வறுமையில் செய்த தவறு!

நௌஷேர்வான் சக்கரவர்த்தி வசந்த விருந்து கொடுத்தார். அப்போது விருந்தினருள் இருந்த அவருடைய ஏழை உறவினன் ஒருவன் ஒரு தங்கக் கோப்பையை எடுத்துத் தன் சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டான்.

அதைச் சக்கரவர்த்தி கண்டும் காணாதவர்போல் இருந்து விட்டார்.

விருந்து முடிந்து யாவரும் கலையும் சமயம், வேலைக்காரன் ஒருவன் ஒரு தங்கக் கோப்பையைக் காணோமென்றும், யாவரையும் சோதனையிட வேண்டுமென்றும் கூறினான். ”அதனால் பாதகமில்லை, எடுத்தவன் தரமாட்டான், கண்டவன் சொல்லமாட்டான்” என்று கூறிவிட்டார் சக்ரவர்த்தி.

சில நாட்களுக்குப் பிறகு தங்கக் கோப்பைத் திருடியவன் உயர்ந்த உடையோடு வந்தான். அவன் உடையைச் சக்ரவர்த்தி நோக்கிய மாதிரியில், ”இதை எப்படி வாங்கினாய் என்பது எனக்குத் தெரியும்” என்று சொல்வது போலிருந்தது.

அவனும் அதற்கேற்பத் தன் புதிய காலணிகளையும் அவர் கண்களில் படுமாறு செய்து, ”இதுவும் கூடத்தான்” என்று கூறும் தோரணையில் அவரை நோக்கினான். அவன் கோப்பையைத் திருடியதற்கு வறுமையே காரணம் என்பதுணர்ந்த சக்ரவர்த்தி அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.

உன் குற்றம் கருணையுள்ள அரசனுக்குத் தெரியுமாயின் அதை மன்னிக்குமாறு வேண்டு. அதைச் செய்யவில்லை என்று சாதிக்காதே! அப்படிப் பொய் புகன்றால் உன் முதல் குற்றத்தை விடப் பெரியதொரு குற்றத்தைச் செய்தவனாகிறாய் என்பது போலிருந்தது அவனுக்கு.

எழுதியவர் : Rupa (26-Oct-12, 4:02 pm)
சேர்த்தது : dine
பார்வை : 271

மேலே