கொடிவிற்கும் சிறுபெண்ணின் உள்ளக்குமுறல்

கொடிவிற்கும் சிறுபெண்ணின் உள்ளக்குமுறல்

[நேரிசை வெண்பா]

அண்ணா ஹசாரேயாம், எங்கேயோ தில்லியில்
உண்ணா விரதமாய் உள்ளாராம் - கண்ணாநான்
கெஞ்சுகிறேன் கார்முகிலா, இக்கொடியை விற்றாலே
கஞ்சி கிடைக்கு மெனக்கு

எனக்கென ஏதுமில்லை, என்னிடத்தில் என்தாய்
உனக்கென ஓர்பையனுண் டென்றாள் – மனமே
மடிநிறைய முத்துமணி மாணிக்கம் வேண்டாம்
கொடிநிறைய விற்றாலே போது(ம்)

போதுமென்ற உள்ளமே போதுமென்றார் சான்றோரே
ஏதுமில்லா எங்களுக்கு என்னபதில் – ஓதுவார்?
நால்வீதி யில்நின்றே நான்கொடியை விற்பதோ
மேல்மேல் இடர்வந்த தால்

வந்திடும் (மகிழ்)வுந்தை வழிமறித்து கெஞ்சியேநான்
தந்திடுக தாய்க்கொடிக் கென்றுரைக்க — கந்தையே
முந்திநட வென்றுரைத்தே முந்திடுவர் வேகமாய்
பந்தியில் முந்திவுண்ப தற்கு!

உண்பதற்கோ ஏதுமில்லை, உற்றார் உறவுதொல்லை
திண்ணையிலே வர்க்கியுடன் தண்ணீர்தான்! — பண்புடையீர்
நானுமோர் இந்நாட்டின் நற்குடியே ஆனாலும்
ஏனிந்த ஏதமிகும் பேறு?

[சுதந்திர தினம், குடியரசு தினம் - இவ்விரண்டு நாட்களுக்கு முன்தினம் அங்காங்கே தெருமுனைகளில் தேசியக்கொடி விற்பவர்கள் புற்றீசல் போல் முளைப்பார்கள். மாறாக, அண்ணா ஹசாரே முதன்முதலில் தில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோதும் தேசியக்கொடியின் விற்பனை பெருநகரங்களில் அதிகமாக நடந்தது. அச்சமயம், முகநூலில் மேற்கண்ட கொடிவிற்கும் பெண்ணின் படம் வெளிவந்தது. அதை உற்று நோக்கும் போது அவளின் முகத்தில் ஒரு சோகம் குடிகொண்டுள்ளதை உணரமுடிந்தது. அதையொட்டி எழுதியதே இந்த வெண்பாக்கள். முகநூலுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக]

— Dr. சுந்தரராஜ் தயாளன்

எழுதியவர் : Dr. சுந்தரராஜ் தயாளன் (6-Oct-12, 11:00 am)
பார்வை : 148

மேலே