சில பைத்தியங்கள்...
என்னைப்
பைத்தியம் மாதிரிச் சிரிக்கிறான்-பார்
என்றான்-கடந்து போனவன்.
நிஜமாகவே-
ஒரு பைத்தியக்காரன் சிரித்துக் கொண்டிருந்தான்.
யாரும்...எதுவும்...
சொல்லவே இல்லை.
********************************************************************
மழைச் சாலையில்..
ஆதரவற்று...அலைந்து திரிகிறது
வீதியில் உறங்கி எழும்
விதி அற்றவளின் வயதான நிழலும்
விவரிக்க இயலாத துயரங்களும்
மீறித் துளிர்க்கும்
ஒருபோதும் ஒற்றி எறிய விரும்பாத
அன்பின் நீர்த் துளிகளும்.
*****************************************************************
நமது....
அதி சம்பிரதாயமான வார்த்தைகளில்
ஒரு வெயிலைப் போல ...
விலகிக் கொண்டே இருக்கிறது
நமக்கான இடைவெளி.
*****************************************************************
எனது
முதல் பார்வையை எழுதுகிறேன்
ஒரு காதலோடு.
அது-அத்தனை
அழகாக இருக்கிறது
ஒரு திருமணப் பெண்ணைப் போல.
*****************************************************************