கவிஞன் சாபம்!

மதங்கொண்ட யானை காலில்
-------மணிகளாய்த் தமிழர் கூட்டம்
சிதறிடு கின்றார்; கெட்டச்
-------சிங்களப் பெயர் தம்மால்!
கதவிட வீடும் இல்லை!
-------கண்ணீரும் மீதம் இல்லை!
கதறிடு கின்றார்; அந்தோ!
-------கரம்தர யாரு மில்லை!

விண்ணாடும் முகில்கள் கூட
-------வெந்நீரை வட்டிக்கு தம்மா!
தண்ணீரில் கொதிக்க வில்லை
-------தனிப்பெரும் அமைதி யொன்றை
எந்நாளும் காணா ராக
-------இளைத்திட்ட மாதர் தம்மின்
கண்ணீரில் அன்றோ ஆங்கே
--------கொதிக்கின் றனஉ லைகள்!

காணவே சகியா அந்தக்
-------கொடுமைகள் அறிந்தும் கூட
மானமே இல்லா ராக
-------மௌனத்தில் உள்ளீ ரே!ஒ!
ஈனரே உங்கள் நெஞ்சின்
-------ஈரந்தான் காய்ந்த தேனோ?
வீணரே நீங்கள் கொண்ட
-------வீரந்தான் போன தெங்கே?

(வேறு)

ரத்தம் கொதிக்க வேண்டாமா?-உம்
--------விழிகள் சிவக்க வேண்டாமா?
பித்தப் பேடிச் சிங்களர்-தாம்
--------கிடுகி டுவென நடுங்கிடவே
யுத்தம் வெடிக்க வேண்டாமா?-அவர்
---------வெலவெ லத்தே விழிப்பிதுங்க
வித்தை காட்ட வேண்டாமா?-நம்
---------வீரம் விளங்க வேண்டாமா?

(வேறு)

பூனையாய்ப் பிறந்து விட்டுப்
--------புலியதன் வண்ணம் தீட்டி
நாணமே சிறிது மின்றி
--------நாங்களும் புலிகள் என்று
காணுவோர் நம்பு தற்காய்
--------காட்டுமோர் வேடம் போல
ஆனதோ காவி யங்கள்
--------அளக்கின்ற தமிழர் வீரம்?

தன்னினம் தாழக் கண்டும்
-------தவித்திட மாட்டீர் என்றால்
தன்னினம் வீழக் கண்டும்
-------துணைக்கரம் தாரீர் என்றால்
தன்னினம் மாளக் கண்டும்
-------துடித்திட மாட்டீர் என்றால்
மண்ணெனப் போவீர் நீரே
---------மணித்தமிழ்க் கவிஞன் சாபம்!


--------------ரௌத்திரன்

எழுதியவர் : ரௌத்திரன் (11-Jun-12, 11:24 am)
சேர்த்தது : ரௌத்திரன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 189

மேலே