காதல்
காதல்..
ஒட்டுமொத்த உணர்வுகளையும்
உறையச் செய்துவிட்டு
ஒற்றைக்கால் மெழுகாய்
உருகிக் கொண்டிருக்கும்.
வார்த்தையில் வடிக்க எண்ணிக்
காத்திருக்கும் போதெல்லாம்
மொழியின் ஆளுமை
விழிபிதுங்கி நிற்கும்..
கைகொடுத்துத் தூக்கிவிட
எத்தனிக்கும் போதெல்லாம்
காற்றுக்கேது கால்களென
கடத்திக்கொண்டு போகும்..
எட்டும் தொலைவினில்
எழிலாய்ச் சிரிக்கும்
பற்ற எண்ணினால்
பட்டாம்பூச்சி ஆகும்..
உதடுகளின் உச்சரிப்பை
உதாசீனப் படுத்திவிட்டுக்
கண்களுக்குள்ளே சென்று
களவாடிப் போகும்..
ஓடிஒளிந்து போய்
மறைவாய் நின்றாலும்
சரிதான் வாவெனச்
சடைபிடித்து இழுக்கும்.
இதழ்களின் வழியே
இதயத்தை உறிஞ்சும்
இமைகள் சொருகி
இமையத்தைக் காணும்
அதட்டும் வேளையில்
அடங்கிப் போகும்
அப்புறமாய் வந்து
அழுகையை வார்க்கும்
கிடைப்பதை எல்லாம்
ஏற்க மறுக்கும்
கொடுக்க வேண்டியே
குறைபட்டுக் கொள்ளும்
விட்டுக் கொடுக்கும்
தட்டிக் கேட்கும்
எட்டி உதைக்கும் – பின்
கட்டி அணைக்கும்.
வளர்பிறை நிலவாய்
வளர்ந்துவரும் காதல்
வசப்படும் போது
வாழ்க்கை சுவைக்கும்…!