ஒரு புழுதிக்காற்றின் புலம்பல்

நல்ல காற்றாகத்தான்
நானும் வந்தேன்
தென்றல் காற்றாகத்தான்
தவழ்ந்திருந்தேன்
இருந்த மரங்களை
இங்கே காணோம்
எல்லாம் போனது
எங்கே தெரியவில்லை

மரங்கள் இருந்தால்
மகிழ்ந்துபோவேன்
மன அழுக்கை
மறந்துபோவேன்
மரத்தின் இலைகளில்
என் தேகத்தின் அழுக்கை
துடைத்துக்கொள்வேன்
சுகாதாரமாய் சுற்றித்திரிவேன்

வேப்பமரத்தை தழுவினாலும்
இனிக்கும் காற்றாய்
இதமாய் வருவேன்
இருக்கும் மரங்களும்
மொட்டை தலையாய்..
எந்தன் அழுக்கை
எங்கே தொலைப்பேன்?

கிராமத்து கதைதான்
இப்படியானதென்று
நகரத்துக்குள் நுழைந்தேன்
நாற்றமெடுக்கும் காற்றாய்
நானும் மாறிவிட்டேன்

என்னை சுத்திகரிக்கும்
சுகாதார நிலையங்கள்
மரங்கள் என்பதைத்தான்
மறந்துவிட்டீர்களே!
மரங்களை நட்டு வையுங்கள்
மனிதர்களே உங்களுக்கு
ஆரோக்கியத்தை அள்ளித்தருவேன்

எல்லா மரங்களும் எங்கே போனது?
என் புழுதிக் காற்றும் நிரந்திரமானதே!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (18-Jun-12, 9:24 pm)
பார்வை : 229

மேலே