வேகமாய் நகரும் நத்தை.
மனிதர்களை நன்றாகப்
புரிந்துவைத்திருக்கும்
பூச்சிகளைப் பார்க்கையில்..
மயக்கம் வந்துவிடுகிறது ...எனக்கு.
இப்படித்தான்...
கொல்லைப் பக்கத்தில்
ஊர்ந்து கொண்டிருந்த
நத்தையைப் பார்த்தேன்.
ஒரு மணி நேரம் ஊர்ந்து
ஒரு அடி தூரம்தான்
போய் இருந்தது.
பிறகு வெகுநேரம்
கழித்து வந்து
பார்த்த போதும்
ஒரு அரை அடி தூரமே
நகர்ந்திருந்தது.
பாவமாய் போய்விட்டது
எனக்கு.
அதற்காகக் குனிந்து
தரையில் படுத்தபடி...
எங்கே போவதற்காக
இவ்வளவு தூரம் ஊர்கிறாய்?-என்றேன்.
பெரும் கோபத்துடன்...
ஒரு திரவத்தைப் பீய்ச்சியபடி...
"வாழ்க்கையே வெறுத்துப்
போய் விட்டது.
பெண்டாட்டி...பிள்ளைகள்
சரியில்லை...
ஏதாவது ஆசிரமத்தில் தங்கி
வயிற்றைக் கழுவலாம்...
என்று சென்னை செல்கிறேன்"-
என்றது.
இப்படியே ஊர்ந்து...
எப்போது சென்னை போய்ச் சேரும்?
என்று ஒரே கவலையாகி விட்டது
எனக்கு.
அது ஊரும் நேரத்தோடு...
சென்னையின் தூரத்தைக்
கணக்குப் பண்ணி
நான் மலைத்து நிற்கையில்...
என் முகத்தைப் பிராண்டியது..
அது தன் மூக்கால்.
மெதுவாய்க் காதைக் கிட்டே
கொண்டுவரச் சொல்லி
முணுமுணுத்தது அது.
"என் தொப்பிக்குள்
நான் ஊர்ந்து...ஊர்ந்து ...
சேர்த்த பத்து ரூபாய் இருக்கிறது.
எடுத்துக்கொள்.
என்னை ஏதாவது சென்னை செல்லும்..
பஸ்சிலோ..இரயிலிலோ...டாக்சியிலோ...
ஏற்றிவிடேன்! உனக்குப் புண்ணியமாகும்!"
என்றது.
மனிதர்களை நன்றாகப்
புரிந்து வைத்திருக்கும்...
இந்தப் பூச்சிகளைப் பார்க்கையில்..
மயக்கம் வந்து விடுகிறது...
எனக்கு.