2.ஆதலினால் காதலித்தேன்..! –பொள்ளாச்சி அபி.!

ஐந்து வீதிகள் மட்டுமே கொண்டது அந்த சிறிய ஊர்.நாகரீகத்தின் அதிகபட்ச அடையாளங்களோடும், கிராமப்புறத்தின் மிச்சங்களோடும் அதிசயக் கலவையாகத்தான் அந்த ஊர் இருந்தது.
அதில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் என்னைச் சேர்ப்பதற்காக சென்ற போது,வயதுக்கான சான்றிதழ்கள் கேட்கப்படவில்லை.
அங்கு இருந்த தலைமை ஆசிரியை ‘தம்பி உன் பேரென்னப்பா..?’
‘அடிமைப்பெண் டபுள் எம்ஜிஆர்’என்று நான் சொன்னபோது,அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள்.அவ்வளவு நகைச்சுவையாக நான் என்ன சொல்லிவிட்டேன் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. “உறவினர்களிடம் இதுவரை அப்படி நீ சொல்லித்திரிந்தது தவறில்லை.இனி பள்ளிக்கு வந்துவிட்டால் உனது பெற்றோர் வைத்த பெயரைத்தான் இனிமேல் சொல்ல வேண்டும் தெரிந்ததா..?” அந்த ஆசிரியை அன்போடு சொன்னபோது எனக்குப் புரிந்தது.நாம், நமதுவீடு என்ற வட்டத்தைவிட்டு வேறொரு புதிய உலகத்திற்குள் செல்கிறோம் என்றும்,அங்கும் அம்மாவைப் போலவே ஆசிரியைகள் இருப்பார்கள் என்பதும்.!

அதைவிட முக்கியமான விஷயம்.நான் எனது பெயரைச் சொன்னபோது சிரித்த பெரியவர்களைக் கூட மன்னித்துவிட்டேன்.ஆனால் அங்கு எங்களைப்போலவே புதிதாக பள்ளியில் இணைவதற்காக வந்திருந்த அந்தக்குட்டிப் பெண்ணும் அவர்களோடு சேர்ந்து சிரித்தது ஏனோ எனக்கு சுத்தமாகப் பிடிக்கவேயில்லை.அவளை குரோதத்துடன் பார்த்தபோது அவள் மிரண்டது நன்கு தெரிந்தது. அந்தப்பார்வையில் தெரிந்த மிரட்சி என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது.திடீரென்று நான் நம்பியாராகிவிட்டது போலவும் எனக்குத் தோன்றியது.ஆனால் அதுவரை நான் பார்த்திருந்த நம்பியார் மிகவும் கெட்டவர்.ஆனால் எம்ஜிஆர் நல்லவர்.ஊகூம் நான் நம்பியாராக மாட்டேன் என்று எனக்குள் தோன்றிய மாத்திரத்தில் எனது முகத்தின் உக்கிரம் குறைந்திருக்கவேண்டும்.அவள் முகத்திலும் மிரட்சி சற்றுக் குறைந்திருந்தது.ஆனாலும் அவள் சிரித்தது எனக்குப் பிடிக்கவில்லையாதலால் அவள்மீது மனதுக்குள் படிந்த வன்மம் மட்டும் அப்படியே இருந்தது.
பின்னர் நான் எனது வகுப்புக்கு அனுப்பப்பட்டேன்..அவள் வேறு வகுப்பு..!

