[278 ] அந்தியில் வந்தவை..

அந்தி வேளையில்
அடியேன் கண்டது:

அரசுக் கடைகளில்
முந்திடும் கூட்டம்;
அழகுச்சிங் காரிகள்
அலம்பும்,பஸ் நிறுத்தம்!

அரிக்கேன் விளக்கில்
அறிவை விளக்கும்
சிறியோர் கத்திச்
சிணுங்கிடும் மந்திரம்!

வெந்திடும் சோற்றுடன்
வேகும் விழியுடன்
வந்திடாக் கணவர்
வழிபார்க்கும் வனிதைகள்!

சிந்திடா வேர்வை
சிந்திட வேண்டி
சிரத்தையாய் நடக்கும்
சிந்தனை விரும்பிகள் !

கண்டு புல் மேயக்
கழட்டியே விடினும்
வந்துபால் கொடுக்கும்
ஆவின வரிசைகள்!
நொந்தகால் பசுக்கள் !

எந்தவோர் நாடும்
ஏவிடாப் படையாய்
சிந்திசை பாடி
வந்திடும் கொசுக்கள்!

விளக்குவைத் ததுமே
வேடிக்கைப் பெட்டிகள்!
வீட்டினுள் கூட்டும்
விசும்பலும் அலறலும்

தொடர்ந்தெந்த அவலம்
எங்கு நிகழுமோ
என்றே தயங்கி
எழும்பிடும் நிலவு!

சந்து மறைவினில்
சாய்த்த படகினில்
வந்த காதலை
வாய்வழி கண்வழி
சிந்திக் களிக்கும்
சிட்டுகள் காலைத்
தொட்டுத் தழுவும்
தொடரலை முழக்கம்!

வெந்த என் மனத்தின்
வேதனை பார்த்துக்
கண்களைச் சிமிட்டும்
விண்மீன் கூட்டம்!

இடையிடை தோன்றி
எங்கோ மறையும்எம்
வேட்பா ளர்போல்
வந்து போம்மின்னல்!
வலுவிலாத் தென்றல்!

இத்தனை யும்என்
புத்தியில் தட்டும்
புதுப்புதுக் கவிதைபோல்
பொங்குகா விரிபோல்!
-௦-
[திரு ரமேஷாலம் அவர்களின் "காணக் கிடைத்தவை" என்ற கவிதையைப் படித்தபொழுது தோன்றியது..]

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (5-Jul-12, 10:22 am)
பார்வை : 225

மேலே