்போதும் இல்லாத வகையில் இன்றைய மத்திய அரசாங்கத்தின் பின்னணியில் இந்தியாவின் புனிதவதி சோனியாகாந்தியின் பிடி மேலும் மேலும் இறுகிக்கொண்டே இருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக கடுமையான வரிவிதிப்பு காரணமாக அகில இந்திய ரீதியில் நகைக் கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

உத்தேசமதிப்பீடாக பல கோடிரூபாய் வரை அரசு வருவாய் இழப்பைக் கண்டது.

பிரதமர் எனக் கருதப்படுபவர் மௌனம் காத்தார்.

மத்திய நிதி அமைச்சர் அலட்சியப்படுத்தினார்.

மொத்த அமைச்சரவையும் இதுபற்றிக் கவலைப்படவேயில்லை.

மக்களும் வழக்கம் போல் வரிவிதிப்பின் அளவையும் , அதனால் தாங்கள் படப்போகும் அவதியையும் பற்றி சிறிதும் கவலைப் படாமல் கள்ள மாரகெட்டிலாவது நகை வாங்க மாட்டோமா என்று அலை பாய்ந்தனர்.

விலைவாசி ஏறிக்கொண்டேயிருக்கட்டும், பரவாயில்லை யார் கழுத்தை அறுத்தாவது நாம் நன்றாக வாழவேண்டும் என்கிற சுயநல நோக்கம் மக்களை சூனியமாய் சிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் தான் நிழல் அரசாங்கங்களின் செயல்பாடு ஒன்று வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.

இவ்வளவு பொருளாதார இழப்பு , மக்கள் அவதி , குழப்பநிலை ஆகிய அனைத்தும் ஒரேநாள் ,ஒரே ஒருவரை ( காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி ), ஒருசில மணித்துளிகள் சந்தித்ததால் ஒருவாரமாக நீடித்தப் போராட்டம் உடனே முடிவுக்கு வருகிறது.

அதுவரை அகம்பாவமாகப் பேசிய மத்திய நிதியமைச்சர், உடனே பாதிப்புக்குள்ளாக்கும் அத்தகைய வரி ரத்து செய்யப்படும் என்று அறிவித்துவிட்டார்.

இத்தகைய நிலை திரு. மன்மோகன்சிங் பதவியேற்ற நாளிலிருந்தே நடைபெறுகிறது.

சோனியா காந்தி ஒரு கட்சி தலைவி, பாராளுமன்ற உறுப்பினர், ஆளும் கூட்டணிக்குத் தலைவர் . அவ்வளவே.

அவரை எதற்கு நகைக் கடை அதிபர்கள் சந்திக்க வேண்டும் ?... அவர் கேட்டுக்கொண்டதின் பேரில்; நிதியமைச்சர் ஏன் ரத்து செய்ய வேண்டும் ?

இதன் பின்னணி என்ன ? நமக்கு எதற்கு ஒரு மெத்தப் படித்த பிரதமர் ?

அரசாங்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கட்சித் தலைவரால் ஒரு பிரச்சினை தீர்த்துவைக்கப்டும் என்பது மிகவும் சரியானது என்றால் பிரதமர் பதவி எதற்கு?

மற்ற அமைச்சர்களும் எதற்கு? தேர்தல் எதற்கு? நீதிமன்றத் தீர்ப்பு எதற்கு?

இந்திய இறையாண்மை என்பது இதுதானா?

பாரம்பரியப் பத்திரிகைகள் என்ன செய்கின்றன?

மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டாத கல்வியும் பிற ஊடகங்களும் ஏன்?

இதுபோன்ற நிழல் மனிதர்களால் எந்த நன்மையையும் விளையாது.

இதன் முழுமுதற்காரணம் நம் நாட்டு அரசியலில் விளங்கும் தான் தோன்றித்தனமான , முட்டாள்தனமான, காக்கைப் பிடித்து தங்கள் காரியத்தை சாதிக்கத்துடிக்கும் கயவர்களும் , ராமன் ஆண்டால் என்ன ? ராவணன் ஆண்டால் என்ன? என்ற மக்களின் போக்குதான்.

தேசியநலன் என்பதை மக்கள் தங்கள் உயிர்மூச்சாகக் கொண்டு உழைப்பின் மீதும் ,தர்மத்தின் மீதும் ,நம்பிக்கைவைத்து மனித நேயத்தோடு சிந்தித்து செயலாற்றி, தெளிந்த சிந்தனையுடன் ஓட்டுப் போடும் நிலை வந்தால்தான் இந்த அவல நிலை தீரும் .

நிழல் அரசாங்கத்தின் மூலம் செயல்பட்டவராக இருந்தால் அவர்களை மீண்டும் தேர்ந்தெடுக்கக் கூடாது. அவர்களை பொது இடத்திலும்கூடப் புறக்கணிக்க வேண்டும். நிழல் அரசாங்கங்கள் ஒழிக்கப்படவேண்டும்.

ஜனநாயகத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தில் இல்லாதவர்கள் ஆலோசனை கூறுவதில் தவறில்லை. ஆனால் அவர்களே முடிவெடுக்கக்கூடிய இடத்திலும் இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல...நாம் வெட்கப்படவேண்டியதும் ஆகும்.

மத்தியிலும் ,மாநிலத்திலும் தலைமைப் பண்புகள் நிறைந்த , சுயநலமில்லாத , சுயச் சிந்தனையுடன் கூடியவர்களே ஆட்சி நடத்தத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

இது நடைபெற முதலில் மக்கள் சுயச் சிந்தனையோடு
வாழப் பழக வேண்டும்.

எழுதியவர் : எம். பழனிவாசன் (7-Apr-12, 11:19 pm)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 366

சிறந்த கட்டுரைகள்

மேலே