அதற்குப்பிறகு அவளை நான் ஐந்தாவது வகுப்புக்கு சென்றபோதுதான் பார்த்தேன்.எனக்கு முன்பே வந்து அந்த வகுப்பில் அவள் அமர்ந்திருந்தாள்.அவளைப் பார்த்தவுடன் எனது முன்அனுபவம் எனக்கு உடனே நினைவுக்கு வந்தது.இப்போது அவளை அதே குரோதத்துடன் பார்ப்பதா.? இல்லை சினேகத்துடன் சிரிப்பதா.? இருவிநாடிகள் குழப்பத்திற்குப் பிறகு,மெதுவாய்ப் புன்னகைத்தேன்.
இப்போது அவளது முகத்தில் மிரட்சியில்லை. மிகத்தெளிவாக சிரித்தாள்.அந்தச்சிரிப்பில் உன்னை எனக்கு முன்பே தெரியும் என்ற தொனியும் இருந்ததோ..? ஆனால் அவள் சிரிப்பு அழகாய் இருந்தது. “வா இங்கே உட்கார்ந்துக்கோ..” என்று அவளின் இருக்கைக்கு அருகிலேயே அமரச்சொல்லி கைகாட்ட,இப்போது எனக்கு கொஞ்சம் மிரட்சியாக இருந்தது.
ஏனெனில் இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் சிறுமிகளும்,சிறுவர்களும் ஆண் பெண் என வௌ;வேறு பாலினம் என்பதும்,இருவரும்
வௌ;வேறு வகையான உடலமைப்பு கொண்டவர்கள் என்பதும் விளக்கமாக இல்லாவிட்டாலும் அரைகுறையாக ஓரளவு புரிந்திருந்தது.
இந்தப் புரிதல் என்னை அவளிடமிருந்து சற்றே அந்நியப்படுத்தியது.
எனது தயக்கம் அவளுக்கும் எதையாவது உணர்த்தியிருக்க வேண்டும்.அந்த வகுப்பறையை இரண்டாகப் பிரித்தபடி இடப்பட்டிருந்த நீள பெஞ்சுகளில்,வலப்புறம் இருந்த ஒன்றின் இடது முனையில் அமர்ந்திருந்த அவள்,அருகிலிருந்த பெஞ்சில் உட்காரச் சொல்லி கைகாட்டினாள்.அங்கே உட்கார்ந்தால் எனக்கு அருகாமையில் ஆள்நடக்குமளவுக்கு இடைவெளிவிட்டு அவளும் அமரமுடியும்.அந்த இடைவெளி எனக்கு கூச்சம் அளிக்கவில்லை.உடனே உட்கார்ந்து கொண்டுவிட்டேன்.
அதற்குப் பின் மற்றவர்களும் வந்து நிரம்ப,வகுப்பறை துவங்கியது.இடையிடையே அவளை நானும்.நான் அவளையும் எதேச்சையாகவோ,திட்டமிட்டோ எப்படி அது நிகழ்ந்ததென தெரியவில்லை.ஆனால் பார்த்துப் பார்த்து சிரித்துக் கொண்டோம்.
அதற்கு அடுத்து வந்த மூன்று வருடங்களில் மிக நெருக்கமான தோழர்களாகிவிட்டோம்.அவளுக்கு நான் படம் வரைந்து கொடுப்பதும்,எனக்காக அவள் எழுதிக்கொடுப்பதும் மிகச்சாதாரணமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது.
எது வாங்கினாலும் இருவருக்கும் சேர்த்துதான்,எது இருந்தாலும் அது இருவருடையதும்தான் என்றேதான் எல்லாமும் நடந்தது.
முதன்முதலில் அவளைப் பார்த்தபோது குரோதத்துடன் முறைத்ததைத் தவிர,அந்த இரண்டாண்டுகளில் ஒருமுறைகூட அவளைக் கோபித்துக் கொண்டதாகவோ சண்டையிட்டதாகவோ நினைவே இல்லை.
அதற்குப்பிறகுதான் சோதனையாக முழுஆண்டுத் தேர்வு முடிந்து
வந்த விடுமுறை நாட்களில்,அவளின் தாய் தந்தையுடன் ஒருநாள் எனது வீட்டுக்கு வந்தாள். எதிர்பாராதவிதமாக, நெருங்கிய உறவினர்கள் வந்தால் பூரித்துப் போவதைவிடவும் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றேன்.எனது தாயிடமும்,அம்மா இவள் என் கிளாஸ்மேட்,இது அவர்களுடைய பெற்றோர் என அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன்.
பின்னர் அவர்கள் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டு பெரியவிஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
ஏய்..என்ன திடீர்னு..? அம்மா அப்பாவைக் கூப்பிட்டுட்டு வீட்டுக்கே வந்துட்டே.? அவள் முகம் ஏனோ சரியாக இல்லை.இங்கு வருவதற்கு முன் அழுதிருப்பாள் போலும். “நாங்க ஊருக்கே போறோம்.அப்பாவுக்கு அங்கே வேலை மாறிடுச்சாம்.இனிமேல் நான் இந்த ஸ்கூலுக்கு வரமாட்டேன்” அவள் நிதானமாக சொல்லிமுடிக்க,எனக்கு வரிசையாக தலையில் இடிகளை அவள் இறக்குவதாகவே உணர்ந்தேன்.எனக்கு பதட்டம் கூடிக்கொண்டது.ஏன்..ஏன்.? அவள் காரணத்தைச் சொல்லியபின்பும் நான் பிதற்றியதுபோல இருந்தது.
அவளுடைய அம்மா,என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “உங்க பையன்கிட்டே சொல்லிட்டுத்தான் போகணும்னு நேத்திலேருந்து ஒரே ரகளை.அதான் இன்னைக்கு கூட்டீட்டுவந்தேன்” அவளின் அந்த அன்பு எனக்குள் இனம்புரியாத நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அவர்கள் விடைபெறும் நேரமும் வந்தது.தனது அப்பா வைத்திருந்த பைக்குள் கையை விட்டு,கிப்ட் பேப்பர் சுற்றப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை என்கையை உயர்த்திப் பிடித்து அதில் வைத்தாள்.அதுதான் முதல் முறையாக அவள் தானாய் எனக்குத் தெரிந்து என்கையைத் தொட்டதும்,அதை நான் உணர்ந்ததும்.அப்போது அந்த அறையிலிருந்த அனைவருக்கும் இடையே சில விநாடிகள் கனத்த மௌனம் நிலவியது.

