விதவை மறுமணம் – சமுதாயம் முன்வர வேண்டும்

மனைவி இறக்க நேரிட்டால், இறந்த சில மாதங்களில் பெரும்பாலான கணவன்கள் மறுமணம் செய்து கொள்வதுண்டு. கணவன் இறந்தால் இளம் வயதுடைய பெண்கள் மறுமணம் செய்து கொள்வதைச் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை. இதைச் சாடி,

”மனைவி இறந்தபின் வயதான தாத்தாவும்
மறுமணம் பண்ணிக்கிட உரிமையுண்டு – இளம்
மங்கையை முடிப்பதுண்டு, மண்டைவரண்டு – தன்
கணவனை இழந்தவள் கட்டழகியானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமை உண்டு – இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு
கற்பின் பலமென்றும் கண்ணகி குலமென்றும்
கச்சிதமாத் திட்டுவாங்க – அதை
அச்சடிச்சும் காட்டுவாங்க – சொன்ன
கருத்துக்கு மாறாகக் கற்பைக் களவாடக்
கன்னக் கோலைத் தீட்டுவாங்க”

என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

இதே கருத்தை திரு.காளியப்பன் எசேக்கியல் அவர்களும் 13.07.2012 அன்று ’எழுத்து’ வலைத்தளத்தில், தனது ’யார் இவர்கள்..(2)’ என்ற கவிதையில்,

”சதி இன்றும் வாழ்கிறது! தனிமைத் தீயில்
சாத்திவைத்துக் கொல்கிறது! விதவை என்னும்
விதியின்றும் இருக்கிறது! வெளியில் செல்ல
விடாததுவாய் வெளுக்கிறது! வேத னையாம்
பொதியின்னும் இருக்கிறது பெண்கள் நெஞ்சில்!
புழுங்கியவர் சாகவிடும் சமூகம் யாரோ?”

என்று சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.

மனைவியை இழந்த கணவர்களும், அவர்கள் வயது நாற்பது, ஐம்பது என்றாலும் இரண்டாம், மூன்றாம் தாரமாக வருபவர்கள் 20, 25 வயதுக்குள் இருக்கும்படி இளம் பெண்களாகத் தேடிக் கொள்கிறார்கள். பெண்கள் எவ்வளவு இளமையானவர்களாக இருந்தாலும் கணவனை இழந்தால், கற்பென்று சொல்லி விதவையாகவே வாழவேண்டிய கொடுமைதான் வழக்கில் இருக்கிறது.

தனது ’கரித்துண்டு’ எனும் புதினத்தில், ‘ஒருவனை விட்டு, இன்னொருவனுடன் வாழும்படியாக நேரும். ஒருவனை விடாமல் இன்னொருவனுடன் வாழ்வதுதான் தவறு. எப்போது எவனுடன் வாழ்கிறாளோ, அவனுக்குத் துரோகம் செய்யாமல் இருந்தால் போதும். அதுதான் கற்பு. நம் நாட்டில் ஆண்களைப் பொறுத்தவரை இதை ஒத்துக் கொள்கிறார்கள். பெண்களைப் பற்றி மட்டும் உடன்படுவதில்லை’ என்று பேராசிரியர் மு.வரதராசனார் கற்பைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறார்.

குறிப்பாக முற்காலத்தில் பால்யத்தில் திருமணம் நடந்து, பெண்குழந்தை பூப்படைவதற்கு முன்பே, கணவன் இறந்துவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு. அத்தருணங்களில் அக்குழந்தைகளுக்கு மொட்டையடித்து காவியுடுத்தி விதவையாக, சகுனக் குறைவென்று சொல்லி அவர்கள் சுதந்திரமாகச் செயல்படத் தடை விதித்து விடுவார்கள். அவ்ர்கள் விரக தாபத்துடன், தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வாழப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டிய சூழ்நிலை.

ஆனால் இன்று காலம் மாறிக் கொண்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், நான் அறிந்த குடும்பத்தில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அந்த மண மாப்பிள்ளை திருமணம் ஆன சில மாதங்களில் எதிர்பாராத நெருப்பு விபத்தில் இறக்க நேரிட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட குடும்பத்தினர், மணமகனின் தம்பியையும், அந்தப் பெண்ணையும் சமாதானப் படுத்தி மறுமணம் செய்து வைத்தனர். இன்று மகிழ்வுடன் இனிய குடும்பம் அமைந்து இன்புற்று வாழ்கின்றனர்.

எனவே, வளர்ந்து வரும் நாகரீக காலத்தில், பழைய கட்டுப்பெட்டி நடைமுறையை விடுத்து, மனதோடு இளம் விதவைகளுக்கு மறுமணம் செய்வித்து நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர சமுதாயமும், உறவுகளும் முன்வர வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jul-12, 10:26 pm)
பார்வை : 1075

சிறந்த கட்டுரைகள்

மேலே