கண்ணீர்ப்பால் !
மெல்லமாய் செவிப்புகும்
மெல்லிசைக்கு
மென்மையாய் – என்
கன்ன மேடையில் – சில
கண்ணீர்த்துளிகளின் நர்த்தனம் !
அத்தனையும் - என்
காதலுக்கு சமர்ப்பணம் !
இதழ்களில் மென்மையாய்
புன்னகையின் பிரசவம் !
இதயத்தில் வன்மையாய்
பிரசவவலியின் பிரவேசம் !
காதல் பழுதாகிப்போனது
காலம் செய்த கோலத்தால் !
நினைவுகள் விழுதாகிப்போனது
காதல் செய்த பாவத்தால் !
கனவுகள் எல்லாம்
கானலாகிப் போனது !
கற்பனைகள் எல்லாம்
காலமாகிப் போனது !
வாழ்க்கை எனக்கு
காணாமல் போனது !
சேர்ந்து நாம் பெற்றிருந்தால்
குழந்தைக்கு
நீ கொடுத்திருப்பாய்
தாய்ப்பால் !
சேரமுடியாமல் நாம் பெற்ற
காதல் குழந்தைக்கு
தினமும் நான் கொடுக்கின்றேன்
கண்ணீர்ப்பால் !