இன்று...யாராய் இருக்கிறேன்?
எல்லாப் பறவைகளும்...
சந்தோஷமாய்..
எனது மரத்தில் கூடு கட்டி
வசித்த நாளில்...
என்னுடையதாய் இருந்தது...
அந்தப் பறவைகளின் சிரிப்பு.
குழந்தைகளின் விளையாட்டும்.,
பெரியவர்களின் காதலும்
நிரம்பி...
அச்சமின்றி வாழ்ந்த நாட்களில்...
என்னுடையதாய் இருந்தது காலம்.
உனது புன்னகையும்..
யாரும் அறியாத கண்ணசைவுகளும்...
என்னுடையதாய் மட்டுமே இருந்தது அன்று.
கழுகுகள் மட்டுமே வட்டமிடும் இந்நாளில்..
பதுங்கு குழிக்குள் எனது சுவாசத்தின் சப்தம்...
மட்டுமே கேட்கும் இந்நாளில்..
எருக்கம்பூக்களில் உனது புன்னகை தொங்கும்...
இந்நாளில்...
முள் வேலிகளுக்குப் பின்னாலும்...
துப்பாக்கி முனையிலும்...
எனது சதை தின்னப்படும் இந்நாளில்..
நான் யாராய் இருக்கிறேன்?...
அல்லது
யாருடையதாய் இருக்கும்?...
எனதல்லாத....எனது காலம்....
எனக்கு அப்பால் உள்ள தீவில்?.