இன்று நான் நாளை நீ
ஓங்கி வளந்த பனமரம் ஒன்னு,
பட்டு போயி படுத்துடுச்சி.
உசுரு மெல்ல கசிஞ்சிடுச்சு.
உடல விட்டு ஒதிங்கிடுச்சு.
திரும்பி வர வழியுமில்ல,
திருத்தஞ்செய்ய விதியுமில்ல.
வாழும்மட்டும் வாழவில்ல.
வாழ்ந்தபின்னே சாவயில,
நாலுமட்டும் அழுவுதம்மா - அது
சாவு செஞ்ச புண்ணியந்தா!
வாய்கா தண்ணி வத்திப்போச்சு!
தொண்ட தண்ணி காஞ்சிபோச்சு!
காபி தண்ணி எறங்கவில்ல,
காஞ்ச வயிறு எரியுதம்மா!
தென்னம்புள்ள கண்ணீர் சிந்தி,
தேங்கா தண்ணி கரிக்குதம்மா!
வானம் மூடி இருட்டிபோச்சு!
வான வெடி இடியாபோச்சு!
மேளதாளம் மேகம் போட,
அழுதழுதே மழையா போச்சு!
நேந்து உட்ட ஆடு எப்போ,
ஊர விட்டு ஓடி போச்சு.
பாட இப்போ எடுக்கையில,
நாலும் ஒன்னும் அஞ்சாபோச்சு.
ஆடுக்குள்ள வெசனம் கூட,
ஆளுகளுக்கு ஒண்ணுமில்ல.
சாவு வந்த சனங்களெல்லாம்,
சாதனங்க பேசவில்ல.
சாட மாட பேசுதம்மா,
காரணங்கள் சொல்லுதம்மா.
நாளெல்லாம் வாளப்போல,
நித்தம் நித்தம் அறுக்குதம்மா!
இந்த நிலையாம புரியாம,
நெகால்லாம வாழுதம்மா.
ஏத்தங்கொண்டு வாழுதம்மா!
பூமியெல்லாம் பாரமம்மா!
ஏழு கழுத வயசாயும்,
எழவெடுத்து போன பின்னும்,
எழவெடுத்த மனுசனுள்ள,
சாவுபயம் ஏறலயே!
வெசனம் - சோகம், வருத்தம்
நெகால்லாம - நிலை புரியாமல்
ஏத்தங்கொண்டு - பெருமிதம் கொண்டு