"கம்மா கரை காதல் மொழிகள்"

அப்பனுக்கு போக்கு காட்டி
ஆத்தாளுக்கு சாக்கு சொல்லி
என் அத்தமக வருவா
எப்பவாச்சும்
முத்தமொண்ணு தருவா
அந்தி சாயும் நேரத்துல
குந்தியிருக்கும் என்ன நினச்சி
தத்தி தத்தி வருவா
பூக்களின் உயிர் உருவா.....
வரப்பு மேல வச்சி நடக்கும்
வெளுப்பு பட்டு பாதம்
வலிக்க விடாமல்
வளர்ந்த புள் கூட்டம்
தலை சாய்த்து கம்பளம் விரிக்கும்;
கொஞ்சநேரம் என்ன காக்கவச்ச
கொஞ்சி கொஞ்சி
மன்னிப்பு கேட்டுடுவா
செல்லமா சிணுங்கி அழுகையிலே
கூடு திரும்பும் குயில் கூட்டமும்
கொஞ்சநேரம் நின்னு பாக்கும்
அவ நுனிகால தொட்ட
ஆத்து வாக்க தண்ணிஎல்லாம்
சலசலன்னு சத்தம்போட்டே
பெருமை பேசி ஓட
பெருமிதம் வரும் எனக்கு
பேரழகியின் காதலன் நான்னு
ஆடுகிற அவ கெண்ட கால கண்டு
பக்கத்து புதரு குட்டி முயலு ஒன்னு
பழுத்த கிழக்கு துள்ளுதுன்னு
அடிக்கடி பக்கம் வந்து போகும்
அப்பப்ப முத்தமிட்டு ஓடும்
கம்மா கர வாக்ககுள்ள
கட்டிவச்ச வலையில
சிக்குன மீன சிக்கெடுத்து
எம்பேர வச்சி புத்தி சொல்லி
ஓடுற தண்ணியில உட்டுருவா
என்ன ஓரமா பொலம்ப வச்சிருவா
சாயும் பொழுது
சகுனி வேல பாக்க
காயிற எனக்கு கன்னத்துல
ஈர சோறு போட்டு
பரிசம் போட புத்தி சொல்லி
என்ன பாழாக்க பல்லகாட்டி
பட்டுன்னு ஒடி போவா
பைத்தியமா நானும் சொல்லிக்குவேன்
"பத்து நாள்ல நானும்
பாக்கு வெத்தல தாரேம்புள்ள"