ஒப்பில்லா உழவு 2 (கவிதை திருவிழா படைப்பு) நிலா சூரியனின் முயற்சி
ஆயிரம் கோடியில் பட்ஜெட் ,
விவசாயத்திற்கு எவ்வளவு ?
பல்நோக்கு திட்டத்தில்
பசிக்கு என்ன திட்டம் !
விவசாயத்தை விதைக்கா விட்டால்
நாளை மனிதம் தான்
அறுவடையாகும் !
ஆதவனின் கண்விழிப்பிர்க்கு முன்னே
ஆசையாய் மனையாளின் முகம் பார்த்து ,
அன்போடு கொஞ்சிவிட்டு ,
நிலமகளின் முகம் காண நேர் நடந்தான்
உழவன் !
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையென
கால்கடுக்க நடந்தவனின்
கால்கள் இதுவரை பார்த்ததில்லை
காலணிகளை !
பயிர்வித்த பயிர்களெல்லாம்
பச்சைகாண மனம்குளிர்ந்து
கவலைகளை இறக்கிவைத்தான்
வரப்பில் தலைப்பாகையோடு !
கும்பிடும் சாமி ,
குலதெய்வம் எல்லாம்
இவனுக்கு சோறுபோடும் நிலம் மட்டுமே !
உழவு செய்தான்
நடவு நட்டான்
கலைஎடுத்தான் ,
பயிர் வளர்வதை காட்டிலும்
கந்துவட்டி கடனே வேகமாய் வளர்ந்தது !
பகல் இரவென்று பாராமல்
உழைத்த உழவனின் கைகளுக்கு ,
நிலமகள் பரிசளித்தால் ,
நிறைய மகசூல் !
அறுவடை செய்வதற்குள்
அனைத்து நகைகளும்
அருவடையாகிவிட்டது ,
அவனின் மனைவியின் தாலியும் சேர்த்து !
விளைந்ததை எடுத்துக்கொண்டு
விற்பனை கூடம் சென்றவன் ,
விலையாக்கி பார்த்தபோது ,
கந்துவட்டிக்கும் கடனுக்குமே பத்தவில்லை !
பாம்புக்கு எலி வேட்டை
பாவம் ஏழை உழவனுக்கும்
எலிதான் உணவோ !
பயிர்வித்தவனே பசித்து சாகிறான் ,
என்ன கொடுமை !
ஏர்பிடித்த கையில்
தூக்கு கயிறா,
தன்னம்பிக்கை உழைப்பாளிகளுக்கு ,
தற்கொலைதான் பரிசோ !
விவசாயிகள் மடிந்துபோனால் ,
விவசாயமும் தான் மடிந்துபோகும் ,
விளைவிக்க ஆள் இல்லாவிட்டால் ,
உணவுக்கு வழியேது !
விஞ்ஞானம் வளர்ந்தால் மட்டும் போதாது ,
விவசாயமும் வளரட்டும் ,
விண்வெளி வாழக்கை மாதிரி
பசிக்கு மாத்திரையா சாப்பிடமுடியும் !
மண்ணுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ,
விண்ணுக்கு கொடுப்பதில் என்ன நியாயம்!
இலவச மின்சாரம் மட்டும் போதுமா
இலவச விவசாய மருந்து கொடு ,
இலவச உணவு கொடு ,
இலவச உடைகள் கொடு ,
கூரைக்கே சொந்தமானவர்களை ,
மாடிக்கு மாற்றிகாட்டு !
உழைத்தவனுக்கு தோள்கொடுப்போம் ,
உழவனுக்கு வாழ்வு கொடுப்போம் ,
நாளைய சோற்றுக்கு
இன்றே சேற்றில் இறங்குவோம் ,
பசியாற்றுவோம் ,
பஞ்சம் அகற்றுவோம் !