[274 ] கட்டுரை(8 ) -எழுத்துலகக் கவிஞர்களுக்குச் சில கவித்துவ வரிகள் !

இன்று ஒரு இஸ்லாமியக் கவிஞரின் கவிதை ஒன்றினை அறிமுகப் படுத்த எண்ணம்.
சிந்தித்தால் உரையாற்றலாம்; சிறிதேனும் சிந்தை நெகிழ்ந்தால்தான் கவிதை இயற்ற முடியும் என்று யாரோ ஒரு அறிஞர் சொன்னதாகக் கூறக் கேட்டிருக்கிறேன்.
இன்றைய கவிதை : நிழலில்லாத சூரியன்.
எழுதியவர் : ஏம்பல் தஜம்முல் முகம்மது..

" ஒருவனே இறைவன்; தூதர்
உரைநடை வாழ்வோம் என்று
திருஇறை யோனை நாமும்
தினந்தோறும் வணங்கி வாழ்த்தி
அரும்மறை குர்ஆன் போற்றி
ரமலானில் நோன்பு நோற்று
வறுமைக்கு வழங்கி மக்கா
வரைசெல்லல் இஸலாம் ஆகும்! " என்று அந்தக் கவிஞர் இசலாத்தை அதன் சாரத்தை எளிதாக இனிமையாக நான்கே அடிகளில் தெரிவித்து விட்டார்!
அதே கவிஞர் மற்றொன்று சொல்கிறார்:

"தீயினை விடவும் தீமைகள் செய்வன
போதைப் பொருளாகும் -ஓர்
ஆயிரம்தலை பாம்பெனும் அதைத்தொடப்
பாதை இருளாகும்! "

"வாழ்ந்து வரும்போதும் மரண முறும்போதும்
வழங்கி அருள்கவே சாந்தி! -என
ஆழ்ந்து கலங்கியே அழுது புலம்பியே
அடிமைநின் றேன்கை ஏந்தி!."

"ஒருவானம் எனும்கூரை மேலி ருக்க
உருவான தொருகுடும்பம் என்னு மாப்போல்
'கருப்பூக்கள் பூத்திருக்கும் வையத் தோட்டம்'
கருகாமல் எல்லோரும் காப்போம்! காத்தால்
வருங்கால வரலாறு வாழ்த்தும், இருந்து
வருகின்ற மானுடமும் வாழ்த்தும்; இந்தத்
திருநெறியை நிலைநிறுத்த, பரப்ப ஒன்றாய்த்
திரண்டிடுவோம் சோதரரே! வாரீர்! வாரீர்!."

எவ்வளவு எளிதாக அருமையாக நெகிழ்ச்சியுள்ள ஒரு சிந்தையுடன் கூறிவிட்டார் கவிஞர் பார்த்தீர்களா. மீண்டும் வருவேன் பிறிதொரு கவிதையுடன் மற்றொரு நாள். நன்றி

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (3-Jul-12, 5:40 am)
பார்வை : 252

மேலே