பதிலுக்கு அவளுக்கு நான் எதையாவது கொடுக்கவேண்டும் என்று மனது பரபரத்தது.எதைக் கொடுப்பது என சட்டென்று எனக்கு எதுவும் தோன்றவில்லை.இயலாமையோடு என் அம்மாவைப் பார்க்க அவர் புரிந்து கொண்டாரோ என்னவோ,விரைந்து சென்று புதிய பத்து ரூபாய்த்தாள்களை எடுத்துவந்து என்னிடம் கொடுத்து அவளிடம் கொடுக்கச் சொன்னார். இயலாதநிலையென்று,குழந்தைகள் எப்போது தவித்தாலும் உடனடி உதவியாக நீளும்கரங்கள் முதலில் அவர்களுடையதாகத்தானே இருக்கும்.தாய்மையின் சிறப்பே அதுதானே.!
“அய்யோ பரவாயில்லை.அதனால என்ன.?” என்று அவளின் அம்மா சொல்ல,பரவாயில்லை இருக்கட்டும் என்று என் அம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளிடம் அதைக் கொடுத்தேன்.உனக்குப் பிடிச்சதா ஏதாவது வாங்கிக்கோ..!

பின்னர் அவர்கள் விடைபெற்று,அவர்கள் வந்த ஆட்டோவிலேயே திரும்பினர்.தலையை வெளியே நீட்டி டாட்டா காட்டியபடியே அவள் சென்ற அந்த நொடிகள் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.

அவள் கொடுத்த புத்தகமும்,அவளைக் குறித்த நினைவுகளும் எனக்கு மறக்கவில்லை.ஆண்டுகள் சில கழிந்தன.அவளுடைய நினைவுகள் எனக்குள் மாறாமல் புதுப்புது உணர்வுகளை பின்னாளில் ஏற்படுத்தியது.அதற்குப்பிறகு அவளை நான் இதுவரை நேரில் பார்க்கவில்லை.முதன் முதலாக,பரிசாக புத்தகங்களையும் கொடுக்கலாம் என்றும்,அதன்மூலம் புத்தகங்களின் மீதான காதலையும், அவள்தான் எனக்கு அறிமுகப்படுத்தினாள்.
ஆதலினால் நான் காதலித்தேன் அவளை...!.இப்போதும் காதலிக்கிறேன்.!
அவள் பெயர் வளர்மதி.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி.B +ve (14-Aug-12, 10:49 am)
பார்வை : 281

மேலே