நுண்ணறிவு

ஒருமுகப் படுத்தலும் உண்மையும் நேர்மையும்
ஒல்காப் புகழாம் தொண்டுமனப் பான்மையும்
பெருநிதி இவற்றைப் போற்றி வளர்ப்பாய்
பெருஞ்சின, காம, மயக்கமோ, டச்சம்
ஒருபோது முன்னை அண்டா தொழிப்பாய்
உலரா நெஞ்சனாய் விட்டுக் கொடுப்பாய்
பெறுதல் வேண்டிடில் கொடுப்பது வேண்டும்
பிறர்கெட எண்ணுதல் தான்கெட முதற்படி
ஆழ்மன நுழைபுலன் அறிந்துகொள் வாயே
ஆனந்த கடலுள் மூழ்கிஎழு வாயே
ஊழ்என்ற ஒன்றையும் வெல்லலாம் தம்பி
உறுதி, முயற்சி, ஊக்க, ஒழுக்கால்
பாழ்மன மாயையை அருளால் விரட்டு
பற்றிக்கொள் சீவ தயவினை என்றும்
கேள்எச் செயலிலும் தூய்மையைக் காட்டு
கிணற்று நீர்போல் அமைதியைக் கூட்டு
நாளை என்பதை ஒதுக்கிப்போ டாதே
நல்லோர் இணக்கத்தை நாளும்வி டாதே
வேளை என்பதோ உழைப்பிற்கு இல்லை
வெந்துயர் சோம்பலோ உழைப்பிற்கு தொல்லை
மேலை வாசலாம் மூச்சுப் பயிற்சியை
மேனியைக் காக்க முறையாய்ப் பயில்வாய்
பாலை நிகர்த்த எண்ணம் சமைப்பாய்
பற்பல கலையும் கற்றுத் திளைப்பாய்
கூடி வாழ்ந்திடும் தேனீ, எறும்புகள்
கூர்ந்து கவனி சிந்தையில் பதிப்பாய்
கோடி இன்னல்கள் வந்தடைந் தாலும்நீ
கோபக் கனலை அழித்தே கிடப்பாய்
நாடியே படிப்பாய் சான்றோர் நூற்களை
நல்விருந்தா மதை அனைவருக்கும் கொடுப்பாய்
வாடிய பயிர்போல் இல்லாது உன்னை
வளர்த்த பெற்றோரைப் போற்றிப் புகழ்வாய்
மூளையைத் திறப்பது இலக்கியச் சாவி
முழுதும் கற்றாலோ நீமே தாவி
தோளை நிமிர்த்தி வீறுகொண் டெழுவாய்
தொடர்பணி செய்தே வறுமையை யோட்டுவாய்
ஏழைக்கே என்றும் இரங்கிக் கிடப்பாய்
எளிமையில் செம்மையை புகுத்தியே வைப்பாய்
ஊழியாய் வந்த உய்விக்கும் தமிழை
உயிரென உணர்வில் ஊறிடச் செய்வாய்