ஆனந்தக் கண்ணீர் !

விழிகளில் பொழிவது மழையோ - விரிகடல்
கொழியலை மருவியுள் வருதோ - சுழல்புவி
ஒளிகொள விரைந்திடு வழியோ - தவறிடக்
களியுடை சுகயுகம் புகுதோ - சிறுமனம்

அழகிய நடமிடும் மயிலோ - அநுபவம்
குளமதில் எழுஞ்சிறு அலையோ - அதிலுளம்
விழி கயல் எனத்துடி கொளுதோ - இனிமையின்
வழியிடை எனைவரச் செயுதோ - புகழ்மலர்

கொழுவிய பெருந்தொடை இதுவோ - மணந்தரு
செழுமையிற் கிறங்குது மனமோ - குளிரிட
விழுவது எதுநிகர் பனியோ - சொரிகிற
பொழுதினில் பெரிதெனும் முகிலோ - விலகிட

எழுவது விடியலின் ஒளியோ - குளிர்விடத்
தழுவுது சுடுமிளங் கதிரோ - உடனணைந்
துளமதைத் தென்றலும் தொடுதோ- சிலையெனப்
பொழிவது எனைநினை வுளியோ - அடஅட

தெளிவது கயல்புகு புனலோ - புதுமையென்
றொளிதரு பளிங்கெனும் உருவோ - இனிமையைப்
பொழிந்திட வருமிசை நெகிழ்வோ - அதைவிடப்
பிழிந்திடுங் கனிரசம் இனிதோ - மகிழ்வினை

மொழிந்திடத் தமிழ்தனி அறியேன் - ஒருபதம்,
களிகொளும் உணர்விது பெரிதே - அதனிடை
பொழிபுகழ் மதுரச மழையே - இதைவிட
அளியுயர் பதவியொன் றிலையே !

எழுதியவர் : கிரிகாசன் (18-Aug-12, 2:06 am)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 147

புதிய படைப்புகள்

மேலே