துயரம் துரத்தும் தமிழனே!

துயரம் துரத்தும்
என் தமிழ்த் தோழனே!

தூரதேசம் சென்றேனும்
வாழ்க்கையின் துயரம்
துடைக்க நினைத்துவிட்டு
இறுதியில்
வாழ்க்கையை தொலைத்த
வாலிபத் தமிழனே!
உனக்கு என் கண்ணீர் அஞ்சலி!

சேகர்!
நீ
திரைகடல் ஓடித்
திரவியம் தேட நினைத்த
உழைப்பின் உதாரணமே!

துபாய் கடற்பரப்பில்
அமெரிக்க துப்பாக்கி
துப்பிய தொட்டக்களிடம்
களப்பலி ஆனவனே!

தமிழச்சி சிந்திய
கடைசி கண்ணீர் சொட்டுக்கு
காரணமானவனே!

இங்கே
காவேரி வற்றியிருக்கலாம்
எங்கள் கண்ணீர் மட்டும்
ஜீவநதி ஆகிவிட்டது.

எத்தனை போர்களங்கள்!
எத்தனை யுத்தங்கள்!
எல்லாம்
எம் அஞ்சாமைக்கு
சான்றாவணங்கள்
என்று இந்த மண்ணில் உண்டு.
என்றாலும்
எல்லாமே வரலாறு.

நிகழ்கால நிம்மதிக்கு
நிகழ்விடம் எங்கே?

இடுக்கியை இழந்துவிட்டு
சேமித்த ஒற்றுமையை
முல்லை பெரியாரில் தேடுகின்றோம்.

தேனாறு இதுவென்று
நம்பி நின்ற
பாலாறு கூட இன்று
பகையாச்சு.

மெல்ல மெல்ல
நெய்யாரும்
கை நழுவி போயாச்சு.

கல்லால் செய்த தீவு
கச்சதீவு கூட இன்று
செத்த எம் மீனவனின்
உடல் உலர்த்தும் இடமாச்சு.

தினந்தோறும் அடிக்கின்ற
கடற்படையின் பட்டியலில்
இப்போது
அமெரிக்காவும் இணைஞ்சாச்சு!

மனு போட்டு! மனு போட்டு!
சிந்திய ரத்தத்தின்
விலை கேட்டோம்.

அறுபட்ட தாலிகளின்
அலறல் மொழி கேட்டோம்.
இது
விடுபட்ட விடுகதை என
சில வேளை
தூங்கும் நம் ராஜாங்கம்.

போதுமடா சாமி
இனியேனும்
புன்னகை தொலைப்பற்கு
என்றேனும்
புது வழி செய்ய வேண்டும்.

கடலுக்குள் தொலைப்பதனால்
மீட்பதற்கு வழி இல்லை
என்று கூட வழி மொழியும்
தேசங்கள் இங்குண்டு.

இதற்கு மேலும்
வலி சுமக்க நமக்குத்தான்
வழி இல்லை- இதை
தேசங்கள் உணரவேண்டும்.

இல்லை என்றால்
நமக்குத்தான்
புது உணர்ச்சி வரவேண்டும்.

எழுதியவர் : மோசே (18-Jul-12, 11:28 pm)
பார்வை : 187

மேலே