நண்பா ஒனக்கு நெனவிருக்கா ?

----- நண்பா ஒனக்கு நெனவிருக்கா ? ------

நெடுஞ்சாலையில
நொறுங்கி கிடந்த
கண்ணாடி சில்லு பொருக்கி
வயிர வியாபாரம் செஞ்சு
வட்டமிட்டு திரிஞ்ச
வயசுனக்கு நெனவிருக்கா ?

கருப்பானசாமி அரிவாளெடுத்து
கருவேல மர கொப்புடச்சு
செதுக்கி, கூர்தீட்டி
நேர்கோடாக கட்டாந்தரையில
குழி கிழிச்சு
கிட்டி - யாடியது ஒனக்கு நெனவிருக்கா ?

வாடகைக்கு ஒரு சைக்கிளெடுத்து
மிதிகட்டைய ஒன்னா
சேந்து மிதிச்சு
மீன் பிடிக்க போன
மேட்டு கண்மாய் ஒனக்கு நெனவிருக்கா ?

மின்சாரம் இல்லா இருட்டுல
பெண்களோடு தெருல
ஒளிஞ்சுபிடிச்சு வெளயாடியது
ஒன்னாவது ஒனக்கு நெனவிருக்கா ?

கையில கடிகரம் ரயிலுன்னு
சின்னதா கட்டிவிட்ட
ஜவ்வு மிட்டாய் தாத்தாவையும்
சிஞ்சா தட்டும் பொம்மையையும்
கொஞ்சமாவதுனக்கு நெனவிருக்கா ?

அழகா விழுதுல ஊஞ்சலாடி
அமெரிக்கா போய்வந்த
ஆலமரமுனக்கு நெனவிருக்கா ?

நாமளும் செத்து தொலையத்தான்
பொறந்தோமுன்னு தெரியாம
நல்லகண்ணு சாவு ஊர்வலத்தில்
தப்பு இசைக்கு
தப்பு தப்பா ஆடுனது
அய்யோ ஒனக்கு நெனவிருக்கா ?

பொக்கைவாய் பெருசுக
பொழுதுக்கும் சிரிக்கும்
அர்த்தம் புரியாம
கரகாட்டம் வேணாமுன்னு
ராட்டினம் ஏறி சுத்துன
ராத்திரி ஒனக்கு நெனவிருக்கா ?

முருகன் மொக்க போடுவாருன்னு
பப்பூன் கேலி முடிஞ்சதும்
வீட்டுக்கு வெரசா போலாமுன்னு
வீதியில ஒக்காந்து
வள்ளி திருமண நாடகம்
பார்த்ததுனக்கு நெனவிருக்கா ?

ஊருக்குள்ள நாய்க்குட்டி ஏதும்
உலவுறது கண்டாக்க
பொத்துனாப்புல தூக்கியாந்து
பொட்டகாட்டுக்குள்ள
பெத்தவனாட்டம்
நாய் வளர்த்த கத
நண்பா ஒனக்கு நெனவிருக்கா ?

ஆடு அறுக்கயில
அலறும் சத்தங்கேட்டு
யாருந்தெரியாம
கசாப்பு கடைக்காரர் கத்திய
களவாடி வந்தது
அய்யா ஒனக்கு நெனவிருக்கா ?

காக்கா தூக்கிப் போன
கலர் கோழிக்குஞ்சு
காணோமுன்னு
கதவு சாத்தி அழுத
காலமுனக்கு நெனவிருக்கா ?

வட்ட தேன்மிட்டாயில
ஓட்ட போட்டு
தேனுறுஞ்சி,
கருத்த புளிப்புமிட்டாய
அப்படியே மென்னு தின்னு
கவரு துப்பி
பள்ளிக்கு போன
பருவமுனக்கு நெனவிருக்கா ?

சேமிய ஐஸ் வாங்கி
டம்ளருல ஊற வச்சு
உருக வச்சு
பாயசமா குடிச்ச
பால் ஐஸ் ஒனக்கு நெனவிருக்கா ?

வெள்ளனே எந்திருச்சு
வெள்ளத்தாயி கடயில
குண்டு குண்டு பணியாரம்
ரெண்டு ரெண்டு
வாங்கி தின்னதுனக்கு நெனவிருக்கா ?

கொடிக்கா பறிக்க போனாக்க
சுருட்டு பிடிச்சுகிட்டே
வெரட்டிவிடும் கெழட்டு
சுந்தரிய ஒனக்கு நெனவிருக்கா ?

புளியமரத்துல நீயும்
பொங்க மரத்துல நானும்
தூரி கட்டியடி
பொத்துன தரையில விழ,
கத்துன சத்தம்
காது கிழுச்சதே
கண்ணா ஒனக்கு நெனவிருக்கா ?

காணவரும் கூட்டத்துக்கு தெரியாம
ஆன வரும் நாளெல்லாம்
புறவாசல் பக்கம
பூன போல
ஓடி ஒளிஞ்சது
ஒனக்கு நெனவிருக்கா ?

வாய்க்க ஓடையில
நண்டு பிடிச்சு
கால ஒடச்சு
நடக்க விட்ட
இரக்கமற்ற அந்த நாள்
இன்னும் ஒனக்கு நெனவிருக்கா ?

எட்டு செங்கல் எடுத்து வந்து
நட்டு வச்சு சுவரெழுப்பி
அட்டையில மேல் தளம் அமச்சு
கோவில் கட்டி கும்பிட்டு
கொத்தனாரான
கோலமுனக்கு நெனவிருக்கா ?

அரஞான் கயிறுல
அர டவுசர் இழுத்து சுருட்டி
அர கம்புல டயரு
அடிச்சு ஒட்டி
அலஞ்சு திருஞ்சதுனக்கு நெனவிருக்கா ?

நேதாஜி, பகத்சிங் கத படிச்சு
நேர ராணுவத்துல போய் சேர
நேந்துகிட்ட நேரமுனக்கு நெனவிருக்கா ?

கம்மர்கட்டு, சீட
இடவேளைக்கு
இஞ்சிமரப்ப வாங்கி
கரும்பு கடிச்சிழுத்து
சினிமா பார்த்த
சின்ன வயசுனக்கு நெனவிருக்கா ?

வீட்டு பாடம் செய்யாம
கக்கத்துல வெங்காயம் ஒளிச்சு
காச்சல வரவழச்சு
பள்ளிக்கு விடுப்பெடுத்த
பைத்தியமுனக்கு நெனவிருக்கா ?

பால்வாடி ஆயா,
பள்ளி சத்துணவு,
பம்பரம் சுத்துனது,
பட்டம் விட்டது,
தட்டான் பிடிச்சது,
கவட்டை அடுச்சது,
அம்மங்கோயில் கூழ் குடிச்சது,
அடிகொழாயில தண்ணி அடிச்சது
அத்தனையும் ஒனக்கு
அய்யா நெனவிருக்கா?

உங்காத்தா எழவுக்கு வந்தவுக
மங்காத்தா சீட்டாடி
மறுநாள் கலஞ்சு போனாக........
அம்மா படுத்த தடத்துல
அறியாம நான் படுக்க...
அப்படியே நீயென்ன
கட்டி அரவணைக்க
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு
கண்ணுறங்கிய
கணமுனக்கு நெனவிருக்கா ?


---- தமிழ்தாசன் ----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (24-Sep-12, 8:52 pm)
பார்வை : 228

மேலே